Loading

புலப்படாத தடைகள் ஒன்லைன் மற்றும் ஓப்லைன் வன்முறைகளை எதிர்ப்பதற்கான போராட்டம்

இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதற்கு பின்னரும் தமது செயற்பாடுகளுக்காக மனித உரிமை ஆர்வலர்கள் கடத்தப்பட்டுள்ளனர், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், தாக்கப்பட்டுமுள்ளனர். தற்போதைய அரசாங்கத்தின் கீழும் கருத்து சுதந்திரத்தின் மீதான நெருக்கடி, ஆர்வலர்கள் மீதான கண்காணிப்பு, அச்சுறுத்தல், நேரடியான வன்முறைகள் என்பன கடந்த ஆண்டிலும் தொடர்ந்துள்ளது. அதற்கும் மேலதிகமாக பெண் ஆர்வலர்கள் மறைமுகமான அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றனர்.

வரலாற்று ரீதியாக போராட்டங்களில் பெண்கள் அதிகளவான பங்களிப்பினை வழங்கியிருக்கின்றனர். சுதந்திரத்துக்கு முன்னரான காலப்பகுதியில் இருந்து ‘குலஞான சமிதி’ மற்றும் ‘மஹில சமிதி’ ஆகியவை பொது வாழ்க்கைக்குள் பிரவேசிக்கும் பெண்களுக்கும் பெண்களின் நலன்களுக்காக பணியாற்றுவதற்கும் மிகவும் முக்கியமான நுழைவாயிலாக அமைகின்றது. ஆனாலும், இதுவரையில் பெண்கள் நம்பமுடியாத பல காரணங்களுக்காக சந்தேகத்துடன் நோக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது. உதாரணமாக, பிரச்சினைகள் தொடர்பாக பொதுவெளியில் பேசுதல், தொடர்ச்சியாக பயணம் செய்தல், களத்தில் ஆண்களுடன் இணைந்து பணியாற்றுதல் அல்லது பேஸ்புக் மற்றும் வட்ஸப் பயன்படுத்துதல் ஆகிய சந்தர்ப்பங்களைக் குறிப்பிடலாம். இந்தக் கட்டுரைக்காக கிறவுண்ட்வியூஸ் தளத்துக்கு நேர்காணல்களை வழங்கியவர்கள் கூறிய விடயங்களுக்கு அமைவாக இந்தத் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

பெண்கள் சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பாக பேசும் சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது மிகவும் கொடூரமான கருத்துக்கள் விமர்சனங்களாக முன்வைக்கப்படுகிறது. மார்ச் 2017இல் பிபிசி சிங்கள சேவைக்கு செவ்வி ஒன்றினை வழங்கியிருந்த சட்டத்தரணி எர்மிஷா தேகல் அருவருப்பான கருத்துக்களை எதிர்கொண்டிருந்தார், முஸ்லிம் தனியாள் சட்டத்திருத்தம் தொடர்பாக அவர் பேசியபோது இது இடம்பெற்றது. 2017 ஆகஸ்ட்டில், முல்லைத்தீவில் காணாமல்போனோருக்காக தொடர்ச்சியாக வீதிகளில் போராடிவரும் குடும்ப அங்கத்தவர்கள் மத்தியில் மிகவும் முக்கியமானவராகக் கருதப்படும் மரியசுரேஷ் ஈஸ்வரி அரச புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தப்பட்டிருந்ததுடன் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்தார்.

