(பதுளையைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளிக்கும் எனக்குமான உரையாடல்)
தேத்தண்ணி குடிக்க தேயிலைத் தூள் எங்க வாங்குவீங்க?
தோட்டத்துல குடுப்பாங்க.
மாசம் சம்பளத்துல கழிச்சிக்குவாங்களா?
இல்ல, சும்மாதான், ஒரு கிலோ குடுப்பாங்க.
மாசம் முழுசா போதுமா?
இல்ல, மாசம் முடியறதுக்கு முன்னாடியே தூள் முடிஞ்சிரும். எங்கர் பக்கட் வாங்கினா பாதி மாசத்திலேயே முடிஞ்சிரும். அதோட காலையில அந்திக்கு, வேலைக்குனு தேத்தண்ணி கொண்டுபோவோம். அதனால மாசம் முழுசா பாவிக்க முடியாது. முடிஞ்சோன கடையிலதான் வாங்குவோம்.
என்ன தேயில குடிக்கிறீங்க?
என்ன தேயிலனு தெரியாது.
அந்த தேயிலை தூள் பெயர் தெரியுமா?
டஸ்ட்டுன்னு சொல்றாங்க.
நீங்க எடுக்குற கொழுந்துல என்னென்ன வகையான தேயிலைத்தூள் செய்றாங்கனு தெரியுமா?
ஒன்னு ரெண்டு தெரியும்.
கண்டிருக்கீங்களா?
இல்ல.
ஒரு நாளாவது குடிச்சிருக்கீங்களா?
(சிரிக்கிறார்)
குடிக்க ஆசை இருக்கா?
(மீண்டும் சிரிக்கிறார்)
ஒவ்வொரு தோட்டத் தொழிலாளியும் ஒரு நாளைக்கு கட்டாயம் 18 கிலோ தேயிலை பறித்தாக வேண்டும். அது மழைக்காலமாக இருந்தாலும் கடும் வெயிலாக இருந்தாலும் 18 கிலோ கூடையில் நிறைத்தாகவேண்டும். அப்படி எடுக்கத் தவறும் பட்சத்தில் 140 ரூபாவை அந்தத் தொழிலாளி இழக்கவேண்டி ஏற்படும்.
“நாங்கள் பறிக்கும் கொழுந்து நிறையிலிருந்து 3 முதல் 6 கிலோ வரை நிர்வாகத்தினர் கழிக்கிறார்கள். கொழுந்து பறிக்கும் இடத்திற்கே லொரி மூலம் வந்து கொழுந்தை எடுத்துக்கொண்டு போவதால் போக்குவரத்து செலவு என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். ஒரு சில சந்தர்ப்பங்களில் கூடுதலாக கொழுந்து பறித்தால் ஒரு நாளைக்கு 8 கிலோக்கள் எங்களது அட்டையில் பதிவாகாது.
“அத்தோடு, மழைக்காலங்களில் நீர் இலைகளில் தங்கியிருப்பதால் கொழுந்தின் நிறை அதிகமாக இருக்கும் என்று கூறியும் இதே மாதிரி நாங்கள் எடுக்கும் கொழுந்தின் அளவைக் குறைக்கிறார்கள்.
“இப்படி அளவு குறைத்து சேகரிக்கப்பட்ட கொழுந்தை லொரி வரும் வரை கொழுந்து பைகளில் நிரப்பிவைத்திருப்போம். நீண்ட நேரத்தின் பின்னர் வரும் லொரி மூலம் கொண்டு சென்று தொழிற்சாலையில் மீண்டும் நிறையை அளவிட்டுப் பார்ப்பார்கள். அப்போது நிறை குறைந்திருப்பதாகக் கூறி மீண்டும் மாலைநேரம் எடுக்கும் கொழுந்தில் மேலதிகமாகவும் கழித்துக் கொள்வார்கள். கேட்டால் துரை சொல்வதைத்தான் செய்யவேண்டியிருக்கிறது என்று ஐயாமார் கூறுவார்கள்” - நாளாந்தம் தான் எவ்வாறு சுரண்டப்படுகிறேன் என்பதை விளக்கமாகக் கூறுகிறார் மஸ்கெலியாவைச் சேர்ந்த தொழிலாளியொருவர்.
