Loading

கண்டிக்கு வெளியில் எதிரொலிக்காத கதைகள்” "இரண்டே மாதங்களில் மறந்துபோன நினைவுகள்"

Text and images: Vikalpa/ Ishara Danasekara

“இது எனது மகளும் நானும் தினந்தோறும் உண்டியலில் சேர்த்த பணம். அலுமாரியில்தான் இருந்தது. எந்தவொரு பணத்தாளும் இப்போது இல்லை."

"நெருப்பினால் அகப்பட்டு எரிந்தவை போக எஞ்சிய சில்லரைகள் இவை."

மூச்சை அடக்கிக்கொண்டு மெளனமாக அவர் தமது கரங்களால் ஒவ்வொரு சில்லரைக் காசையும் தடவிக்கொண்டிருந்தார்.

அவரது மௌனத்தின் பின்னால் மாபெரும் துயரம் ஒளிந்திருப்பதை என்னால் உணரமுடிந்தது.

“எங்களுக்கு சிங்கள மக்கள் மீது கோபமில்லை.” அது அவர் என்னிடம் தெரிவித்த கடைசி வார்த்தையாகும்.

இப்போது யாருக்கும் ஞாபகமில்லை. அது மறதியை இயல்பாகக் கொண்ட ஒரு நாட்டின் தன்மையாகும். இரண்டு மாதங்கள் என்பது நினைவில் வைத்துக் கொள்வதற்கு சற்று அதிகமான காலமாகும். இங்கு கூறப்போவது யாராலும் கேட்டிறாத ஒரு கதையாகும். மறைந்து போன ஆத்மார்த்தமான ஒரு கதையாகும். சுகப்படுத்த முடியாத மென்மையான வேதனைகள் அதில் உள்ளடங்கியிருக்கிறது. இது கண்டியில் இரு மாதங்களுக்கு முன்னர் கேட்டும் கேட்காமல் போன, கண்டும் காணாமல் போன உயிர்களுக்கு செய்கின்ற மீள்பார்வையாகும்.

நீங்கள் எங்களிடம் இவ்வாறு கேட்கலாம், ஏன் இரண்டு மாதங்களுக்கு பிறகு எழுதுகின்றீர்கள், மீண்டும் குப்பையை கிளறவா என்று? உங்களுக்கோ எனக்கோ விருப்பமான நேரத்தில் இதை எழுதாமல் நாங்கள் சந்தித்த அந்த மக்கள் அவசியம் என கருதிய நேரத்தில்தான் இதை எழுதவேண்டியிருந்தது. தற்போது அங்கு உக்கிரம் இல்லை. உஷ்னம் இல்லை. ஊடகங்கள் செல்வது இல்லை. ஊடக அறிக்கைகளும் இல்லை. ஒட்டு மொத்தத்தில் கூறுவதாயின் மேலே கூறியது போன்று யாருக்குமே நினைவில் இல்லை.

அளுத்கமையில் நடந்ததும், ஜித்தொட்டையில் நடந்ததும், அம்பாறையில் நடந்ததும் இவ்வாறு தான். அதாவது உடனடியாக மறந்து விடுதல்.

முஸ்லிம்களை அடித்துத் துரத்தி தீயிட்டு சாம்பலாக்கும் நோயுக்கு இதுவரையில் சிகிச்சை முறையொன்று கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய் சிங்கள பௌத்தர்கள் என்று கூறித்திரிகின்றவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே தொற்றிக் கொண்டது. அந்தத் தொற்று பலருக்குப் பரவி பல உயிர்களையும் உடமைகளையும் அழித்தது மாத்திரமன்றி, 2018 கறுப்பு மார்ச் மாதமொன்றினையும் உருவாக்கி விட்டு வரலாற்றில் மேலுமொரு இழிவான அத்தியாயத்தினை இணைத்து விட்டது.