பாரபட்சமான சட்டங்களை நீக்குதல் மற்றும் துஷ்பிரயோகங்கள், தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தல் முதல் உள்ளூர் அதிகாரிகள் மட்டத்தில் காணப்படும் ஊழல் மோசடிகளை ஒழித்தல் வரையான பல்வேறு விடயங்களுக்காக பணியாற்றும் மூன்று மாகாணங்களில் உள்ள பெண் ஆர்வலர்களிடம் கிரவுண்ட்விவ்ஸ் உரையாடியிருந்தது. தொழில்நுட்ப ரீதியிலான வன்முறைகளை எதிர்கொண்டவர்களுடன் இணைந்து பணியாற்றிய விடயம் மற்றும் வெறுப்புணர்வுக்காக தாம் இலக்கு வைக்கப்படுவதற்கு எவ்வாறு பதிலளித்தார்கள் என்பது தொடர்பாக அவர்கள் தமது அனுபவத்தினை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

ஆனந்தி

சமூக ஊடகங்களில் பிரவேசிக்கும் அல்லது அதனைப் பயன்படுத்தும் 19 வயது முதல் 30 வயது வரையான இளம் சமுதாயத்தினர் தமது தனிப்பட்ட தரவுகளை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பது தொடர்பாக அறியாதவர்களாக உள்ளனர். தமது சமூகத்தில் தொழில்நுட்பம் தொடர்புடைய வன்முறைகளைக் கையாளும் பெண்கள் உரிமை குழு ஒன்றுடன் அவர் பணியாற்றுகிறார். “பெண்களுடன் நட்பினை பரிமாறும் ஆண்கள் அவர்களிடம் நிர்வாணப்புகைப்படத்தை அனுப்புமாறு கேட்கின்றனர். அவர்களிடையிலான உறவு மோசமடையும் நிலையில் அந்தப் புகைப்படங்கள் இணையத்தளங்களில் கசியவிடப்படுகின்றன. 17 வயதுப் பெண்கள் இந்த விவகாரங்களில் தமது வாழ்வை கூட மாய்த்துள்ளனர்.” பழிவாங்கும் பாலியல் செயற்பாடுகள், சமூகத்தில் மிகவும் ஆழமாக புரையோடியுள்ளது.

இவ்வாறான வழிகளில் இலக்கு வைக்கப்படுவோருக்கு பதிலளித்தல் மற்றும் அவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஆனந்தியின் பணி தொடர்புபட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அறிந்தவர்களிடமிருந்தும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.

“பேஸ்புக்கில் சில பிரத்தியேக குழுக்கள் காணப்படுகின்றன. யூடியுப் ஆகியவற்றில் புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றினை பகிர்வதன் மூலம் அருகில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்த சகல பெண்களையும் பாதிக்கும் வகையிலான பாரபட்சமான செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.” பொய்யான செய்திகளை பரப்பி தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களில் பதற்றத்தை உருவாக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடும் இவ்வாறான குழுக்களின் தந்திரோபாய செயல்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. முஸ்லிம் முதலாளி ஒருவர் தமிழ் யுவதி ஒருவருடன் தொடர்பினை வைத்திருப்பதாக வதந்தி பரப்பப்பட்டதன் பாதிப்புகள் எவ்வாறு அமைந்திருந்தது என்பதை ஆனந்தி அறிந்திருந்தார். ஆனால், உண்மையில் அந்த தமிழ் யுவதி முஸ்லிம் முதலாளியிடம் பணிபுரிந்து வந்துள்ளார்.

இணையங்களில் பெண்களை நோக்கிய துஸ்பிரயோக நடத்தையானது பெண்களை வெறுப்பவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற அதேநேரம் இவ்வாறான நிலை இணையத்துக்கு அப்பால் நேரடியாகவும் நடக்கின்றது என்பது மிக உண்மையாகும். “இளைஞர்கள் பாலியல் ரீதியிலான தவறான எண்ணங்களுடன் பெண்களை நோக்கி முன்னகர்வுகளை மேற்கொள்ளும் நிலையில் பெண்களால் வீதிகளில் தனித்துகூட நிற்கமுடியாதுள்ளது” என ஆனந்தி அவதானித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் இணையங்களில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் இணையத்துக்கு அப்பால் நேரடியாகவும் இடம்பெற்ற சந்தர்ப்பங்களும் உண்டு. தனியாக வாழும் விதவைகளை இலக்கு வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. அதாவது தமது நண்பர்களுடன் உடல் உறவில் ஈடுபட அவர்கள் இணக்கம் தெரிவிக்காத நிலையில் அவதூறு ஏற்படுத்தும் வீடியோக்களை போட்டோக்களை வெளியிடுவதாக அவர்கள் அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.

