2017ஆம் ஆண்டு ‘மாற்றம்’ பல்வேறு விடயப் பரப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. முஸ்லிம் தனியாள் சட்டத்தால் பாதிப்புக்குள்ளான பெண்களின் குரல்கள், சூழல் பாதுகாப்புக்காகப் போராடி சுட்டுக்கொல்லப்பட்ட கேதீஸ்வரன், புதிதாக செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தினால் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள், காணாமலாக்கப்பட்டவர்களின் வருகைக்காக காத்திருக்கும் உறவுகள், நீர் அசுத்தமாவதைக் காரணம் காட்டி 5 – 6 தலைமுறைகளாக வாழ்ந்து வந்த தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றத் திட்டமிடும் அரச நிறுவனங்கள், சட்டவிரோதமாக தென்னிலங்கையிலிருந்து மீனவர்கள் வருகின்றமையினால் முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள், தேயிலைக் கொழுந்து பறிப்பதனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நிரந்தர காயங்கள், கேப்பாபிலவு மக்களின் தொடர் போராட்டம் என களக்கட்டுரைகளை கடந்த வருடம் பூராகவும் ‘மாற்றம்’ வெளியிட்டிருந்தது. அவற்றுள் தெரிவுசெய்யப்பட்ட புகைப்படங்களை தொகுத்து தந்திருக்கிறோம்.
இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது இலங்கையில் வலுத்துவருகிறது. அரசியலமைப்பின் 16ஆவது அத்தியாயம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் கொண்ட ஒரு சட்ட ஏற்பாடாகக் கருதப்படுவதால் அது நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை சீர்த்திருத்தத்தை வலியுறுத்தி போராடிவருபவர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியிருக்கும் பெண்களை ‘மாற்றம்’ நேர்க்காணல் கண்டிருந்தது. “நீதியைத் தேடும் பெண்கள்” என்ற தலைப்பில் 7 நேர்க்காணல்கள் முதல் பாகத்தில் வெளியாகியிருந்தன. அவற்றுள் கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளியான காணொளியைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
யாழ்ப்பாணம் வடமாராச்சி தபால் நிலையத்தில் பணியாற்றி வந்த கேதீஸ்வரன் தான் பிறந்த சூழலை நேசித்த சூழலியலாளராவார். அரசாங்க ஆதரவுடன் யாழ்ப்பாணம் குடத்தனைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மணல்கொள்ளைக்கு – இயற்கை அழிவுக்கு எதிராக முன்னணியில் நின்று செயற்பட்டவர் கேதீஸ்வரன். இது தொடர்பாக அவர் அரச அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், ‘பேஸ்புக்’ சமூக ஊடகத் தளம் ஊடாக பயமின்றி, தனது கருத்தை சமூகமயப்படுத்தவும் செய்தார். அச்சுறுத்தல், பயமுறுத்தலைக் கண்டு பின்வாங்காத கேதீஸ்வரன், குடத்தனை மணல் வளத்தைப் புகைப்படமாக்கி “குடத்தனை மணல்வளம் அழிப்பு” என பேஸ்புக்கில் பதிவேற்றி அனைவரது கவனத்தையும் ஈர்க்க முயற்சிசெய்தார். அவருடைய போராட்டத்துக்கு என்ன நேர்ந்தது, அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக மேலும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.
பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, தை மாதத்தின் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. மக்களுடன் ஒன்றி வாழ்வதற்காகவும், உழவுக்கு உயிரூட்டுவதனாலும் காலநடைகளுக்கு நன்றி தெரிவித்து இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முக்கியமாக, மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுவது தமிழர்களின் மரபு. இலங்கையிலும் குறிப்பாக மலையகத்திலும் மாட்டுப்பொங்கள் விழா சிறப்பாக இடம்பெறுவது வழக்கம். மஸ்கெலியா, பிறவுண்ஸ்விக் தோட்டத்தில் மக்கள் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடியதை ஒலி ஒளிப்படம் ஊடாக பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்.
முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் படி தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறதா என அறிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு 4 மாதங்கள் கடந்து ‘மாற்றம்’ தொழிலாளர்களைச் சந்தித்திருந்தது. ஆனால், தோட்டத் தொழிலாளர்களோ செய்துகொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தின் படிகூட தங்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள். இம்முறை புதிதாக சேர்க்கப்பட்ட உற்பத்தித்திறன் கொடுப்பனவான ரூபா 140 ஐ திட்டமிட்டே இல்லாமல் செய்வதாகவும், இதனால், பழைய கூட்டு ஒப்பந்த சம்பளத்தை விட குறைவாகவே கிடைப்பதாகவும் விரக்தியுடன் கூறுகிறார்கள். அவர்களுடைய கருத்துக்களை மேலும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.
தங்கள் வாழ்விலும் நிச்சயமாக மாற்றம் ஒன்று நிகழும் என்ற நம்பிக்கையுடன், காணாமலாக்கப்பட்ட பிள்ளைகள், கணவர் வீடு வந்துசேர்வார்கள், விடுதலை செய்யப்படுவார்கள், இல்லையென்றால் அவர்கள் இருக்கும் இடத்தையாவது அறிந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி பெண்கள் மாற்றத்திற்காக துணிந்து நின்றார்கள்.
ஆனால், அந்த மாற்றத்தின் வரவை எதிர்பார்த்து இரண்டு வருடங்கள் கடந்தும் இன்றுவரை அவர்கள் வீதியில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உள்ள வீதிகள் அவர்களின் நிரந்த வசிப்பிடங்களாக மாறிவிட்டன.
நடைபிணங்களாக வாழும் அவர்களின் கதைகளை இங்கு கிளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்.
அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை, மொனறகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 150 வருடங்களாக - 5, 6 தலைமுறைகளாக - விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை பிரதான ஜீவனோபாயமாகக் கொண்டு வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களின் காணிகளை தற்போது பறித்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இயற்கை நீருற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை வனப் பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொண்டுவருகிறது. இந்தச் செயற்பாட்டிற்கு உள்ளூராட்சி நிறுவனங்கள், மாவட்ட செயலகம் என அனைத்தும் களத்தில் இறங்கியுள்ளன. இது தொடர்பாக மேலும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.
மொனறாகலை, மொனறகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் காணி பறிபோகும் நிலைக்கு முகம்கொடுத்திருப்பவர்களில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான முருகையா ஜெயராமும் ஒருவர். அவர் என்ன கூறுகிறார் என்பதைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
வருடந்தோறும் முல்லைத்தீவு மாவட்டத்தை நோக்கி அனுமதி அளிக்கப்படாத பெருமளவான தென்னிலங்கை மீனவர்கள் படையெடுத்து வருகிறார்கள். மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாத முடிவுவரை இங்கு தங்கியிருந்து அவர்கள் மீன்பிடித்து வருவதால் இந்தக் காலப்பகுதியில் முல்லைத்தீவு மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மிகுந்த கஷ்டத்துக்கு முகம்கொடுத்து வருகிறார்கள்.
பூர்வீகமாக மீன்பிடித் தொழில் செய்துவரும் தமிழ் மக்களின் மீன்வளத்தை அள்ளிக்கொண்டு செல்வதற்கு 500இற்கும் மேற்பட்ட படகுகளில் வரும் மீனவர்கள், கூட்டுறவு சங்கங்களின் சட்டங்களையும், கடற்தொழில் திணைக்களத்தின் சட்டவிதிகளையும் ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை. இந்தச் சட்டவிரோத செயற்பாட்டுக்கு அரசாங்கமும், அதன் நிறுவனங்களும் துணைபோவதாக முல்லைத்தீவு மீனவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சிலாபம் பகுதியில் பருவகாலம் முடிவடைந்தவுடன், முல்லைத்தீவை நோக்கி இவர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், முல்லைத்தீவு மீனவர்களோ தங்களது பருவகாலத்தையும் பகிரவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய கண்ணீர்க் கதையை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்களுடைய அன்புக்குரியவர்களுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுடைய நினைவுகளுடன், அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன், அவர்கள் நடந்துதிரிந்த இடங்களுடன், அவர்கள் பழகிய மனிதர்களுடன்.
புகைப்படக்கட்டுரை ஒன்றுக்காக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க வட மாகாணத்துக்குச் சென்றிருந்தேன். அவர்களிடம், “படம் ஒன்டு புடிக்கவேணும், மகன் நினைவா ஏதாவது பொருள் இருக்கா?” என்று நான் கேட்டேன். அதற்கு, கண்ணீர் வெடித்து அவர்கள் அழுத அழுகை, சொற்களுக்குள் அடக்காத துயரமாகும்.
பாதுகாப்பாக, பத்திரமாக வைத்திருந்த பொருட்களை கண்ணீரில் நனைத்தவாறே கொண்டு வந்தார்கள். மீண்டும் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் துப்பாக்கி ரவைகளுக்கு, ஷெல்களுக்கு மத்தியில் காப்பாற்றிவிட்டோமே என்ற பெருமூச்சுடன் கூட்டிச்சென்ற உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தவர்கள் இன்று பரிதவித்து நிற்கிறார்கள்.
அந்தப் பெருந்துயரத்தை நெஞ்சில் ஏந்தியிருக்கும் உறவுகளின் கதையே இது.
இரண்டு பாகங்களாக இந்த ஒலி ஒளிப்படக்கட்டுரை வெளியாகியிருந்தது. பார்க்க, பாகம் - 1, பாகம் - 2
16 வயதில் கொழுந்து பறிக்கச் சென்றிருக்கிறார் தனலெட்சுமி. அவரது கை விரல்கள் வருடக்கணக்காக மழை பெய்யாமல் பிளந்திருக்கும் நிலத்தைப் போல இருக்கிறது. பிளந்திருக்கும் வழியினூடாக வடிந்தோடியிருக்கும் தேயிலைச் சாய அடையாளங்கள் இரத்தம் வெளியேறிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது.
தோட்டத் தொழிலாளி ஒருவர் சராசரியாக 30 வருடங்கள் வேலை செய்பவராக இருந்தால் அவரது விரல்களில் ஏற்படும் காயங்கள் நிரந்தரக் காயங்களாகின்றன. அவர்கள் தங்களுடைய அன்றாட வேலைகளைக் கூட செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.
இந்தப் புகைப்படக்கட்டுரை கொழுந்து பறிப்பதனால் தோட்டத் தொழிலாளர்களின் கைகளில் ஏற்பட்டிருக்கும் நிரந்தர அடையாளங்களான காயங்களை புகைப்படங்களூடாகக் காட்டுவதற்கான முயற்சியை எடுத்துள்ளது. இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தே இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது.
இங்கு கிளிக் செய்வதன் ஊடாக புகைப்படங்களையும் கட்டுரையையும் பார்க்கலாம்.
21 நாட்கள் வேலைக்கு சமூகமளிக்க முடியாமை, நிர்ணயிக்கப்படும் அளவுக்கு கொழுந்து பறிக்க முடியாமை, செலவுகள், கடன்கள், பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக தோட்டத் தொழிலாளி ஒருவர் தெரிவிக்கும் கருத்தை பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்.
கேப்பாவிலவில் உள்ள தங்களுடைய பூர்வீகக் காணிகளுக்குள் கால்பதிக்காமல் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என மக்கள் இரவு பகலாக இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள். பல தடவைகள் தொகுதி தொகுதிகளாக காணிகள் விடுவிக்கப்படுகின்ற போதிலும் முழுமையாக காணிகளை விடுவிப்பதற்கான முடிவினை இன்னும் அரசாங்கம் எடுக்கவில்லை. போராட்டத்தை மழுங்கடிப்பதற்கான நடவடிக்கையாகவே தாங்கள் இதனைக் கருதுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் கூறுகிறார்கள். அவர்களின் இன்னல்களடங்கிய குரல் பதிவை இங்கு கிளிக் செய்தவதன் ஊடாகப் பார்க்கலாம்.
“நீதியைத் தேடும் பெண்கள்” என்ற தலைப்பில் இரண்டாவது தொகுதி நேர்க்காணல்களை ‘மாற்றம்’ டிசம்பர் 10 மனித உரிமைகள் தினமன்று வெளியிட ஆரம்பித்தது. தன்னுடைய விருப்பமில்லாமல் திருமணம் செய்து வைத்தமையால் தான் சந்தித்துவரும் துன்பங்கள் குறித்து இந்தப் பெண் பேசுகிறார். அதனைப் பார்க்க கிளிக் செய்யவும்.