படங்கள்: விகல்ப மற்றும் ருக்கி பெர்னாண்டோ
கட்டுரை ஆசிரியர்: ருக்கி பெர்னாண்டோ
2018 ஏப்ரல் 23ஆம் திகதி காலை இரணைதீவின் இரு தீவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய 40 படகுகளில் பயணிப்பதற்கு தீர்மானித்தார்கள். கடற்படையினர் அவர்களது பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதால் 1992 முதல் அவர்கள் இரணைதீவிலிருந்து வெளியேறி இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியிருந்த அவர்களது சொந்த மண்ணுக்குச் செல்வதற்கும் அங்கு தங்குவதற்கும் கடற்படையினர் அனுமதி வழங்க மறுத்துவந்துள்ளனர். அந்தத் தீவில் பாடசாலைகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், கூட்டுறவு நிலையம் நெசவு நிலையம், மருத்துவ நிலையம் கிராமிய சபை போன்றவை அமைந்துள்ளன.
2009இல் யுத்தம் முடிவடைந்த பின்னரும் 2015இல் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னரும் தங்களுடைய பகுதிக்குச் செல்ல முடியும் என அந்த மக்கள் நம்பியிருந்தார்கள். 2016 முதல் 2017 வரை அமைச்சர்கள், அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் உட்பட பலருடன் இடம்பெற்ற தொடர் சந்திப்புகளின் பின்னரும் தங்களுடைய பகுதிகளுக்குச் செல்வதற்கான அனுமதி இன்னமும் அந்த மக்களுக்குக் கிடைக்கவில்லை. இயலாத நிலையில் அவர்கள் கடந்த ஒரு வருடகாலமாக (இன்று வரை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் (ஏப்ரல் 23 வரை 359 நாட்கள்). இந்தப் போராட்டத்தின் பலனாகவும் அவர்களால் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை.
ஏப்ரல் 23ஆம் திகதி அவர்கள் சற்று வித்தியாசமான விடயத்தை முயற்சி செய்துப் பார்த்தார்கள். அனேக இலங்கையர்கள் முயற்சிக்காத ஒரு துணிச்சலான விடயத்தில் அவர்கள் ஈடுபட்டார்கள். நானும் முதலில் இது குறித்து அச்சமடைந்திருந்தேன்.
ஏப்ரல் 23ஆம் திகதிக்கு முன் என்னையும் தங்களுடன் இணைந்துகொள்ளுமாறு அழைத்திருந்த அவர்கள் என்னுடைய சகாக்களையும் அழைத்துவருமாறு கோரியிருந்தார்கள். முக்கியமாக ஏப்ரல் 23ஆம் திகதி தங்களுடன் ஊடகவியலாளர்கள், கிறிஸ்தவ மதகுருமார், சட்டத்தரணிகள் இணைந்துகொள்ளவேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். நான் எனது சகாக்கள், நண்பர்கள் பலரை அதில் இணையுமாறு கேட்டுக்கொண்டேன். மக்களை அதில் இணையுமாறு கேட்டுக்கொள்வது இலகுவான விடயமல்ல. இருந்தபோதிலும் சிலர் இணைந்துகொண்டார்கள். நான் ஆர்ப்பாட்டத்தில் பல தடவை கலந்துகொண்டிருந்தேன். ஆனால், அரசாங்கம் உரிய பதிலை வழங்காததன் காரணமாகவும் மக்களின் போராட்டத்தற்கு ஆதரவாக என்னால் எந்த ஆக்கபூர்வமான பங்களிப்பையும் வழங்கமுடியாததன் காரணமாக ஏற்பட்ட விரக்தியினாலும் கிட்டத்தட்ட அதில் கலந்துகொள்வதை கைவிட்டிருந்தேன். ஆனால், தொலைபேசி அழைப்புகளும் இரணைதீவு இளைஞர்களுடன் இடம்பெற்ற சந்திப்பும் எனக்கு புத்துணர்வைத் தந்தது.
ஆகவே, ஏப்ரல் 23ஆம் திகதி நான் அவர்களுடன் இணைந்துகொள்ள சென்றிருந்தேன். கடந்த 359 நாட்களாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவரும் பகுதிக்கு அருகில் இருந்த இரணைமாதா தேவாலயத்தில் மத வழிபாட்டில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர்கள் பதாகைகள் சுலோக அட்டைகளுடன் கடற்கரையை நோக்கி சென்றார்கள். என்னையும் யாழ்ப்பாணம், மன்னார் உட்பட பல பகுதிகளில் இருந்து வந்திருந்த ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள் உட்பட்டவர்களும் தங்களுடன் இணைந்துகொள்ளவேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். நாங்களும் படகுகளில் ஏறினோம்.