ஆனந்தி ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார், தமது குழுவில் பணியாற்றும் பெண் ஒருவர் அலுவலகத்திலிருந்து வீடு செல்லும்போது முச்சக்கரவண்டி ஒன்றில்தான் பயணிப்பதாகவும் கணவர் தொலைவில் இருப்பதால் குழந்தையுடன் தனியே அவர் வசித்துவந்திருக்கின்றார் என்றும் ஆனந்தி கூறுகிறார். ஒரு நாள் இப்பெண்ணைப் பின்தொடர்ந்துச் சென்ற ஒருவன் அவரையும் குழந்தையையும் கொலை செய்திருக்கிறான்.”

இந்தப் பிரச்சினையை சட்டத்துறையினர் தீர்த்துவைப்பார்கள் என்ற நம்பிக்கை ஆனந்தியிடம் இல்லை. தொந்தரவுகள் தொடர்பாக பல தடவைகள் முறைப்பாடு செய்த பின்னர் இந்த நம்பிக்கையின்மை ஆனந்தியிடம் ஏற்பட்டது. “பொலிஸாரும் பெண்களை இழிவுபடுத்தும்போது அவர்களிடம் போய் முறைப்பாடு செய்து என்ன பயன்?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார். இவ்வாறான நிலையிலும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக முறையிடவேண்டுமென ஊக்குவிக்கும் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை மேலும் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படுகின்றனர். காயத்துக்கு மேலும் வலி ஏற்படுத்தும் வகையில் “இந்தச் சம்பவங்களில் நேரடியாக தொடர்புபட்டிருக்காத நிலையில்” ஆனந்தி போன்ற பெண்கள் ஏன் இந்த விடயங்களில் அக்கறைகொண்டிருக்கின்றார்கள் என பொலிஸார் கேட்கின்றனர்.

ஆனந்தி போன்ற பெண்கள் தொடர்ச்சியாக பயணம் செய்வதால் சமூகத்தில் சந்தேகக் கண்ணுடன் நோக்கப்படுகின்றனர். ஆனந்தி போன்ற பெண்கள் தொடர்ந்தும் உறுதியாக உள்ளனர். “என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அச்சுறுத்தல் விடுப்பவர்களுக்கு, என்னை வீடுவரை பின்தொடர்பவர்களுக்கு, தகுந்த பதிலினை வழங்குவதற்கான மனோதிடம் என்னிடம் உள்ளது. ஆனால், இந்த நிலையை முன்னொருபோதும் எதிர்கொள்ளாத இளம் பெண்களின் நிலை எவ்வாறிருக்கும், அவர்கள் எவ்வாறு பதிலளிப்பர்?”

பெண்களை நோக்கிய வன்முறைகள் மற்றும் அவமரியாதை ஆகியவை அதிகரித்துவருவதனை சாதரணமாகக் காணமுடிகின்றது என்றும் அவர் கூறுகிறார். கல்வி நிலையங்களின் வெளிப்புறத்தில் இளம் சிறார்களுக்கு ஆபாச பட சீடிக்களை வழங்குகின்றனர். இதனால், பெண்கள் மற்றும் அவர்களின் உடல் தொடர்பான தவறான அபிப்பிராயம் சிறுவயது முதலே ஏற்படுகின்றது.

