Loading

"கொன்றாலும் இனிமேல் இங்கிருந்து நாங்கள் போகமாட்டோம்" ராஜபக்‌ஷ பறித்த பாணம காணிகள் ரணில் - மைத்திரி கைகளில்...

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பாணம பகுதியில் விசேட அதிரடிப் படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மட்டுமே இருந்தன. சுற்றிவர விடுதலைப் புலிகளின் முகாம்கள் இருந்தபோதிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவர்களால் பாணம மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை. போரின் விளைவாக மக்கள் இடம்பெயரவுமில்லை. அதனால், சேனைப் பயிர்ச்சிசெய்கையில் மக்கள் பரவலாக ஈடுபட்டார்கள். கடலுக்கு, களப்புக்குச் சென்று மீன் பிடித்தார்கள். காடுகளுக்குச் சென்று தேன், பழங்கள் எடுத்து வந்து வாழ்க்கையை கொண்டு நடத்தினார்கள். பல ஆண்டுகாலமாக, பல பரம்பரைகளாக நீண்டு வந்த இயற்கையுடனான அவர்களுடைய வாழ்வு ஒரே நாளில் முடிவுக்கு வரும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். இலங்கையில் உள்நாட்டு போர் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும் உண்மையிலேயே அந்தக் காலப்பகுதியில்தான் பாணம பகுதியில் போர் ஆரம்பமாகியது. காடுகளுக்கும் மக்களுக்குமான – கடலுக்கும் மக்களுக்குமான – களப்புக்கும் மக்களுக்குமான தொடர்பை காட்டாட்சி நடத்தியவர்கள் துண்டிக்கத் திட்டமிட்டார்கள்.

காடுகளைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு அதிகாரிகளும் வரத் தொடங்கினார்கள். காடுகள் வீக்கமடைய அதுவரை வாழ்வாதாரத்தில் ஒருபகுதியாக இருந்த அவையும் அவர்களை விட்டுப் பிரிந்தது.

கடல் பக்கமாக சுனாமியை விட மிகப்பெரியதொரு பிரச்சினையை அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. நீர்ச்சறுக்கலுக்கு மிகவும் உகந்த இடமாக பாணம கடல் பகுதி கருதப்பட்டதனாலேயே இந்தப் பிரச்சினையை அவர்கள் எதிர்கொண்டார்கள். இதை வைத்து வியாபாரம் பார்க்க ராஜபக்‌ஷாக்கள் நாவைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலையத் தொடங்கினார்கள். ஆண்டாண்டு காலமாக மக்கள் வாழ்ந்து வந்த நிலப்பகுதியை சுற்றிவளைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்தார்கள்.

நாள் - 2010 ஜூலை 17ஆம் திகதி. இடம் - பாணம ராகம்வெல. நேரம் - நள்ளிரவு 12.00 மணியிருக்கும். கறுப்புத் துணியால் முகத்தை மூடிக்கொண்டு ஆயுதங்கள், பொல்லுகள், கம்பிகளுடன் பாணம ராகம்வெல கிராமத்தினுள் நுழைந்த எஸ்.டி.எவ். குண்டர்கள் அங்கிருந்த மக்களை வயது வித்தியாசம் பார்க்காமல் விரட்டி விரட்டி சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள். அதன் பின்னர் மக்களின் குடில்களுக்கு தீவைத்திருக்கிறார்கள். ராஜபக்‌ஷாக்களின் இராணுவ ஆட்சிக்கு எதிராக எதையும் செய்யமுடியாமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்கள். இந்த அநீதிக்கு எதிராக நீதியை எதிர்பார்த்துச் சென்ற மக்கள் ராஜபக்‌ஷவின் சட்டத்தின் ஆட்சியின் கீழ் கைதுசெய்யப்பட்டார்கள், 4ஆம் மாடிக்கு வரவழைக்கப்பட்டார்கள். அல்லது வழக்குகளுடன் வீடு திரும்பினார்கள்.

