படங்கள்: அமலினி டி சேரா
காலை 10.30 மணியிருக்கும். மஸ்கெலியாவின் ஸ்திரஸ்பே தோட்டத்தில் உள்ள தோட்டத் தொழில்துறை அபிவிருத்திக்கான சமூக நிறுவகத்தினால் நிர்வகிக்கப்படும் ஆரம்பப் பாடசாலையில் ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வரிசையில் நிற்கின்றனர்.
முதலில் ஆண்பிள்ளைகள், பின்னர் பெண்பிள்ளைகள் என வரிசையாக நிற்கின்றனர். அந்த ஆரம்பப் பாடசாலைக்கு என மலசலகூடம் எதுவுமில்லை. மலசலகூடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிலப்பகுதிக்கு அருகாமையில் இரசாயனங்கள் சேமிக்கும் கட்டடம் ஒன்று அமைந்துள்ளதால் அரசாங்கம் மலசலகூடம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன் காரணமாக அவர்கள் திறந்த வெளியில் உள்ள கால்வாயை பயன்படுத்தவேண்டியுள்ளது.
அதன் பின்னர் அவர்கள் தங்கள் மதிய உணவை திறக்கின்றனர். 2002 இல் கல்வியமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட மதிய உணவு திட்டத்தின் படி இந்தப் பிள்ளைகளுக்கு பாலும் உணவும் வழங்கப்படவேண்டும். ஆனால், இந்த ஆரம்பப் பாடசாலைக்கு கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் அதற்கான நிதி கிடைக்கவில்லை. 2015 இல் வெளியான உலக வங்கியின் அறிக்கையொன்று தேசிய பாடசாலை உணவூட்டல் கொள்கையொன்றின் அவசியம் குறித்து குறிப்பிட்டிருந்தது. அதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
ஆனால், ஆசிரியர்கள் இரண்டு மாணவர்களை சுட்டிக்காட்டுகின்றனர். ஒருவர் மதிய உணவிற்கு ரொட்டியும் வாழைப்பழமும் கொண்டுவந்திருக்கின்றார். மற்றைய மாணவன் நூடில்ஸ் கொண்டுவந்திருக்கின்றார். இவை இரண்டுமே பாடசாலையில் ஒட்டப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட உணவு திட்டத்திற்கு முரணானவை.
ரொட்டியே அனேகமாக தோட்டப்பகுதிகளின் உணவானகக் காணப்படுகின்றது. அனேக தோட்டப்பகுதிகளில் இந்த நிலையே உள்ளது. கிரவுண்ட்வியுஸினால் பேட்டி காணப்பட்ட தொழிலாளர்கள், நாளாந்தம் ஒரு தடவையாவது ரொட்டியை உண்பதாகக் கூறினார்கள். ரொட்டி என்பது குழந்தைகளுக்கு எந்தவித சத்தியினையும் கொண்டிருக்காததால் ஆசிரியர்கள் தற்போது இந்த மனோநிலையை மாற்ற முயல்கின்றனர். அராசங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட சத்துணவுத் திட்டங்கள் என்பன அனேகமாக சோறு, காய்கறிகள் மற்றும் பலவகைப் பழங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இது தோட்டத் தொழிலாளர்களாக உள்ள தாய்மார்களுக்கு மேலதிக சுமையாகக் காணப்படுகின்றது. இப்போது அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சத்தான உணவையும் தயாரிக்கவேண்டும். அத்துடன், தொழில் பார்க்கவும் செல்லவேண்டும்.