உண்மையில், எனக்கு பயமாக இருந்தது. பேரலைகள் வீசும் கடல் குறித்தல்ல, இலங்கை கடற்படையினர் குறித்து. இரணைதீவில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கு மாத்திரமே கடற்படையினர் மக்களுக்கு அனுமதி வழங்கியிருப்பது எனக்கு தெரியும், முன்கூட்டிய அனுமதியுடனே கடற்படையினர் அதற்குச் சம்மதித்திருந்தார்கள். பேசாலையின் கத்தோலிக்க மதகுருவும் எனது நீண்டநாள் நண்பருமான ஒருவர் என்னுடன் படகில் இருந்தார். நாங்கள் கடற்படையின் தாக்குதல் வல்லமை குறித்தும் அவர்கள் எவ்வாறு பேசாலை தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்டு பொதுமக்களைப் படுகொலை செய்தார்கள் என்பதையும் நினைவுகூர்ந்தோம். படகில் இருந்த மக்கள் வெள்ளைக்கொடியை உயர்த்திப் பிடித்தபடி இருந்தார்கள். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் எப்படி படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் நாங்கள் நினைவுகூர்ந்தோம்.
ஆனால், கடற்படையினரிடமிருந்து எந்தத் தடையும் இருக்கவில்லை. மக்கள் கரையில் இறங்கி தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். சில கடற்படை அதிகாரிகள் அங்கு வந்து சிறிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால், மக்கள் பணிவுடனும் உறுதியாகவும் காணப்பட்டார்கள்.
“நாங்கள் எங்கள் நிலத்திற்கும் தேவாலயத்திற்கும் வந்திருக்கிறோம். நாங்கள் பல தடவை இடம்பெயர்வை சந்தித்து விட்டோம். ஆனால், இம்முறை இங்கேயே நாங்கள் தங்கியிருக்கப்போகிறோம். எங்களிடம் சட்டரீதியான ஆவணங்கள் உள்ளன, நீங்கள் (கடற்படையினர்) இந்தத் தீவுகளில் நிலைகொள்ளலாம். ஆனால், எங்களுடைய நிலங்களில் நிலைகொள்ள முடியாது. கடற்படையினர் எங்களுடைய நாளாந்த வாழ்க்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.”
தேவாலயத்தை மீளகட்டித்தருவதாக கடற்படை அதிகாரி விடுத்த வேண்டுகோளை மக்களும் மதகுருமார்களும் நிராகரித்தார்கள். தங்களுடைய பூர்வீக நிலங்களில் மீள்குடியேறுவதே முன்னுரிமைக்குரிய விடயம் என குறிப்பிட்ட அந்த மக்கள், வாழ்வாதாரத்திற்கும் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கும் புத்துயிர் அளிக்கப்போவதாகவும் கூறினார்கள்.
இதன் பின்னர் அவர்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருப்பதற்குத் தீர்மானித்தார்கள். ஒரு மணிநேரத்தின் பின்னர் சிலர் தங்கள் உடைகளை மாற்றி அங்கேயே தங்கியிருப்பதற்குத் தயாராகிவிட்டார்கள். ஏனையவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் நிலத்தில் என்ன எஞ்சியிருக்கின்றது என்பதைப் பார்ப்பதற்குச் சென்றார்கள்.
முதன் முதலில் அந்தக் கிராமத்திற்குச் சென்ற என்னை போன்றவர்களுக்கு அந்தக் கிராமத்தின் செழிப்பை உடனடியாகவே புரிந்துகொள்ள முடிந்தது. மக்கள் இளநீர் குடித்ததை நான் பார்த்தேன். பெண் ஒருவர் காளானை வைத்திருந்தார், இன்னொருவர் வெள்ளரிக்காய் வைத்திருந்தார். அங்கு நான் இதுவரை சுவைத்திராத புதிய பழமொன்றும் இருந்தது.