“சம்பவ தினம் ராகம்வெல பகுதியில் பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் உகந்தை கோயில் உற்சவத்துக்குப் போயிருந்த நேரம் பாரத்துதான் இந்தக் கொடூரம் அரங்கேற்றப்பட்டது. காலையில் வந்து பார்த்தபோது எங்களை உள் நுழைய விடாமல் தடுத்த பொலிஸார், “இங்கு ஏதோ அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கிறது. விசாரணை நடத்தி முடியும் வரை யாரையும் உள்நுழைய அனுமதிக்க முடியாது” என மறுத்தார்கள். நாங்கள் ஏற்றுக்கொண்டு விலகியிருந்தோம். விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், காணிகள் எங்களுக்குக் கிடைக்கும் என நம்பியிருந்தோம். ஆனால், நாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பதை பிறகே உணர்ந்து கொண்டோம். சில மாதங்கள் செல்ல அந்த நிலப்பகுதியை விமானப் படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தொடர்ந்து கட்டடங்களை நிர்மாணிக்கத் தொடங்கினர். அப்போதுதான் எங்களால் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருந்தது, எங்களை வேண்டுமென்றெ திட்டமிட்டுதான் விரட்டியடித்தார்கள் என்று. எங்களிடம் காணிக்கான அனுமதிப்பத்திரங்கள் இருப்பதால் சட்டரீதியாக காணியைப் பெறமுடியாது என்பதை அறிந்தே இராணுவ குண்டர்களை ஏவி விரட்டியடித்தார்கள்” என்று கூறுகிறார் பாணம நிலத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் புஞ்சிராள சோமசிறி.

தற்போது அம்பாறை லஹுகல பிரதே சபைக்கு உட்பட்ட பாணம ராகம்வெல பகுதியில் 264 ஏக்கர்கள், சாஸ்த்ரவல பகுதியில் 115 ஏக்கர்கள், அரசுக்குச் சொந்தமான 240 ஏக்கர்கள், உல்பஸ்ஸ கினிகொணதிக கடற்படை முகாமுக்கு 800 ஏக்கர்கள் என விமானப்படை – கடற்படை – இராணுவம் மற்றும் எஸ்.டி.எவ்வின் வசமிருக்கிறது.

காணியை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாணம மக்களில் ஏழு பேருக்கு எதிராக பொலிஸாரால் தொடரப்பட்டிருந்த வழக்கில் 2015ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் விமானப் படையினரால் தங்களுக்குச் சொந்தமான நிலப்பகுதி என்பதை நிரூபிக்க முடியவில்லை. விமானப்படையினர் அமைக்கும் கட்டடங்கள் அமைந்திருக்கும் 25 ஏக்கர் நிலப்பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளை மக்களுக்கே வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

“கடந்த வருடம் 26ஆம் திகதி மார்ச் மாதம் மாலை 4 மணியளவில் 35 பேர் இணைந்து ராகம்வெல பாதையருகே அமர்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டோம். யாரும் எங்களைப் பொருட்படுத்தவில்லை. நாங்கள் அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தோம். காணிகளுக்குள் உள்நுழைய விடாமல் பொலிஸார், என்.ஐ.பியினர் பாதுப்பில் ஈடுபட்டிருந்தனர். 27ஆம் திகதி பகல், பலவந்தமாக எமது காணிகளுக்குள் நுழைந்தோம். பொலிஸார், விமானப் படையினர் எங்களை வெளியேற்ற முயற்சி செய்தபோதிலும் நாங்கள் அசையவில்லை. நீதிமன்ற உத்தரவொன்றை பெற்றுக்கொண்டு பொலிஸார் வந்தனர். இருந்தபோதிலும் நாங்கள் வெளியேறவில்லை. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 28ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்தோம். 30ஆம் திகதி கூடிய நீதிமன்றம் எங்களுடைய காணியுரிமையை ஏற்றுக்கொண்டது. தங்களுக்குச் சொந்தமான காணி என்பதனை விமானப்படையினரால் உறுதிப்படுத்த முடியவில்லை. கட்டுமானப் பணிகள் இடம்பெறும் விமானப் படையினரின் 25 ஏக்கர் காணி தவிர்த்து ஏனைய நிலங்களுக்கு திரும்புமாறு நீதிமன்றம் மக்களுக்கு உத்தரவிட்டது. பிரதேச செயலாளர் காரியாலத்தின் உதவியுடன் காணியைப் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் கூறியது” என்று கூறுகிறார் 5 பிள்ளைகளின் தந்தையான பி.எம். பண்டார.

