“இருந்த வெள்ளத்த வந்த வெள்ளம் கிளப்பின மாதிரி ஆயிருச்சி எங்கட நிலம.
நிலையா இருக்கிற நாங்க விட்டுக் குடுத்திட்டு சீசனுக்கு மட்டும் வார ஆக்களுக்கு, அதுவும் சங்கத்தில உறுப்பினரா இல்லாதவங்களுக்கு இடத்த குடுத்திட்டு பார்த்துக்கொண்டிருக்கிறம்.
“நீங்க ஆரம்பத்தில 5 போர்ட் வச்சித்தானே செஞ்சீங்க. இப்ப போர்ட் கூடின பிறகு எப்படி இந்தப் பக்கம் வரமுடியும்? அதனால எனக்கு இடத்தப் பிரிச்சித் தாங்க, இதுக்கு இங்கால நீங்க வரக்கூடாது, நாங்க அந்தப் பக்கம் வரமாட்டோம் - என்று சங்கத்தில உறுப்பினரா இல்லாத, 40 போர்ட்டுக்கு சொந்தக்காரரான தென்னிலங்கைய சேர்ந்த சிங்கள மீனவர் ஒருவர் எங்கள பார்த்து இப்படி சொல்றார்.
சுனாமியால போர்ட்டுகள் அடிக்கப்பட்டு (அழிக்கப்பட்டு), யுத்தத்தால மிச்ச போர்ட்டுகளும் அடிக்கப்பட்டு, உடுப்பை தவிர எல்லாவற்றையும் இழந்திருந்திருந்தம். இப்போதுதான் கொஞ்சம் எழும்பியிருக்கிறம். ஆனால், மீண்டு எழமுடியாதபடி திரும்பத்திரும்ப அடித்துக்கொண்டே இருக்கிறாங்க”
இவ்வாறு நாயாறு மீனவ சங்கத் தலைவர் கமலேஸ்குமார் புலம்புகிறார்.
வருடந்தோறும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் அனுமதியின்றி தென்னிலங்கையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி மீனவர்கள் படையெடுப்பதினாலேயே இந்த சூழ்நிலைக்கு கமலேஸ்குமார் போன்ற மீனவர்கள் முகம்கொடுத்துவருகிறார்கள்.
பூர்வீகமாக மீன்பிடித் தொழில் செய்துவரும் தமிழ் மக்களின் மீன்வளத்தை அள்ளிக்கொண்டு செல்வதற்கு அனுமதியளிக்கப்படாத 500இற்கும் மேற்பட்ட படகுகள் மூலம் சிலாபம் பகுதியிலிருந்து வரும் மீனவர்கள் வருடத்தின் மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாத முடிவுவரை இங்கு தங்கியிருந்து மீன்பிடிப்பதோடு, கூட்டுறவு சங்கங்களின் சட்டங்களையும் கடைபிடிப்பதில்லை. இந்தச் சட்டவிரோத செயற்பாட்டுக்கு அரசாங்கமும், அதன் நிறுவனங்களும் துணைபோவதாக முல்லைத்தீவு மீனவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பருவகாலம் சிலாபம் பகுதியில் முடிவடைந்தவுடன், முல்லைத்தீவை நோக்கி இவர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், முல்லைத்தீவு மீனவர்களோ தங்களது பருவகாலத்தையும் பகிரவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டு 4,800 குடும்பங்கள் வாழ்ந்துவருகிறார்கள். 28 கூட்டுறவு சங்கங்களையும், ஒரு கூட்டுறவு சம்மேளனத்தையும் (சமாசம்) முல்லைத்தீவு மாவட்டம் கொண்டிருக்கிறது.
மார்ச் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து (சிலாபம்) வருடந்தோறும் முல்லைத்தீவுக்கு சிங்கள மீனவர்கள் வருவது வழக்கம் என்று கூறும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா, ஆனால், அவர்கள் இங்குள்ள சங்கங்களில் பதிவுசெய்து, அதன் தீர்மானத்தின் படியே செயற்படுவார்கள், அவர்களுக்கும் எமது மீனவர்களுக்கும் இடையே சுமூகமான உறவுநிலையே இருந்தது என்றும் கூறுகிறார் மரியராசா.
ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக மரியராசா கூறுகிறார். 78 படகுகளுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை 500 இற்கும் மேற்பட்ட படகுகள் செம்மலை, நாயாறு, கொக்குத்தொடுவாய் மற்றும் கொக்கிளாய் பகுதிகளுக்கு வந்திருக்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.