அதன் பின்னர் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஒருவர் என்னை தனது பாடசாலைக்கு அழைத்துச்சென்றார். அவர் பாடசாலை கட்டடத்தைக் காண்பித்தார், அங்கு ஆசிரியர்கள் தங்கியிருப்பதற்கான பகுதியும் மழை காலத்தில் நீரை சேகரிப்பதற்கான பகுதிகளும் காணப்பட்டன. பிரதான தேவாலயம் சேதமடைந்திருந்த போதிலும் முழுமையான நிலையில் காணப்பட்டது. ஆனால், சிறிய தேவாலயமொன்று முற்றாக சிதைவடைந்திருந்தது. மதகுரு தங்குமிடமும் கன்னியாஸ்திரிகள் தங்குமிடமும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டன. நெசவு நிலையம், கூட்டுறவு சங்க கட்டடம், கிராமிய சபை கட்டடம் ஆகியன முற்றாக சிதைவடைந்த நிலையில் காணப்பட்டன. கிராமத்தின் கிணறு ஒன்று நீர் நிரம்பிய நிலையில் காணப்பட்டது. அதனை சுத்தம் செய்யவேண்டியிருந்தது.
கடற்படையினர் தீவின் சிறிய பகுதியொன்றை ஆக்கிரமித்துள்ளார்கள் என்பதை எங்களால் அவதானிக்க முடிந்தது. எனினும், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள பகுதியில் ஐந்து வீடுகளும் மருத்துவர்கள் மற்றும் தாதிகளின் தங்குமிடத்தை உள்ளடக்கிய மருத்துவமனையும் விளையாட்டு மைதானமொன்றும் மயானமும் உள்ளதாகத் தெரிவித்தார்.
அந்தத் தீவில் வீதிகளோ, வாகனங்களோ இல்லை, மாட்டுவண்டிகளும் சைக்கிள்களும் மாத்திரம் காணப்பட்டன, நாங்கள் பெருமளவு மாடுகளைப் பார்த்தோம். ஆனால், தாங்கள் வெளியேறியவேளை இதனை விட அதிகமான மாடுகளை கைவிட்டுச்சென்றதாக மக்கள் கூறினார்கள். அவற்றை கடற்படையினர் இறைச்சிக்காக வெட்டியிருக்கலாம்.
இரணைதீவு மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அங்கு சென்ற நாங்கள் மதியமளவில் அங்கிருந்து வெளியேறினோம். ஆனால், அந்தத் தீவைச் சேர்ந்த 105 பேர் இரவில் அங்கு தங்கியிருந்தார்கள். நாங்கள் வெளியேறிக்கொண்டிருந்தவேளை அவர்கள் தங்கள் பகுதியைச் சுத்தம் செய்து அங்கு தங்கியிருப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.
ஒரு சமூகத்தினர் தங்கள் நிலத்தினை மீளப்பெறுவதற்காக அனுமதியின்றி அங்கு தரையிறங்கி தொடர்ந்தும் அங்கு தங்கியிருப்பது என்பது இலங்கை சமீபகாலத்தில் சந்தித்திராத ஒருவகை சாத்வீக நடவடிக்கை.
என்னைப் பொறுத்தவரை இது மிகத்துணிச்சலான அதிகளவு உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு நடவடிக்கை. ஆனால், அந்தச் சமூகத்தின் ஒரு தலைவருக்கு இது மிகவும் சாதாரண விடயமாகக் காணப்படுகின்றது. எங்கள் நிலத்தை எங்கள் தேவாலயங்களை நாங்கள் பெறுவதற்கு ஏன் அனுமதி வேண்டும்? என அவர் கேள்வி எழுப்புகிறார்.
அந்த நிலத்தின் செழிப்பு, கடல், அந்த மக்களின் எதிர்த்துப் போராடும் திறன், படைப்பாற்றல் என்பவற்றிற்கு அப்பால் பல சவால்கள் உள்ளன, அவர்களிற்கு ஆதரவு தேவை.
அவர்கள் தங்களுடைய நிலத்தில் மீளக்குடியேறியதை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கவில்லை. உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய உதவிகளும் கிடைக்கவில்லை. வீடுகளையும், பாடசாலைகளையும், மருத்துவமனைகளையும், கூட்டுறவுச்சங்கங்களையும், கிராமிய சபைகளையும் புனரமைக்கவேண்டும். தீவிற்கான தொடர்ச்சியான போக்குவரத்து வசதி அவசியம் தேவைப்படுகிறது.
ஆனால், அதுவரை தாங்களே தங்கள் சொந்த மண்ணை மீளப்பெற்றுக்கொண்ட திருப்தி மாத்திரம் அவர்களுக்கு நீடிக்கும்.