ராகம்வெல பகுதியில் செழிப்பாக வளர்ந்துவரும் நிலக்கடலைப் பயிர்கள்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து கட்டுமானம் இடம்பெறும் 25 ஏக்கர் காணியை தவிர்த்து மக்களுடைய காணிகளை அவர்களுக்கே வழங்குமாறு நல்லாட்சியின் அமைச்சரவையும் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது. அத்தோடு காணியுரிமையை தரக்கோரி அம்பாறை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் பாணம மக்களால் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளது (முறைப்பாட்டு இலக்கம் HRC/AM/71/11/B/G7 ). இந்த முறைப்பாட்டின் விசாரணை முடிவிலும் காணி மக்களுக்கே சொந்தமானது என்று ஆணைக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்களுடைய காணியுரிமையை வலியுறுத்தி மனித உரிமை ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு கடந்த வருடம் ஜூலை மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்நேரம் பிரதேச செயலாளர், விமானப் படை – கடற்படையினர் சார்பாக பிரதிநிதிகள், அரச அதிபர் காரியாலய பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். அதன்போது, 25 ஏக்கர் காணி மாத்திரமே தங்களுக்குச் சொந்தமானது என விமானப்படையினர் கூறினார்கள். மேலிருந்து உத்தரவு கிடைத்தால் ஏனைய பகுதிகளை விடுவிக்க நாங்கள் தயார் என விமானப்படைப் பிரதிநிதி கூறினார். கடற்படை பிரதிநிதி – தங்களுக்கு காணியுரிமை இல்லை, 2016 ஆண்டே காணிக்கான உரிமை குறித்து உயரிடத்தில் கேட்டிருந்தோம். இன்னும் பதில் கிடைக்கவில்லை என்று கூறினார். எமக்கு சாதகமாக என்ன தீர்ப்பு கிடைக்கப்பெற்றாலும், விசாரணை இடம்பெற்றாலும் எமது நிலப்பகுதியை விடுவிக்கும் எண்ணம் நல்லாட்சிக்கும் இல்லை. இந்த இடத்துக்கு கண்வைத்திருக்கும் அமைச்சர் தயா கமகே அமைச்சரவை தீர்மானத்தையும் மாற்றுவதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார் என்று அறியமுடிகிறது. எங்களுடைய நிலத்தில் ஹோட்டல் நிர்மாணிப்பதுதான் அவரது எண்ணமாக இருக்கிறது. அன்று எங்களுடன் இணைந்து போராடியவர் இன்று எங்களுக்கு எதிராக இருக்கிறார்” என்கிறார் சோமசிறி.

ராகம்வெல மக்கள் குடியிருக்கும் பகுதியை அடுத்து, விமானப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிர்மாணப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்ட கட்டடங்கள் பல காணப்படுகின்றன. அவை நாமல் ராஜபக்‌ஷவால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல்கள் என மக்கள் கூறுகிறார்கள். ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவை கரையான்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கின்ற போதிலும், நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் தயாகமகே அவற்றை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான வேலைகளில் இறங்கியிருப்பதாகவும் மக்கள் கூறுகிறார்கள். தங்களை தண்ணியில்லாத மலைப்பகுதியொன்றில் குடியேற்றுவதற்கான திட்டமொன்றும் நல்லாட்சிக்கு இருப்பதாக ராகம்வெல மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