போர் முடிவடைந்து 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு மீள்குடியேறிய இம்மக்கள் கடற்படையின் பல நெருக்குதல்களுக்கு மத்தியில் மீன்பிடித் தொழிலைச் செய்துவந்தனர். பின்னர் கடற்படையின் கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்பட இந்தியன் ட்ரோலர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்துக்கொண்டே வந்தது (இன்றும்). இதனால், மீன்வளத்தை இழந்து கடனாளியாகி வேறு தொழில்களுக்கு போகவேண்டிய நிலைக்கு முல்லைத்தீவு மீனவர்கள் தள்ளப்பட்டிருந்தனர்.
இந்திய ட்ரோலர்களின் பிரச்சினை அப்படியே இருக்க, வருடந்தோறும் வரும் தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு அதைவிட மோசமானதொரு விளைவை ஏற்படுத்துவதாக மீனவர்கள் கூறுகிறார்கள்.
நினைத்தபடி வழங்கப்படும் அனுமதி
2012ஆம் ஆண்டு இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் 32 தென்னிலங்கை மீனவர்களுக்கு இராணுவம் அனுமதியளித்திருந்தது.
2015ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் அனுமதியின்றி, தங்களின் பேச்சு நடத்தாமல் 32இலிருந்து 78ஆக தென்னிலங்கை மீனவர்களுக்கான அனுமதி பத்திரம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா குறிப்பிடுகிறார். ஆனால், தற்போது 500இற்கும் மேற்பட்ட அனுமதியற்ற படகுகள் வந்திருப்பதாகவும் கூறுகிறார்.
தென்னிலங்கைப் படகுகளால் பெரும்பாலும் நாயாறு கிராம மக்களே பாதிக்கப்படுகின்றனர். இங்கு 82 மீனவக்குடும்பங்கள் கடலை நம்பியே வாழ்ந்துவருகிறார்கள். ஆனால், வருடத்தில் 8 மாதங்கள் தங்களின் வயிறைக் கட்டிக்கொண்டே வாழ்வதாக நடராஜா என்ற மீனவர் கூறுகிறார்.
“கடலுக்கு சென்றால் குறைந்தளவான மீன்களையே பிடித்துக்கொண்டு வரமுடியும். ஒருசில நாட்களில் 4, 5 கிலோவுடனும் திரும்புவோம். இந்த நிலைமையில் நாங்கள் எப்படி வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவது? என்று கேள்வி எழுப்புகிறார்.
கடந்த வருடம் கடற்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளரால் 200 தென்னிலங்கை மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மரியராசா குறிப்பிடுகிறார்.
“அனுமதியற்ற தென்னிலங்கை மீனவர்கள் மாட்ட செயலகத்திடம் சென்று அனுமதிபத்திரத்தை காண்பித்து கொட்டில் போட்டுக் கொள்வதற்கான அனுமதிப் பத்திரத்தை பெறுவதில்லை. கடந்த வருடம் கிராம சேவகர் ஒருவர் பதிவை மேற்கொள்வதற்காக சென்றிருந்த சமயம் தென்னிலங்கை மீனவர்களாலும் இராணுவத்தினராலும் தாக்கப்பட்டு இழிவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்” என்றும் மரியராசா கூறுகிறார்.
நாயாறு பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த தனிநபர் ஒருவருக்கு 40 படகுகள் சொந்தமாக இருக்கின்றன என்று கூறுகிறார் நாயாறு கூட்டுறவு சங்கத் தலைவர் கமலேஸ்குமார்.
“எங்களுடைய மாவட்ட, கிராம கூட்டுறவு சங்கங்களின் தீர்மானத்தின்படி ஒருவருக்கு 5 படகுகள் மாத்திரமே வைத்திருக்க முடியும். ஆனால், சுனில் நிசாந்த என்பவர் பலவந்தமாக 40 படகுகளை வைத்துக்கொண்டு தொழில் செய்துவருகிறார். இவரது படகுகள் படகுத் துறையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமையால் எமது மீனவர்களின் படகுகளை நிறுத்திவைக்க போதிய இடம் இல்லை. அதுமட்டுமில்லாமல் எங்களிடம் அனுமதி பெறாமல் வாடியொன்றையும் அமைத்திருக்கிறார். அத்தோடு, உள்ளூர் மீனவர் ஒருவரின் கரைவலை அனுமதிப் பத்திரத்தையும் பலவந்தமாக பெற்று தொழில் செய்துவருகிறார். கடந்த 5 வருடங்களாக பலரிடம் முறையிட்டும் எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை. இவருக்கு பல தரப்பிலிருந்து ஆதரவு இருப்பதால்தான் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார்” என்றும் கமலேஸ்குமார் கூறுகிறார்.
