“வௌக்கெண்ணைய வெரல்ல பூசிட்டு அடுப்புல காட்டுவேன். அதுதான் மருந்து. ரெண்டு நாளைக்கு கொழுந்து எடுக்கலாம். திரும்ப வலிக்கத் தொடங்கும். அப்புறமும் வௌக்கெண்ணதான் மருந்து” என்று கூறுகிறார் தோட்டத் தொழிலாளியான 57 வயது பெருமாள் தனலெட்சுமி. இவருக்கு ஐந்து பிள்ளைகள். 3 பேர் படிக்கிறார்கள், இருவர் கொழும்பில் வேலை செய்கிறார்கள்.
16 வயதில் கொழுந்து பறிக்கச் சென்றிருக்கிறார் தனலெட்சுமி. அவரது கை விரல்கள் வருடக்கணக்காக மழை பெய்யாமல் பிளந்திருக்கும் நிலத்தைப் போல இருக்கிறது. பிளந்திருக்கும் வழியினூடாக வடிந்தோடியிருக்கும் தேயிலைச் சாய அடையாளங்கள் இரத்தம் வெளியேறிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது.
“இந்த காயத்தோட கொழுந்தெடுத்தா விரல் வலிக்கும். கிளவுஸ் (கையுறை) போட்டா கொழுந்து எடுக்க முடியாது. என்னதான் செய்ய, பிள்ளைகள படிக்கவைக்கனுமே, வலிச்சாலும் கொழுந்து எடுக்கத்தானே வேணும்” என்கிறார் 57 வயதான நிர்மலா. ஒரு சில தோட்டங்களில் தொழிலாளர்கள் கையுறை பயன்படுத்த நிர்வாகம் தடைவிதித்திருக்கிறது. கையுறை அணிந்து பறிப்பதால் கொழுந்து சேதமடைவதாக நிர்வாகம் கூறுகிறது. காயத்தின் வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சில தொழிலாளர்கள் களவாக கையுறையை அணிகிறார்கள். இன்னும் ஒரு சிலர் விரல்களுக்கு மட்டும் உறைகளை அவர்களே தைத்து அணிகிறார்கள்.
தோட்டத் தொழிலாளி ஒருவர் சராசரியாக 30 வருடங்கள் வேலை செய்பவராக இருந்தால் அவரது விரல்களில் ஏற்படும் காயங்கள் நிரந்தரக் காயங்களாகின்றன. அவர்கள் தங்களுடைய அன்றாட வேலைகளைக் கூட செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.
“இந்த காயத்தோட உடுப்பு கழுவ முடியாது. அதுகூட பரவாயில்ல, சாப்பாட பெனஞ்சி சாப்பிடக்கூட ஏலாது. கையெல்லாம் எறியும்” என்று கூறுகிறார் பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகளின் தாயான எம். ஞானசோதி.
ஒரு கிலோகிராம் தேயிலைத்தூள் உற்பத்திசெய்வதற்கு 5,000 கொழுந்துகள் தேவைப்படுவதாகக் கூறுகிறார் பதுளையைச் சேர்ந்த ஹிந்தகல தோட்டத்தின் தொழிற்சாலைக்குப் பொறுப்பாளராக இருக்கும் முத்து ஆரச்சி என்பவர். ஒரு வாரத்துக்கு இலங்கையிலிருந்து சராசரியாக 7 மில்லியன் கிலோகிராம் தேயிலைத் தூள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று கூறும் அவர் இதற்காகப் பாடுபடும் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி பேசுவதற்கு இங்கு யாருமில்லை என்றும் கூறுகிறார்.
தங்களுடைய வாழ்நாளில் முக்கால்வாசிக் காலப்பகுதி பூராகவும் கொழுந்துகள் பறிப்பதால் விரல்களில் ஏற்படுகின்ற காயங்களுக்கு நிர்வாகத்தின் மூலம் எந்தவித மருத்துவ உதவிகளும் வழங்கப்படுவதில்லை. அதற்கான இழப்பீடுகள் கூட கிடைப்பதில்லை.
இந்த நிலையில், இலங்கையில் தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவருகிறது. இதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் இலங்கை தேயிலைச் சபையினாலும், அமைச்சினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச தேயிலை சம்மேளனமும் இடம்பெற்றுவருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு இலங்கையில் 150 வருட தேயிலை உற்பத்திக்காக பரம்பரை பரம்பரையாக உழைத்துவரும் ஒரு மலையகத் தோட்டத் தொழிலாளியேனும் இந்த நிகழ்வுகளுக்கு அழைக்கப்படவில்லை.
இருந்தபோதிலும், நிரந்தரக் காயங்களுடன் தங்களுடைய பிள்ளைகளைப் படிக்கவைப்பதற்காக, சாப்பாட்டுக்காக வலியையும் பொறுத்துக்கொண்டு உடல்வலிமை ஒத்துழைக்கும் காலம் வரை தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அண்மையில் தேயிலைத் தோட்டமொன்றுக்குச் சென்று தொழிலாளர்களின் காயக் கைகளை எனது கமராவில் பதிவுசெய்துகொண்டேன். அந்தக் கைகளைக் கீழே பார்க்கலாம்.