இடைநிறுத்தப்பட்டுள்ள ஹோட்டல் நிர்மாணப்பணிகள்

ராகம்வெல பகுதியில் தங்களுடைய சொந்த காணிகளிலேயே பலவந்தமாக குடியேறியிருக்கும் மக்களில் சிலர் தாங்கள் வாழ்ந்துவரும் அச்ச சூழ்நிலை, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயம், வாழ்வாதாரம், இராணுவமயமாக்கல், நல்லாட்சியின் மறுமுகம் குறித்து பேசுகிறார்கள். அவற்றைக் கீழே பார்க்கலாம்.

ஹீன் நிலமே

மஹிந்தவின் அரசாங்கம்தான் இரவோடிரவாக எங்களை இங்கிருந்து விரட்டியடித்தது. முகத்தை மூடிக்கொண்டு வந்தவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் கம்பிகளாலும் பொல்லுகளாலும் எங்களைத் தாக்கியது மட்டுமன்றி எங்களுடைய வீடுகளுக்கும் தீவைத்தார்கள். அங்கிருந்து தப்பியோடுவதே எமக்கு முதலாவது தெரிவாக இருந்தது. பொலிஸில் நாங்கள் முறைப்பாடு செய்திருக்கிறோம். இதுவரை எவரும் கைதாகவில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எங்களுடைய நிலத்தையும் பெற்றுத் தருவார்கள் என்று நம்பியே வாக்களித்தோம். ஆனாலும் அவர்களும் கைவிரித்துவிட்டார்கள். நாங்கள் இப்போது பலவந்தமாகவே வந்து குடியேறியிருக்கிறோம். அவர்கள் எமக்கு தரவில்லை. பார்க்கப்போனால் மஹிந்தவும் ரணில் – மைத்திரியும் ஒன்றுதான். எல்லா பக்கமும் சுற்றிவளைத்து இராணுவத்தினர் மக்களுடைய காணிகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இந்த இடத்தையும் எங்களிடமிருந்து பறிப்பார்களேயானால் நஞ்சருந்நி தற்கொலை செய்யவேண்டியதுதான். வேறு என்னதான் செய்ய? வயதான இந்த நேரத்தில் நாங்கள் எங்கு போய், யாருடைய உதவியுடன் வாழ்வது?

உறுதிப் பத்திரங்களுடன் எங்களுடைய நிலத்தைத் தருவதாக தயாகமகே கூறினார். அதனால்தான் 2015 வாக்களித்தோம். அதற்குப் பிறகு தயாகமகே இந்தப் பக்கம் வருவதே இல்லை.

குசுமாவதி

உறுதிப்பத்திரத்துடன் காணிகளை மீண்டும் தருவதாக தேர்தல்களின்போது கூறினார்கள். நாங்களும் நம்பி வாக்களித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினோம். இந்த அரசாங்கத்தின்போதுதான் நல்லதொரு நீதிமன்றத் தீர்பொன்று வந்தது. மக்களுடைய காணிகளை வழங்குமாறு அமைச்சரவையும் அனுமதி அளித்தது. அப்படியிருந்தபோதிலும் நாம் நம்பியிருந்த, வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டுவந்த இந்த அரசாங்கம் எங்களுடைய காணிகளை வழங்கவில்லை.

கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு அற்றுப்போனது. 2016 மார்ச் மாதம் 3ஆம் திகதி எமது காணிகளுக்குள் திரும்புவதற்கான போராட்டத்தை ஆரம்பித்தோம். பிரதான பாதையோரமாக ஒன்றுகூடிய நாங்கள் தொடர்ச்சியான போராட்டமொன்றையே மேற்கொள்ள திட்டமிட்டிருந்தோம். இருந்தபோதிலும இறுதியாக எமது காணிகளுக்குள் பலவந்தமாக நுழைய அனைவரும் முடிவெடுத்து யானைக்காகப் போடப்பட்டிருந்த மின்சார வேலிகளையும் தாண்டி திரளாக ஓடினோம். பாதுகாப்புப் படையினர் இருந்தபோதும் அவர்கள் நினைத்தும் பார்க்கவில்லை, நாங்கள் இவ்வாறான அதிரடி முடிவை எடுப்போம் என்று. அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், நாம் முன்பிருந்த அந்த முழுக்காணியையும் எங்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. என்னுடைய அப்பாவுக்கு 5 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த ஐந்து ஏக்கரில் 6 பேர் குடியிருக்கிறோம். அவர்களுடைய காணிகள் இன்னும் இராணுவத்தினர் வசம்தான் இருக்கிறது. எமக்கு அரை ஏக்கர் நிலம் வழங்குவதற்கு பிரதேச செயலகம் தீர்மானித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. 5 ஏக்கர்களில் விவசாயம் செய்துவந்த எங்களுக்கு அரை ஏக்கர் நிலம் போதுமா? அதை வைத்து நாங்கள் என்ன செய்வது?

பண்டார மிஸி நோனா

பெற்றோருடன் இங்கு வந்து குடியேறும்போது நான் சிறுமியாக இருந்தேன். குடும்பத்தில் 9 சகோதர சகோதரிகள் எனக்கு. அப்போது எமது பெற்றோர்கள் சோளம், நிலக்கடலை, வற்றாலைக் கிழங்கு பயிர்செய்து எம்மை வளர்த்தார்கள். தீவிரவாதப் பிரச்சினை தீவிரமடைந்ததனால் எங்களுடைய பாதுகாப்பு தொடர்பாக கரிசனை கொண்ட எமது பெற்றோர்கள் இங்கிருந்து செல்ல முடிவெடுத்தார்கள். நாங்கள் இடம்பெயர்ந்து பாணம பகுதியில்தான் வாழ்ந்து வந்தோம். சுனாமியின் பின்னரே நாங்கள் மீண்டும் இங்குவந்து குடியேறினோம். பாரம்பரியமாக வாழ்ந்த எங்களுடைய சொந்த நிலத்துக்கு வந்து கொஞ்சநாள் கூட நிம்மதியாக வாழவிடவில்லை. சம்பவம் நடந்த நேரம் நாங்கள் இங்கு இருக்கவில்லை. எங்களுடைய பயிர்களுக்கு, வீடுகளுக்குத் தீவைத்திருக்கிறார்கள். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எமது காணிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. கடந்த வருடம்தான் இங்கு வந்து குடியேறினோம். நிலக்கடலை பயிரிட்டிருக்கிறோம். தென்னங்கன்றுகளை நட்டிருக்கிறோம். இதனை மட்டும் நம்பி வாழ முடியாது, கூலி வேலை செய்துதான் வாழ்க்கையை நடத்திவருகிறோம்.

எங்களுடைய காணிகளில் நாங்கள் பலவந்தமாகவே வந்து குடியேறியிருக்கிறோம். கொன்றாலும் இனிமேல் இங்கிருந்து நாங்கள் போகமாட்டோம். எங்களுடைய பெற்றோர் வாழ்ந்த இடம் இது.

விவியன் குலநாயக்க

இங்கிருந்து நாங்கள் இனிமேல் வெளியேறப்போவதில்லை. எங்களுடைய காணிகளை முழுமையாகத் தரும் வரை எமது போராட்டத்துக்கும் ஓய்வில்லை. மீண்டும் எங்களை பலவந்தமாக வெளியேற்ற யாராவது வந்தார்களேயானால், இம்முறை ஓடப்போவதில்லை. கையில் கிடைப்பதைக் கொண்டு அடிப்போம். புலி, சிங்கங்கள் வரப்போவதில்லையே... மனிதர்கள்தானே வரப்போகிறார்கள். வரட்டும்.... நாங்கள் யாருக்கும் பயப்படப்போவதில்லை. செத்தாலும் பரவாயில்லை... இந்த நிலத்தை மீட்கும் போராட்டத்துக்காக உயிரை நீத்ததாக வரலாறாவது கூறும்தானே.