“தடை ஏது எங்களுக்கு”
கடற்தொழில் திணைக்களத்தால் குறிப்பிட்ட சில மீன்பிடி முறைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. அவை தென்னிலங்கையிலிருந்து மற்றும் திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு வரும் மீனவர்களுக்கு பொருந்தாது என்றே தோன்றுகிறது. வெளிச்சத்தைப் பாச்சி (Light Course), டைனமைற்றைப் பயன்படுத்தி மற்றும் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு இவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இவ்வாறு தடைசெய்யப்பட்ட முறையைப் பயன்படுத்தி பெரிய மீன்களைப் பிடிப்பதால் சிறிய மீன்கள், குஞ்சுகள், பவளப்பாறைகள் அழிந்துவிடுவதாக மீனவர்கள் கூறுகிறார்கள்.
அத்தோடு, கரைவலையை கடலுக்குள் 2,700 மீற்றர் வரையே செய்ய முடியுமென கரைவலைச் சட்டம் கூறுகையில் 5,000 – 6,000 மீற்றர் வரை முல்லைத்தீவு கடற்கரையில் கரைவலை பயன்படுத்தப்படுகின்றது. மனித வளத்தைக் கொண்டு இந்தளவு தூரம் கடலினுள் இடப்பட்டிருக்கும் கரைவலையை இழுக்கமுடியாது. அதனால், அதற்காக உழவு இயந்திரத்தில் வீஞ்ச் (Winch) என்ற ஒரு இயந்திரத்தைப் பொருத்தும் தென்னிலங்கை மீனவர்கள், அதனைக் கொண்டு கரையை நோக்கி வலையை இழுக்கிறார்கள். இதனால், கடலின் அடியில் பவளப்பாறைகள் முற்றாக அழிந்துபோகின்றன.
கடந்த வருடம் சின்னப்பாடு, உடப்பு போன்ற பகுதிகளில் மீன் உற்பத்தி குறைந்தமைக்கு இதுவே காரணமாகும் என்று கூறுகிறார் அளம்பில் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அமலன்.
“வெளி மாவட்டத்திலிருந்து வருகை தரும் மீனவர்கள் அங்கு பருவகாலத்தின்போது தொழில் செய்துவிட்டு பின்னர் இங்கு தொழில்புரிய வருகிறார்கள். இதனால், அவர்கள் வருடம் முழுவதும் தொழில் செய்கிறார்கள். ஆனால், நாங்கள் எமது பருவகாலத்தில் 6 மாதங்கள் மட்டும் தொழில்புரிவதனால், அதுவும் இந்தக் காலப்பகுதியிலேயே வெளி மாவட்ட மீனவர்களும் வருவதால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். அந்தந்த பகுதி மீனவர்கள் அந்தந்தப் பகுதிகளிலே தொழில் செய்ய வசதிகள் செய்யப்படவேண்டும்” என்றும் அவர் கூறுகிறார்.
சட்டவிரோத மீன்பிடியால் கொக்கிளாய், கருநாட்டுகேணி மற்றும் கொக்குத்தொடுவாய் மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொக்கிளாய் களப்புப் பகுதி இறால் இனப்பெருக்கம் அதிகமாகக் காணப்படும் பகுதியாகும். இந்தப் பகுதிகளில் இயந்திரப் படகுகள் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு, ஒரு சில வலைகளும் இந்தப் பகுதிகளில் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்தச் சட்டங்கள் தென்னிலங்கை மீனவர்களாலும், திருகோணமலையிலிருந்து வரும் மீனவர்களாலும் தொடர்ந்து மீறப்படுகின்றன.
திட்டமிட்டு பறிக்கப்படும் கரைவலை உரிமம்
1965ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி பெரும்பாலான தமிழர்கள் கொண்டிருந்த கரைவலை உரிமத்தை இன்று தென்னிலங்கை மீனவர்கள் தங்கள் வசப்படுத்தியிருக்கிறார்கள். கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு போன்ற பகுதிகளில் இருந்து போரின்போது மக்கள் இடம்பெயர்ந்திருந்தபோது 1996ஆம் ஆண்டு தென்னிலங்கையில் இருந்து மீனவர்கள் கொண்டுவரப்பட்டு குடியர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு திருகோணமலை மாவட்ட கடற்தொழில் விரிவாக்க அலுவலகம் தற்காலிகமாக கரைவலை அனுமதியை வழங்கியிருக்கிறது.
2010ஆம் ஆண்டு மீள்குடியேறிய தமிழ் மீனவர்கள் தங்களது கரைவலைகள் சிங்கள மீனவர்களால் பயன்படுத்தப்படுவதைக் கண்டிருக்கிறார்கள்.