“நாங்கள் பலவகையான உணவுகளை அறிமுகம் செய்ய முயல்கின்றோம்” எனக் கூறுகிறார் பதுளையின் மேமலை தமிழ் வித்தியாலயத்தின் உப அதிபர் திருச்செல்வம். “அரசாங்கம் எங்களுக்கு உணவுத்திட்டமொன்றை வழங்கியுள்ளது. இதனடிப்படையில் நாங்கள் திங்கட்கிழமை மஞ்சள் சோறு, உருளை கிழங்கு, சலட் இலை, சம்பல் மற்றும் முட்டை, தக்காளி வழங்கவேண்டும். செவ்வாய்க்கிழமை சம்பா அரிசி, கரட் போன்ற காய்கறி, மீன் அல்லது நெத்தலி - புதன்கிழமை கடலையும் பழங்களும் - வியாழக்கிழமை இடியப்பம், பருப்பு, முட்டை, பழங்கள் - வெள்ளிக்கிழமை பிள்ளைகள் இட்லி, தோசை போன்றவற்றை கொண்டுவரலாம்” என்கிறார் அவர். ஒவ்வொரு வாரமும் இதனை மாற்றிக்கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் கூறுகிறார்.
பாடசாலைக்குக் கொண்டுசெல்ல குழந்தைகளுக்கு சோறு சமைக்கவேண்டியுள்ளதால் ரொட்டியை செய்வது எங்களுக்கு மேலதிக சுமை. ஆகவே, நான் வழமையாக சோறு அல்லது இட்லி செய்வேன். அது எனக்கு இலகுவான விடயம் என்கிறார் ஸ்பிரிங் வெலியில் உள்ள தோட்டத் தொழிலாளரான இராமையா சீத்தா
“பலசரக்கு பொருட்கள் வாங்கவே மாதம் 10,000 ருபாவுக்கு மேல் செலவாகிறது. அரிசி மரக்கறிக்கு வாரம் ஆயிரம் ரூபாயை செலவிடவேண்டியுள்ளது. மீன், இறைச்சி வாங்கினால் இதனை விட அதிக செலவாகும். முன்னர் நாங்கள் வாங்கும் சம்பளத்தில் இவற்றை வாங்கக்கூடியதாக இருந்தது. ஆனால், இப்போது நாங்கள் சேமிக்கவும் வேண்டும். அதனால், நாங்கள் செலுத்தவேண்டிய தொகையில் அரைவாசியை செலுத்தி விட்டு மிகுதியை அடுத்த மாதம் தருகிறோம் எனக் கூறியே கடைக்காரரிடம் பொருட்களை வாங்குவோம். கடைக்காரர்கள் நம்பிக்கை காரணமாகவே பொருட்களை தருகிறார்கள்” என அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
2011 இல் வெளியிட்ட அறிக்கையொன்றில் தொழிலாளர்களின் சம்பளத்தில் 70 வீதம் உணவிற்கே செலவாவதாக யுனிசெவ் தெரிவித்திருந்தது.
அரசாங்கத்தின் நிதியுதவியைப் பெறும் பாடசாலைகளில் கூட பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சத்தான உணவுகளை வழங்க சிரமப்படுகின்றனர். மஸ்கெலியாவில் உள்ள பாடசாலையொன்று அரசாங்கத்திடமிருந்து வவுச்சர்கள் மூலம் நிதி உதவியைப் பெறுகின்றது. அவர்கள் அதனை உணவிற்காக மாற்றிக்கொள்ளலாம். எனினும், இது குறைந்த தொகை எனவும், அதாவது, தலா ஒரு பிள்ளைக்கு 28 ரூபாதான் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஒரு முட்டையின் விலையே 20 ருபாவாக சில வேளைகளில் காணப்படுவதால் சில குடும்பங்களால் தங்கள் பிள்ளைகளுக்கு வேறு எதனையும் மேலதிக உணவாக வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது. 2015இல் மாற்றுக்கொள்கை நிலையம் மேற்கொண்ட ஆய்வின் போது மலையகத் தமிழர்களில் 27.6 வீதமானவர்கள் தங்கள் உணவுத்தரத்தில் விட்டுக்கொடுப்பை செய்யவேண்டிய நிலையில் இருந்துள்ளார்கள் என்று தெரியவந்தது. அதேவேளை குறைந்த சம்பளம் காரணமாக 18.4 வீதமானவர்கள் தங்கள் உணவுகளை குறைத்துக்கொண்டுள்ளனர் என்றும் ஆய்வில் தெரியவந்தது.