சிங்கள மக்கள் செறிந்துவாழும் குண்டசாலை, பல்லேகலை ஜனசவிகம பகுதிகளுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம் மக்கள் மீது, 24 மணித்தியாலமும் பொலிஸ் பாதுகாப்பு இருந்தவேளை மார்ச் மாதம் 7ஆம் திகதி இனவாத குண்டர் குழுக்களால் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து இங்கு விவாதிக்கப்படவுள்ளது. எம்முடன் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், பிள்ளைகள், ஆண்கள் என பேசினார்கள். அவர்களுடனான உரையாடலே இங்கு எழுதப்படுகிறது.

“21 வருடங்களாக நாங்கள் இங்குதான் இருக்கின்றோம். 1997இல் 50ஆவது சுதந்திர தின விழாவிற்கு இளவரசர் சார்ல்ஸ் கண்டிக்கு வருகைதந்த போது நகரை அழகுபடுத்துவது எனக் கூறி நகர அபிவிருத்தி அதிகார சபை கண்டி போகம்பரையில் வாழ்ந்து வந்த எமது 06 குடும்பங்களை நிரந்தர வீடு தருவதாகக் கூறி தற்காலிகமாக பிரேமதாஸ பல்லேகலை, கம்உதாவயில் இந்த களஞ்சிய அறையை எமக்கு தந்தார். அன்றிலிருந்து நாங்கள் இங்குதான் இருக்கிறோம்.”

மடவளை பகுதியில் கடையொன்றில் அன்றாடம் செலவுக்கு உழைத்து வாழ்கின்ற இந்த வீட்டுத் தொகுதியில் உள்ள முதலாவது வீட்டின் உரிமையாளர் இவரே. அவரது ஒருநாள் வருமானம் 700 ரூபாய் என்று அவரது மனைவியுடன் பேசிய போது அவர் என்னிடம் தெரிவித்தார். தீயினால் பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது அவருடைய வீட்டிற்கே.

“நான் வீட்டிலிருக்கும் போது சின்ன சின்ன உடைகளைத் தைத்தேன். எமது சிறு தேவைகளுக்கான செலவினை அதிலிருந்தே நான் தேடிக் கொண்டேன். இந்த அறையில் எனது தையல் இயந்திரம் இருந்தது. அங்கு பாருங்களே, அது எரிந்து போயுள்ள நிலையினை. நாங்கள் வரும் போது வீட்டின் நடுச் சாலையில் தான் தையல் இயந்திரம் இருந்தது. அவ்வாறு எப்படி நடந்தது என்று எமக்கு தெரியாது. நான் எப்படி இனிமேல் உடைகளைத் தைப்பேன் ? என்னால் தையல் இயந்திரம் ஒன்றை வாங்குவதற்கான வசதிகளும் இல்லை.”

அவ்வாறு தெரிவித்தது இந்த புகைப்படத்தில் உள்ள பெண்ணே.

அவ்வாறு கூறிய அப்பெண் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் என்ன சொல்வதென்று தெரியாமல் அப்படியே நின்றேன். எவ்வாறாயினும் அவள் சொல்லாத பல விடயங்கள் அவளது கண்களில் புலப்பட்டுக் கொண்டிருந்தது.

“எனது மகள் வீடு முழுவதுமாக மிக அழகாக மருதானிக் கோலங்களை வரைந்து வைத்திருந்தாள். இங்கு அனைத்து இடத்திலும் இருப்பது அவையே. அவள் மிகவும் வெட்க சுபாவம் கொண்டவள். இன்னும் அழகாக அனைத்து இடங்களிலும் ஏதேதோ செய்து வைத்திருந்தாள் அவள்.”

எனது கமராவில் பதிவாகிய புகைப்படங்களிலும் நீங்கள் காண்பது ஒரு சிலவற்றையே. ஆயினும், எரிந்து சாம்பலாகிப் போன வீடு முழுவதிலும் அதன் எச்சங்கள் பதிவாகியிருந்தது.