இவ்வாறு தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி இலங்கையில் 20 தொடக்கம் 23 வரையிலான தேயிலைத் தூள் வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றுள் 16 வரையிலான தேயிலைத் தூள்கள் தரமானதாகவும் மீதியானவை தரம் குறைந்தவையாகவும் தரம் பிரிக்கப்படுவதாக கூறுகிறார் பதுளை தோட்டமொன்றில் ஓய்வுபெற்ற தொழிற்சாலையின் பிரதான தொழிற்சாலை அதிகாரி ஜே.ஏ. எலயஸ்.
இதில் தரமான – விலைகூடிய தேயிலைத் தூளில் ஒன்றையாவது தோட்டத் தொழிலாளி ஒருவர் அருந்தியிருக்க மாட்டார். தொழிற்சாலையில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளிகள் தவிர்த்து கொழுந்து பறிக்கும் எந்தவொரு தொழிலாளியும் இந்தத் தரமான தேயிலைத் தூளைக் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள்.
தோட்டத் தொழிலாளிகளுக்கு தரம்குறைந்த டஸ்ட் 2 (Dust 2) தேயிலைத்தூள்தான் வழங்கப்படுகிறது. இது தரமானது என்று கூற முடியாது. சாதாரண ஹோட்டல்களுக்கும் இந்தத் தேயிலைத்தூள்தான் விநியோகிக்கப்படுகிறது. சாயம் கூடுதலாக இருக்கும். ஒரு தடவைக்கு மேல் பாவிக்கலாம். ஆனால், இவர்களுக்கு தரமான டஸ்ட் 1 (Dust 1) வழங்கலாம் என்கிறார் எலயஸ்.
தான் பல்வேறு தடவை நிர்வாகத்தினரிடம் இந்த வேண்டுகோளை விடுத்தபோதும் அதை அவர்கள் மறுத்து வந்தனர் என்றும் அவர் கூறுகிறார். ஆனால், இந்த விடயத்தை தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் சேர்த்து முதலாளிமார் சம்மேளனத்துடன் ஒரு உடன்பாட்டுக்கு வரலாம் என்கிறார் எலயஸ்.
150 வருடங்களுக்கு மேலாக தேயிலை மலையில் வாழ்ந்து அதற்கே உரமாகிக் கொண்டிருக்கும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தங்களுடைய உழைப்பில் உற்பத்தியாகும் தேயிலைத் தூளை ஆடம்பரப் பொருளாக்கி அதனை நுகர முடியாத அளவுக்கு அவர்களிடமிருந்து தூர விலக்கி வைத்திருக்கிறார்கள். பணத்தைப் பெற்றுக்கொண்டு இவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதாகக் கூறும் தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள விடயத்தை மாத்திரமே தூக்கிப்பிடித்துக்கொண்டு அரசியல் செய்கின்றன.
தொழிற்சங்கக் கூட்டங்களின்போது இந்த விடயத்தை கூட்டு ஒப்பந்தத்தில் சேர்க்க வலியுறுத்திக் கூறுமாறு பல தொழிலாளர்களிடம் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர்களும் அவ்வாறே செய்திருக்கிறார்கள். பார்க்கலாம், செய்யலாம் என்று கூறிய தொழிற்சங்கவாதிகள் இதுவரை இந்த விடயம் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார் எலயஸ்.
நாம் இங்கு தொழிலாளர்களுக்கு வழங்கும் தரம்குறைந்த தேயிலைத் தூளையும் தரமான தேயிலைத் தூள்களையும் படங்களாகத் தந்திருக்கிறோம்.
தரம் குறைந்த தேயிலை
தரமான தேயிலைத் தூள்கள்