எங்களால் வரமுடியாது என்று தெரிந்து, வேண்டும் என்றே கூட்டம் நடத்தப்பட்டு எமது மக்களின் கரைவலை உரிமைகள் தென்பகுதி மீனவர்களுக்கு திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் மரியராசா.
“2009ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் திணைக்களத்தால் கரைவலை அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பாக கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. நாங்கள் யாரும் அதில் கலந்துகொள்ளவில்லை. இது வெளிமாவட்ட மீனவர்களுக்கு சாதகமாகிவிட்டது. கொக்கிளாய் பகுதியில் உள்ள தமிழர்களின் பெரும்பாலான கரைவலைகள் தென்பகுதி மீனவர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள்.”
கடற்தொழில் திணைக்களத்தின் தன்னிச்சையான தீர்மானங்களால் தமது மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் அவர் கூறுகிறார். நீண்டகாலமாக கரைவலை அனுமதியைக் கொண்டிருந்த தனேஸ்குமாரின் கடந்த 2016 ஆண்டுக்கான உரிமம் பறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான காரணத்தைக் கேட்டும் திணைக்களம் தங்களுக்கு கூறவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முல்லைத்தீவு வந்த கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தென்பகுதி மீனவர்களால் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்தபோது அனைத்துக்கும் தீர்வு காண்பதாக அவர் வாக்குறுதி அளித்துவிட்டு சென்றிருக்கிறார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர், அமைச்சின் மேலதிக செயலாளர், பிரதேச செயலாளர், கடற்தொழில் திணைக்களப் பணிப்பாளர்கள், சமாச மற்றும் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் பங்குபற்றலுடன் இடம்பெற்ற கூட்டத்தின்போது அமைச்சர் வழங்கிய உறுதிமொழிகள் இவை,
- அனுமதியின்றி அத்துமீறி வரும் மீனவர்கள் தொடர்பாக தேடிப்பார்த்து அடுத்த வாரமளவில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க குழுவொன்றை நியமிக்கிறேன். உடனடியாக அத்துமீறி வருகின்ற அனைத்து படகுகளையும் தடைசெய்யுமாறும் பணிக்கிறேன்.
- உடனடியாக வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிப்பதனை தடை செய்யுமாறும், மீறுபவர்களை கைதுசெய்யுமாறும் கடற்படையினருக்கு உத்தரவிடுகிறேன்.
- உழவியந்திரத்தின் மூலம் கரைவலை இழுப்பதனை தடைசெய்கிறேன்.
- ஒருவருக்கு 40 படகுகளுக்கு அனுமதி வழங்கினால் முதலாளிகளே உருவாகுவார்கள். சாதாரண வழிமுறை மூலம் அனைவருக்கும் படகு அனுமதி வழங்கப்படவேண்டும்.
- சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக எக்காரணம் கொண்டும் சட்ட நடவடிக்கை எடுக்காது விடுவிக்க வேண்டாம்.
- கரைவலைகளை 5-6 கிலோமீற்றருக்கு வளைக்க முடியாது. இது சட்டவிரோதமானதாகும்.
- Winch பயன்படுத்தப்படுவது தொடர்பாக அறிக்கை கோரியுள்ளேன். அவ்வறிக்கை வந்த பின்னர் அது தொடர்பான பாவனை தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும்.
இந்த உறுதிமொழிகளுக்கு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் எந்தவித சாதகமான மாற்றமும் இடம்பெறவில்லை. எமது மீனவர்களின் வாழ்வாதாரம் அடியோடு பிடிங்கியெரியப்பட்டுக் கொண்டிருக்கிறது. இனி யாரிடம் போய் நாங்கள் முறையிடுவது? - மரியராசா
எங்களிடத்தில் வந்து 6 மாதங்கள் தங்கியிருந்து தொழில் செய்யும் மீனவர்களின் இடத்திற்குச் சென்று எங்களால் ஒரு நாளைக்காவது மீன்பிடிக்க விடுவார்களா? - நடராஜா.
தென்பகுதி மீனவர்களால் பிரச்சினை வரும்போது பொலிஸில் சென்று நாங்கள் முறையிட்டதும், அவர்கள் முதலில் சிங்களவர்களின் வாடியினுள் சென்றுவிட்டு, திரும்பி வந்து எங்கள் மீது குற்றம்சுமத்துகிறார்கள். எங்களுக்கு ஒரு நீதி அவர்களுக்கு ஒரு நீதியா? - கமலேஸ்குமார்.