அங்கு தீ வைக்கப்பட்ட வேளையில் செயலிழந்து போயிருந்த கடிகாரமொன்று சுவரில் தொங்கிக் கொண்டிருந்துது. அதில் இறுதியாக காட்டிய நேரம் 8.15 ஆகும்.

அதற்கிடையில் சில தினங்களுக்கு பிறகு மீண்டும் நான் அவர்களது அக்கம் பக்கத்து வீட்டாரிடம் தொலைபேசி மூலம் சுக நலன்களை விசாரித்த வேளையில் அவர்கள் என்னிடம் நெஞ்சைப் பதைபதைக்கின்ற ஒரு தகவலைத் தெரிவித்தனர். அதாவது, என்னுடன் உரையாடிய அந்தப் பெண் சில தினங்களுக்கு பிறகு மனரீதியான பாதிப்பிற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதாகும்.

எரிந்துபோன தமது உண்டியலில் இருந்த சில்லறை நாணயங்களைப் பற்றி என்னிடம் தெரிவித்த அவரது கணவரும் இருதய சத்திர சிகிச்சைக்கு ஆளாகியிருந்த ஒரு நோயாளி என்பதால் அவரும் கூட பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். எவ்வாறாயினும் இரவு வேளைகளில் நித்திரை இன்மையாலும், தமது பரம்பரை வாயிலாக தமக்கு உரித்தாகியிருந்த சில ஆபரணங்களும் தீயினால் முழுமையாக எரிந்து சாம்பலாகிப் போன காரணத்தாலும் அவள் பெரிதும் கவலையில் இருந்தாள் என்பதனை நான் அங்கிருந்த போது அறிந்து கொண்டேன். தமது வீட்டாருடன் வன்முறையாக நடந்துகொண்ட தன்மையாலும் தொடர்ந்து தனியாகப் பேசிக் கொண்டிருக்கும் நிலைமையைக் கண்ணுற்ற பிறகே அவளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தாக்குதல் காரணமாக அழிவடைந்து போயிருந்த அவர்களது வீட்டிற்கு நாங்கள் சென்றிருந்த வேளையில் நிராகரித்த போதும் கூட அவள் வழங்கிய தேநீர் கோப்பையே அப்போது எனது நினைவிற்கு வந்தது. அவர்கள் அடைந்திருந்த துர்ப்பாக்கிய நிலைமையை நேரடியாகக் கண்டு அவர்களுக்கு மேலும் சுமையாகக் கூடாது என்ற காரணத்தினால் நான் அந்த தேனீர் கோப்பையை நிராகரித்தாலும் நான் அந்த தேனீரை அருந்துவது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு விடயம் என்பதனையும் நான் அறிந்து கொண்டேன். நான் எப்போதுமே கண்டிராத, கதைத்திராத இனத்தைச் சார்ந்த முஸ்லிம் பெண்மணியாகிய அவளிடம் இனத்தால் சிங்களவன் என பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் மூலமாக அடையாளப்படுத்திக் கொண்ட எனக்கு அளித்த மனிதாபிமான நட்பு திகைப்பிற்குரியதே. அவ்வேளையிலும் அவர்களது இனத்தைச் சார்ந்தவர்களுக்கு எனது இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ‘சிங்கள நாடித்துடிப்பு’ கொண்ட சிலர் மாபெரும் அழிவினை ஏற்படுத்தியிருந்தனர்.

"வீட்டில் ஒன்றுமில்லை. ஐயோ வந்தது எவ்வளவு பெரிய விடயம். மன்னிக்கவும், இவ்வளவு தான் தர முடியும். பிஸ்கட் ஒன்று கூட இல்லையே” எனக்கு பால் தேனீரைத் தயாரித்து தந்தவண்ணம் அவள் தெரிவித்தாள்.

நான் எங்கு சென்றாலும் பிளேன்டி அருந்தும் பழக்கத்தைக் கொண்டவளாக இருந்த போதிலும் எனது பழக்கத்தையும் ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு அதனை அருந்தினேன், அதுவும் ஒரு முஸ்லிம் வீட்டில். அங்கிருந்த ஒரே சிங்களவன் நான் மாத்திரமே. ஆனாலும் எந்தவொரு பயத்தையும் நான் அங்கு உணரவில்லை. அப்படி ஒரு பயத்தினை நான் உணரும் வகையிலான சந்தப்பமொன்றை அங்கிருந்த எந்தவொரு இனத்தவரும் கொடுக்கவில்லை. நான் அங்கு பெரும்பாலான வீடுகளுக்கு, கடைகளுக்கு, பள்ளிவாசலுக்கு என பல இடங்களுக்கும் தனியாகவே சென்றேன். அது சிங்களவர்களால் தீ வைக்கப்பட்டு, உடைக்கப்பட்டு அழிக்கப்பட்ட இடமாகும். ஆனாலும், அவர்கள் என்னுடன் எவ்வித மனக்கசப்பும் இன்றியே உரையாடினார்கள். எனது வருகை தொடர்பிலோ, நான் சிங்கள இனத்தைச் சேர்ந்தவள் என்பதாலோ எனக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனாலும், இதே நாட்டில் அவர்கள் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சினையாகி உள்ளது.

இது வெறும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சம்பவம் மாத்திரமா? இல்லை. இதுபோன்ற கதைகள் பலவற்றை நான் சந்தித்த எனது முஸ்லிம் தோழிகள் தெரிவித்துள்ளனர். தோழிகள் மாத்திரமா? இல்லை. இருள் சூழும் போது மகள் தன்னைத் தேடி வந்து ஒழிந்து கொள்வதாகவும், முகத்தை மூடிக் கொண்ட கோணிபில்லா இன்றும் வருமா என்று தம்மிடம் கேட்பதாக ஒரு தாய் என்னிடம் கூறினார். அவள் இப்போது எதற்கு முன்னாலும் செல்வதற்கு பயப்படுகிறாள் எனவும் என்னிடம் தெரிவித்தார்.

“இருள் சூழ்ந்திருந்தபோதிலும் நாங்கள் சமயலறை ஊடாக பின்னாலிருந்த தோட்டத்திற்குள் பாய்ந்து காட்டிற்குள் ஓடிச் சென்றோம். வேறு என்ன செய்வது? உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டாமா? எனது சின்னஞ் சிறு மகளுக்கு இப்போது 2 மாதங்களே ஆகின்றது. தூக்கிக் கொண்டு முடிந்தவரை ஓடினோம்."

கென்கல்ல விகாரை வீதியில் கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்ற வீட்டிலுள்ள தந்தை ஒருவரை நான் சந்தித்தேன். ஒப்பிட்டு ரீதியில் அவருடைய வீட்டுக்கு இடம்பெற்றிருந்ததோ சிறு சேதமேயாகும். ஆயினும், அவருடைய மனமும் உள்ளமும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு நிகழ்ந்தது மிகப்பெரும் அநீதி என்று இன்று எனக்கு தோன்றுகின்றது.

அவரது தாள்ளாடும் குரல் எனது மனதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றது. உரையாடிய தருணத்தில் அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவர் ஒரேயொரு விடயத்தினை மாத்திரம் இறுதியில் கூறிமுடித்தார்.

“மகள் நான் யாருக்கும் எவ்வித தவறையும் இங்கு செய்ததில்லை. இப்படிப் பயந்து வாழ்வதில் என்ன பயன்? இப்படிப் பயந்து வாழ்வது எதற்காக?” இது பாரதூரமான ஒரு வெளிப்பாடாகும்.