பி.எம். பண்டார

நாங்கள் இங்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடமும் 8 மாதங்களுமாகின்றன. இருந்தபோதிலும் நாங்கள் எந்நேரமும் ஒரு அச்சவுணர்வுடனேயே இங்கு வாழ்ந்து வருகின்றோம். எங்களை விரட்டியடித்துவிடுவார்களோ என்று. விமானப்படையினரின் சுற்றிவளைப்பில்தான் நாங்கள் இருக்கிறோம்.

காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கி மக்களுக்கு காணிகளை வழங்குமாறு நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இதற்கு பிரதேச செயலாளர் அனுமதி வழங்க மறுக்கிறார். இதன் பின்னால் அமைச்சர் தயா கமகேதான் இருக்கிறார். இவர்கள் எல்லோரும் சேர்ந்து என்ன திட்டமிட்டாலும், என்ன செய்தாலும் நாங்கள் எங்களுடைய நிலத்திலிருந்து இனிமேல் வெளியேறப்போவதில்லை. இங்கேயேதான் எங்களுடைய உயிர் பிரியவேண்டும்.

நந்தகுமாரி

அதோ அந்த கட்டடம் இருக்குதே, அங்கதான் எங்களுடைய வீடு இருந்தது. 5 ஏக்கர்கள் இருந்தது. அப்போதும் விவசாயம்தான் செய்துகொண்டிருந்தோம்.

சம்பவம் நடந்த அன்றைய தினம் நாங்கள் இருக்கவில்லை. அப்பா மட்டும்தான் இருந்தார். நாங்கள் பத்தினி கோயில் திருவிழாவுக்குச் சென்றிருந்தோம். அந்த வேளைதான் எஸ்டிஎப் எமது இடங்களுக்குள் நுழைந்து வீடுகளுக்கெல்லாம் தீவைத்திருந்தது. நாங்கள் வந்து பார்த்தபோது உடுத்துவதற்கு உடைகள் கூட இருக்கவில்லை. எங்களுடைய காணிப்பகுதிகளுக்குள் நுழைய எஸ்டிஎப் அனுமதிக்கவில்லை. அன்றிலிருந்து உறவினர்கள் வீடுகளில்தான் தங்கியிருந்தோம்.

5 ஏக்கரில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்த நாங்கள் இப்போது ஒரு ஏக்கருக்கும் குறைவான காணியில்தான் குடிலொன்றை அமைத்துக்கொண்டு விவசாயமும் செய்து வருகின்றோம்.

எங்களுடைய காணிகளில் பலவந்தமாகவே நாங்கள் வந்து குடியிருக்கிறோம். மீண்டும் ஏதாவது பிரச்சினைகள் வரும் என்று பயமாக இருந்தாலும், எங்களுடைய காணிகளில் இருந்து இனிமேல் நாங்கள் வெளியேறப்போவதில்லை. இங்கு எங்களுடைய நிலம்.

யானை பிரச்சினை வேறு. மின்சார வேலிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதனையும் உடைத்துக்கொண்டு யானைகள் வருகின்றன. இரவானால் மூன்று, நான்கு குடும்பங்கள் ஒன்றுசேர்ந்தே உறங்குவோம். யானைத் தாக்கி எனது உறவினர் ஒருவரும் உயிரிழந்திருக்கிறார்.

எங்களுடைய காணிகளை மீட்டுத் தருவதாகக் கூறியே 2015ஆம் ஆண்டு ஆட்சியமைத்தார்கள். ஆனால் இதுவரை அவர்கள் எமக்கு ஒன்றும் செய்யவில்லை. எமது காணிகளை எமக்கே தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.

Created By
Selvaraja Rajasegar
Appreciate
NextPrevious

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.