பழிவாங்கும் நோக்குடனான ஆபாசப்படங்களை அல்லது பொய்யான தகவல்களை விநியோகிப்பவர்கள் தமது நடவடிக்கைகளுக்காக எந்தவிதமான தண்டனைகளையும் பெறுவதில்லை. ஆனால், அவர்களால் இலக்கு வைக்கப்படும் பெண்கள் இதன் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் இதன் விளைவுகள் மிகவும் மோசமானவையாக இருக்கின்றன, அண்மையில் பெண் ஒருவர் தவறான உறவினை கொண்டிருப்பதாக பரவிய வதந்தியினால் அப்பெண் தனது கணவரின் கைகளினாலேயே இறக்கும் நிலை ஏற்பட்டது என ஆனந்தி கூறுகிறார்.

சமூகங்கள் போரினால் பாதிக்கப்பட்டவர்களாக காணப்படும் நிலையில் பாதுகாப்பானது அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.“சில சந்தர்ப்பங்களில் வன்முறைகள் ஒன்லைன் ஊடாகவும் அல்லது வேறுவிதத்திலும் (ஓப்லைன்) நீங்கள் எதிர்பார்க்காத தரப்பினரிடமிருந்தும் மேற்கொள்ளப்படுகின்றது” என்று ஆனந்தி தெரிவிக்கிறார். குற்றவாளிகள் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களாக மட்டும் இருக்கவில்லை.

இன்றைய காலப்பகுதியில் இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர். அத்துடன் தவறாக அணுகப்பட்டால் அல்லது துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் சந்தர்ப்பங்களில் எவ்வாறு தமது அனுபவங்களை வெளிக்காட்ட வேண்டும் என்பது தொடர்பாகவும் அறியாதவர்களாக இருக்கின்றனர். பல்வேறு வடிவங்களிலான துஷ்பிரயோகங்களிலிருந்து எவ்வாறு விலகிக்கொள்ளவேண்டும் அல்லது எவ்வாறு அதற்கு முகம் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆனந்தியும் அவரது சகாக்களும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர். ஆனால் இணையம் ஊடாக, சமூக ஊடகங்கள் ஊடாக இவை பரவலடையும் சந்தர்ப்பங்களில் அதனை முறியடிப்பது மிகவும் சிக்கலான விடயமாக உள்ளது. “இணையங்களில் வாசிக்கப்படும் விடயங்கள் ஊடாக இளைஞர்கள் இலகுவில் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர்” என்று ஆனந்தி கூறுகிறார்.

கமிலா

குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தினால் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய வன்முறைகள் தீவிரமாக பரவுவதாக கமிலா நம்புகிறார். துன்புறுத்தல்கள்/ தொந்தரவுகள் தொடர்பான வழக்குகளில் நீதி அரிதாகவே நிலைநாட்டப்படுகிறது. உதாரணமாக அநாமதேய தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்யும்போது அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றப்படுகிறது. ஆனால், குற்றத்தில் ஈடுபட்டவர் இறுதிவரை அடையாளம் காணப்படாதவராகவே இருப்பார்.

தொழில்நுட்ப ரீதியாகவோ அல்லது இணையத்தளங்கள் ஊடாகவோ மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பாக எவ்வாறு முகங்கொடுப்பது என்ற விடயத்தில் மிகவும் குறைந்தளவான விழிப்புணர்வே காணப்படுகிறது. “இந்த நாட்டின் சில பகுதிகளில் இருக்கும் இளம் பெண்களில் இருந்து சைபர் குற்றப் பிரிவினர் விலகியே இருக்கின்றனர்” என்று கூறுகிறார் கமிலா. இந்தத் தூரமானது புவிசார் தூர அடிப்படையில் கூறப்படவில்லை, தலைநகருக்கு அப்பால் இருக்கும் மக்கள் இந்தப் பிரிவு குறித்து அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

கமிலா தனது சமூகத்தில் ஓர் ஆர்வலராகவும் அதேநேரம் ஒரு ஊடகவியலாளராகவும் செயலாற்றி வருகின்றார். “நான் எப்பொழுதும் கேள்விகளை எழுப்புவதாக மக்கள் கருதுகின்றனர்” என்று அவர் கூறுகின்றார். உள்ளூர் அதிகாரிகளாகவோ, அரசியல்வாதிகளாகவோ அல்லது ஏனைய தலைவர்களாகவோ இருந்தாலும் அவர் கேள்வி எழுப்பத் தயங்குவதில்லை. இதன் காரணமாக துரதிஷ்டவசமாக மத ரீதியிலான முக்கியஸ்தர்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களினால் அவர் துன்புறுத்தலுக்காக இலக்கு வைக்கப்படுகின்றார்.