பயத்துடன் வாழ்வது என்றால் என்ன என்பது பற்றி மீண்டும் மீண்டும் பாடங்களை படித்திராத இந்த நாட்டு மக்களுக்கும், இந்நாட்டின் தலைவர்களுக்கும் நான் கூறவேண்டியதில்லை என்றே கருதுகின்றேன். ஆயினும், அவ்வாறான நிலைமைகளுக்கு இடமளித்து ஆட்சியாளர்கள் கைகட்டி பார்த்து நிற்பது நாட்டின் துர்ப்பாக்கியமே. எமது முஸ்லிம் சகோதரர் ஒருவர், சிங்களவர்களான எம்மைப் பார்த்து பயத்துடன் வாழ்வதை எமக்கு ஜாலியான ஒரு விடயமாக ஏற்றுக் கொள்வது எவ்வாறு என்று எனக்கு எவ்வகையிலும் புரியவில்லை. மறுபுறம் எமது தமிழ் சகோதரர் ஒருவர் காணாமல்போயுள்ள நிலைமை தொடர்பில் கதைக்கும் போது, “அவனுகளுக்கு அப்படித்தான் நடக்கனும்” என்றவாறு வசனங்களை உச்சரிக்க எவ்வாறு முடிகின்றது என்று எனக்கு புரியவில்லை.

சிலவேளை ஒருவருடைய தர்க்கத்திற்கு இவை வெறும் வேலைக்கு இல்லாத விடயங்களாக காணப்பட்ட போதிலும், மிக உன்னிப்பாக நாம் சிந்திக்க வேண்டிய நீண்டகால பிரச்சினைகளாக இவை மாறக்கூடும். இனவாத தாக்குதல்களால் சிக்குண்டு உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பாக நீண்டகால வேலைத்திட்டமொன்றை 2 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் அரசாங்கம் ஆரம்பித்துள்ளதா? இல்லையே. சிற்சில தொண்டர் அமைப்புக்கள் இது தொடர்பாக சிறு சிறு வேலைத்திட்டங்களை வெவ்வேறு இடங்களில் செயற்படுத்தினாலும் முறையான செயற்பாடொன்றின் தேவைப்பாடு இன்றும் அவசியமானதாகவே உள்ளது. அங்கு ஓர் இடைவெளி காணப்படுகின்றது. இம் மனரீதியான வேதனைகளின் இறுதி பிரதிபலன் என்னவாக இருக்கும்?

“எனக்கு ஹேர்னியா ஒபரேஷன் செய்து 2 வாரங்களே ஆகின்றது. நான் மட்டுமே வீட்டிலிருந்தேன். நான் ஓடி ஒளிந்துவிட்டேன். இல்லையென்றால் என்னையும் சேர்த்து எரித்திருப்பார்கள் என்ற பயத்திலே கூரையிலிருந்து பாய்ந்தேன். பிறகு எனக்கு உடம்பெல்லாம் வலியேற்பட்டதுடன், மயக்கம் வருவது போலவும் இருந்தது."

"இந்தப் பிள்ளைகளது ரீவி, டெக், கம்பியூட்டர், லெப்டொப் அனைத்துமே இங்குதான் இருந்தது. இப்போது ஒன்றுமில்லை” - இஸதீன், குடும்பத்தின் தந்தையாவார்.

"இவை எமது மாமாவின் பதக்கங்களும் புத்தகங்களும்."

எங்கிருந்தோ பாய்ந்தோடி வந்த குடும்பத்தின் பேரப்பிள்ளைகள் எனது கமராவிற்கு முன்னால் நின்று கொண்டனர். இவர்களது மாமா என்னுடன் சற்று வித்தியாசமான ஒரு கருத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் ஒரு இளைஞர். 21 வயதாகின்ற அவரது பெயர் ஐ.எம். நயீம் என்பதாகும். கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியில் உயர்தரக் கல்வியைப் பயின்ற அவர் சாதாரண தரம் வரையில் கல்வியைக் கற்றது குண்டசாலை விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்திலாகும்.