“இந்த ஊட்டச்சத்து அட்டவணைகளை முதல் இரண்டு வாரங்களிற்கே நடைமுறைப்படுத்த முடியும். அதற்குப் பின்னர் அது சாத்தியமில்லை. இதன் காரணமாக இறுதி இரண்டு வாரங்களும் பிள்ளைகள் பிஸ்கட்டே கொண்டுவருகின்றனர்” என அந்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தெரிவிக்கின்றார். “சூன் பாண்” கலாச்சாரம் என அழைக்கப்படும் கலாச்சாரமும் மலையகத்தில் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன் காரணமாக பல பெற்றோர் பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே பிள்ளைகளுக்கு கொடுக்கிறார்கள் என மலையகத்திற்கான சமூக சேவை (Community Development Services for Plantations) என்ற அமைப்பு தெரிவிக்கின்றது.
இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது மலையத்திலேயே குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறப்பது அதிகமாகக் காணப்படுகின்றது. 2200 கலோரிக்கு குறைவாக உணவு உண்பதும், 8 மணித்தியாலத்திற்கு குறைவாகவே உறங்குவதும், கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்பகாலத்தில் நாளொன்றிற்கு 2.5 மணித்தியாலத்திற்கு மேல் ஒரே இடத்தில் நிற்பதும், உடல் நிறை குறைவாக உள்ளதுமே இதற்கு காரணமாகும். இதன் காரணமாக மலையகத்தில் பிறந்த குழந்தைகள் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளை விட மூன்று மடங்கு வளர்ச்சி குறைந்தவர்களாகவும் நகரப்பகுதி குழந்தைகளை விட எடை குறைந்தவர்களாகவும் காணப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதேவேளை, 50 வீதமான பெரியவர்களும் ஊட்டசத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. வயது மற்றும் பாலின ரீதியான கலோரி ஒதுக்கீட்டிற்கான ஆதாரங்களும் உள்ளன.
பேராதனைப் பல்கலைகழகம் 2013 இல் நடத்திய ஆய்வின் மூலம் ஊட்டச்சத்தின்மை என்பது ஆரம்பப் பாடசாலை பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவந்தது. தமிழ் மற்றும் கணிதம் போன்ற பாடங்களிலும் தாக்கம் ஏற்படும் என்பதும் தெரியவந்தது. மேலும், இது நீண்டகால வாழ்க்கைத் தரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தோட்டத் தொழிலாளர்களான தாய்மார்கள், அவர்களால் முடியாவிட்டாலும் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த சத்தான உணவை வழங்க முயல்கின்றனர். எனினும், நிதி நெருக்கடி என்பது தாங்க முடியாத கட்டத்தை அடைந்ததும் சில குழந்தைகள் பாடசாலைகளில் இருந்தே விலகி விடுகின்றன. குறிப்பாக பத்தாம் வகுப்பில் இது இடம்பெறுகின்றது. அவர்கள் தோட்டத்தில் அல்லது கொழும்பில் வேலை பார்க்கத் தொடங்குகின்றனர்.
தேயிலை தோட்ட முகாமைத்துவம் 150 வருடங்களைக் கடந்துள்ள போதிலும் சுகாதாரம், தொடர்ச்சியான உணவு போன்ற அடிப்படை போன்றவை கூட பல தோட்டத் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் பெரும் போராட்டமாகக் காணப்படுகின்றது. இது முழு சமூகத்தையும் நோய் அபாயத்தில் தள்ளிவிடுகின்றது. சிறுவர்களில் இது ஆரம்பத்தில் தாக்கத்தை செலுத்த ஆரம்பிக்கின்றது. அவர்களது கல்வி மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தில் அது தாக்கம் செலுத்துகின்றது. இந்த சமநிலையின்மைக்குத் தீர்வைக் காண்பதே முக்கிய முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளது.