ஒரு கேள்வி.
அந்தக் கேள்விக்கான பதில் மட்டுமே எனக்கு அவசியமாக இருந்தது. இவ்வளவு காலமும் அவர்கள் போன்றவர்களைச் சந்தித்து பேசியது போன்று இம்முறை அந்தக் கேள்வியைக் கேட்பது அவ்வளவு சுலபமல்ல. என்னை நான் உணர்ச்சியற்றவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். பத்து, இருபது, முப்பது வருடங்களாக மன உளைச்சலுக்குள் சிக்கித் தவிப்பவர்கள்; தங்களுடைய பிள்ளைகள், கணவர், மனைவி, சகோதரர், சகோதரியின் நினைவுகளுடன் வாழ்ந்து வருபவர்கள் அந்த ஒரு கேள்வியைக் கேட்டவுடன் நிச்சயமாக உடைந்து அழுவார்கள் என்று தெரியும். அதனால் நான் ஒவ்வொருவரிடமும் உரையாட நீண்ட நேரம் எடுத்துக்கொண்டேன். உரையாடலின் இறுதிக் கேள்வியாக அதை வைத்துக்கொண்டேன். அவ்வாறே நான் கேள்வியைக் கேட்டபோது சந்தித்த 20 பேரும் நிலைகுலைந்து போனார்கள்; மௌனமானார்கள்; அழுதார்கள்; கவனத்தை வேறுபக்கம் திசை திருப்பினார்கள்.
நான் கேட்ட கேள்வி.
“காணாமலாக்கப்பட்ட உங்க மகன் (மகள், கணவர், மனைவி, சகோதரர் சகோதரி) இப்போது உங்களோட இருந்தா நீங்க எப்படி இருப்பீங்க?”
2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து 19 வயதான தன்னுடைய மகளைத் தேடியலையும் முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டானைச் சேர்ந்த காளிமுத்துவின் பதிலுக்கும் 1988 இலிருந்து 18 வயதான தனது மகனின் வருகைக்காக காத்திருக்கும் காலி பெத்தேகமயைச் சேர்ந்த குணதாஸவின் பதிலுக்கும் இடையே கொஞ்சம் கூட வித்தியாசமிருக்கவில்லை. இருவருடைய வலியுணர்வைப் பதிவுசெய்வதற்காகவே இந்தப் புகைப்படக் கட்டுரையை எழுதுகிறேன்.
நான் சந்தித்த 20 பேரில் 10 பேர் போரின் காரணமாக வடக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள். மீதி 10 பேர் மக்கள் விடுதலை முன்னணியின் 1987 - 1989 காலப்பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது கிளர்ச்சியின்போது இராணுவத்தினரால் காணாமலாக்கப்பட்டவர்கள். அந்த ஒத்த கேள்வியின் ஒத்த பதில்களைப் பாருங்கள்.