“இப்படிச் செய்வார்கள் எனில் நாம் எங்குதான் செல்வது, நாமும் இலங்கையில் வாழும் மனிதர்கள் அல்லவா. ஒரு சிலர்தான் இனவாதத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் முட்டாள்களாவர். எல்லோரும் பத்து பேருக்குள்தான் இருப்பார்கள். சிங்களமாயினும், முஸ்லிமாயினும், தமிழாயினும், பர்கராயினும் அவர்கள் தான் இதனைச் செய்வது. இறுதியில் அனைத்தையும் இழந்த நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். எல்லோரும் தெரிவிப்பது எமது வீடுகள் அழிந்தன, பொருட்கள் அழிந்தன என்றே. ஆனால் எனக்கு சொல்ல இருப்பதோ வேறு கதையே.”

“நான் இப்போது கணக்கு உதவியாளராக (Account Assistant) தொழில் செய்து வருகிறேன். எனது கல்விச் சான்றிதழ்கள், ஓலெவல், ஏலெவல் சான்றிதழ்கள் எல்லாமே எரிந்து விட்டன. அவற்றையென்றால் மீண்டும் பெற முடியும். ஆனாலும் நான் செய்த IT, AAT, ACC Course சான்றிதழ்களை எல்லாம் இழந்து விட்டேன். ஒன்றுமே மிஞ்சவில்லை. நடுத்தர வகுப்பு குடும்பமாக எனது குடும்பத்தை எண்ணி சொல்கிறேன். எமது குடும்பத்தில் ஏலெவல் முடித்த ஒரே பிள்ளையாக நான் மட்டுமே இருக்கிறேன். எனது வாப்பா மார்க்கட்டில் பிலாக்காய் விற்பனை செய்கிறார்.”

“இந்த பாடநெறிகளை செய்வதற்கு இலட்சக் கணக்கில் செலவானது. வாப்பா மற்றும் வெளிநாட்டிலிருக்கும் நானாமார் சிறிது சிறிதாக சேகரித்த பணத்தைக் கொண்டே நான் படித்தேன்.. எனக்கு ஒரு திட்டம் இருந்தது டிக்ரியை முடிப்பதற்கு. இப்போது எல்லாமே முடிந்து விட்டது. நான் படித்த நபரா படிக்காதவரா என்று இந்தத் தொழிலை விட்டு வேறு தொழிலுக்குச் செல்லும் போது எப்படி காண்பிப்பது. எல்லாமே எரிந்து போய்விட்டது.”

“தம்பி இந்தமுறை ஏலெவல் எழுதவுள்ளார். அவருடைய ஒரு புத்தகம் கூட மிஞ்சவில்லை. அவருக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். குறிப்புகளையும் தருவார்கள். ஆனால், அவர் அதனை இப்போது கைவிட்டு விட்டார். அவருடைய மனம் வெருப்படைந்து உள்ளது. அவர் தொழிலுக்குப் போகப் போகிறாராம். பிறகு என்ன... மீண்டும் கூலித் தொழிலுக்கு தான் செல்ல வேண்டும்.”

அவரது மூத்த சகோதரியான இஸதீன் பாத்திமா நதீரா தமது இரண்டாவது பிள்ளையை பிரசவிக்க இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளது. அவருடைய கதையே இது.

“தந்தை எனக்காகவே அமைத்துத் தந்த அறை இது. குழந்தையும் கிடைக்கவுள்ளது. அனைத்து பொருட்களையும் வாங்கி விட்டோம். அவசரத்தின் காரணமாக எனது பிறப்புச் சான்றிதழையும், கிளினிக் அடடையையும் மட்டுமே நான் எடுத்துச் சென்றேன். நான் வந்து பார்க்கும்போது எனது மருந்திலிருந்து எல்லாமே சாம்பலாகியிருந்தது. பிள்ளையின் பாடசாலை பேக்கும் சாம்பலாகி விட்டது. அவளை பாடசாலைக்கும் அனுப்ப வழியின்றி இருக்கிறோம். உடையிலிருந்து எல்லாமே எரிந்துவிட்டது. இன்று மாற்று உடைகூட இல்லாத நிலையில் இருக்கின்றோம்.”

இன்னும் பல விடயங்களை அவள் என்னிடம் தெரிவித்தாள். கென்கல்ல, பலகொல்ல, திகன, தெல்தெனிய, அம்பதென்ன இவ் அனைத்து பிரதேசங்களிலும் நான் சந்தித்த அனைத்து நபர்களும் என்னிடம் நிறைய விடயங்களைத் தெரிவித்தனர். அவற்றை எழுதுவதாயின் ஆயிரம் பக்கங்களும் போதாது. ஆயினும், இவ் ஆயிரம் சம்பவங்களும் காலத்துடன் மறைந்தே இருக்கின்றது. அவை கண்டிக்கு வெளியில் எதிரொளிக்காத கதைகள் என்றே நான் உங்களுக்குக் கூறுகின்றேன். அவற்றுக்கு நூற்றுக்கு நூறு வீதம் தீர்வுகளைக் காண முடியாது என்பதனை நானறிவேன். ஆயினும், அவற்றின் வேர்களுக்கு சந்தர்ப்பம் அளித்த, இடமளித்த, அவை பரவிச் செல்வதற்கு வழிசமைத்த பிரதான காவிகளுக்கு அரசானது வழங்கிக் கொண்டிருக்கும் அனுசரனையானது மிகவும் இழிவானது. அதனூடாக புரிந்து கொள்ளக் கூடியது இவை எதுவுமே அரசிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அல்ல என்பதுவே.

மற்றையது இந்த மக்கள் வாழ்கின்ற வீட்டுத் தொகுதிக்கு முன்னால் கண்ணுக்கு தெரிகின்ற தூரத்தில், 100 மீற்றர் தூரத்தை விடக் குறைந்த தூரத்தில் தெரிவது மத்திய மாகாண முதலமைச்சராகிய சரத் ஏக்கநாயக்க அவர்களது பிரத்தியேக வாசஸ்தலமாகும். பாதுகாப்பு கமராக்கள், பாதுகாப்பு அலுவலர்கள் இந்த வீட்டிற்கு அருகில் உள்ளனர். ஆயினும், இந்த சம்பவங்கள் இடம்பெற்ற பிறகேனும் தமது அந்த மக்களைப் பார்ப்பதற்கோ ஆகக் குறைந்தது தம்முடன் ஒருசில வார்த்தைகளையேனும் பேசுவதற்கோ அவர் வருகை தராதது தொடர்பில் அனைத்து தரப்பினர்களாலும் வேதனையுடன் தெரிவிக்கப்பட்டது.

இவை ஒருபுறமிருக்க கண்டியிலிருந்து நேரடியாக திகனைக்கு தமது கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட காரில் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், அந்தப் பகுதிக்கே செல்லாத மல்வத்தை மற்றும் அஸ்கிரிய தரப்பினரை மாத்திரம் சந்தித்து விட்டு வந்த மேதகு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி அவர்களுக்கும் இன்று இந்த எந்தவொன்றும் வேலைக்கில்லாத ஒன்றாக ஆகியது ஏனென்று நானறியேன். இனவாதத் தீயைக் கொளுத்திய மாபெரும் வீரர்களது திறமைகளுக்கு இணையாக மக்களது வரிப் பணத்திலிருந்து ஏதாயினும் நஷ்ட ஈட்டை இந்த மக்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் “செப்டர் குளோஸ்” ஆகிவிடுகிறது.

ஆனால் அது அப்படியா?

ஆனால், நாம் காண்பது இந்த அரசானது பாம்பினை மடிக்குள் போட்டுக் கொண்டு தாளாட்டி, சீராட்டி, வளர்த்தெடுத்து பிறகு உலகிற்கு தெரியும் வகையில் கடிக்கிறது கடிக்கிறது என்று கத்துகின்ற ஒரு நாடகத்தை நடாத்துகின்றது என்பதாகும். இல்லையெனில் நல்லாட்சி அரசில் காவியுடுத்திய குண்டர்களால் “முஸ்லிம்களை தாக்குவோம்” என பிரசித்தமாக கூறுகின்றவர்களை அகிம்சை மற்றும் சமத்துவத்தினை உலகிற்கு உபதேசித்த புத்த பகவானின் பிறப்பு, இறப்பு, முக்தியடைதலை நினைவு கூறும் அரச வெசாக் நிகழ்விற்கு திடீரென வந்திறங்க முடியாதே. ஏனைய வியடங்களைப் பற்றி பேசுவது மேலும் அவசியமற்றதே. இவ்வாறான சம்பவங்களை மீண்டும் மீண்டும் எழுதும் நிலைமை எமக்கு ஏற்படாதிருக்க வேண்டும். ஆயினும், மாறுகின்ற அமைச்சரவை தலைகளாலும் அல்லது பெரிய இடங்கள் இரண்டிலும் கூட அது நடைபெறும் என்ற அறிகுறியேனும் தெரிவதற்கில்லை.

இறுதியில் இவ்வாறு எழுதுகின்றேன். என்னுடன் இந்தப் பயணங்களின் போது நட்பு கொண்ட முஸ்லிம் நண்பரொருவர் புதுமையான கருத்தொன்றைத் தெரிவித்தார். அது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் திகன பள்ளிவாசலுக்கு வந்த வேளையில் இடம்பெற்றதொன்று. அவரது வருகையை எனது நண்பர் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த வேளையில் பார்த்துக் கொண்டிருந்த பிரதமர் அவரை அழைத்து அது என்ன சொக்லெட் துண்டா? என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டுள்ளார். அவரது கைகளில் அப்போது இருந்தது GOPRO இன கமராவாகும். தொழில்நுட்ப கருவிகளைப் பற்றி அறியாதிருப்பது தவறோ, சிரிக்கும் வகையிலான ஒரு விடயமோ அல்ல. மற்றையது அவை அனைத்தையும் பற்றி அனைவரும் ஒரே விதமாக அறிந்து கொள்ளவும் முடியாதது புதுமையும் அல்லவே.

தொழில்நுட்ப அறிவு எவ்வாறாயினும் அரச நிர்வாகத்தின் போது எமக்கு வரவுள்ள மற்றும் வந்துள்ள புதிய விளைவுகளை அறிந்து கொள்வதற்கு எமது ஆட்சியாளர்களுக்கு பொருத்தமான அறிவு இருக்க வேண்டும். அரச நிர்வாகத்தின் முதிர்ச்சி இருப்பது அவ்விடத்தில் தான். தலைக்கவசம் அணிந்த, முகத்தை மூடிக்கொண்டு வரும் குண்டர்களது அடுத்த வருகையானது சொக்லட் துண்டைப் போன்று இனிப்பானதாக அமைய வாய்ப்பில்லை. அவற்றுக்குத் தயாராக வேண்டும். ஆனால், அந்தத் தயார்நிலை நிகழ்கால அரசாங்கத்திடம் துளியேனும் இல்லை.

இன்று நல்லாட்சி தோல் போர்த்திய இந்த ஆட்சியாளர்கள் எவரிடத்திலும் அல்லது அதற்கென மத்தியஸ்தம் செய்ய வேண்டிய இலங்கைப் பிரஜைகளில் பெரும்பாலானோருக்கோ அந்தத் தேவை உள்ளதா என்பதனை விட அதற்கான உண்மையான மனநிலையேனும் இல்லை என்றே திருப்பிக் கூற வேண்டியுள்ளது. அதற்குப் பதிலாக வலிகள் மாத்திரமே அனைத்து இடங்களிலும் எஞ்சியுள்ளது.

மொழிபெயர்ப்பு 'Maatram'

இங்கு தரப்பட்டுள்ள படங்கள் அனைத்தும் இஷாரா தனசேகரவால் எடுக்கப்பட்டுள்ளதுடன், 'vikalpa' தளத்தின் அனுமதியின்றி மீள்பதிப்பு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

NextPrevious

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.