தனது தாயாரை மருத்துவமனையில் பராமரிக்கும் அதேநேரம் கமிலாவுக்கு பல அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வருகின்றது. அநாமதேய அழைப்பாளர் தன்னைச் சந்திக்க வருமாறு கூறுகிறார். பேசிய அனைத்தையும் கமிலா பதிவு செய்கின்றார். ஆண் உறவினர் மூலமாக மற்றொரு இலக்கத்தில் அழைப்பினை மேற்கொள்கிறார். மறுபக்கம் பேசியவர் ஒரு இளம் மௌலவி. “எனது உறவினர், ஒரு டிஎச்எல் ஊழியரென பாஷாங்கு செய்து, ஒரு தபாலை வழங்க முகவரியை கேட்டார்” என சிரித்தவாறு கமலா கூறுகின்றார்.

அவரது இலக்கத்தையும் முகவரியையும் கமிலா பொலிஸாரிடம் வழங்கியதுடன் நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றார். பொலிஸார் அழைப்பினை மேற்கொண்டபோது, தனது தொலைபேசி தொலைந்துவிட்டதாக மௌலவி கூறுகின்றார். “அழைப்புகள் தொடர்ந்து வர ஆத்திரமடைந்த எனது கணவர் தொலைபேசியை உடைத்தேவிட்டார்” என கமிலா கூறுகிறார். அவர்கள் மத்தியஸ்த குழு ஒன்றின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இணக்கம் தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும் அந்த மௌலவி அமர்வுக்கு சட்டத்தரணி ஒருவரை அழைத்து வந்திருக்கிறார். ஆனால் அவர் அமர்வின் வெளியிலேயே அமர்த்தப்பட்டிருக்கிறார்.

குற்றம்சாட்டப்பட்டவர் சமூகத்தில் கௌரவமாக மதிக்கப்பட்ட மௌவி ஒருவர் என்பதால் முறைப்பாடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகக் கூறிய பொலிஸார் விசாரணை நடவடிக்கையைத் தாமதப்படுத்தினர்.

மத ரீதியிலான முக்கியஸ்தர் ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்கினை பகிரங்கமாக விசாரணை செய்வது பொருத்தமானதாக இருக்காதென நீதிமன்றம் கருதியது. சமூகத்தவர்களும் இதனை ஏற்றுக்கொள்கின்றார்கள் என்றே தோன்றுகிறது.

பெண்கள் குரல்கொடுக்கக் கூடாது என்று எதிர்பார்க்கும் கலாசாரத்தில் தான் குரல்கொடுப்பதால் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுப்பதாக கமிலா கூறுகிறார். சமநேரத்தில் கமிலாவால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்காக அவர் தனியாக இனங்காணப்படுகிறார். ஆனாலும் தனது விருப்புக்காகவும் பணியாற்றவேண்டிய தேவை அவருக்குள்ளது. “எனக்கு எதிராக ஏதாவது செய்வதாக இருந்தால் நான் அதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்பதை மக்கள் அறிவார்கள்” என்றும் அவர் கூறுகிறார்.

உடன்பாடில்லாமல் புகைப்படங்களை வெளியிடும் பிரச்சினை கமிலாவின் சமூகத்திலும் உள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் நிலையில் அவர்களுக்கு பதிலளிப்பது மிகவும் சிக்கல் நிறைந்த விடயமாக காணப்படுகிறது. “கசிய விடப்பட்ட ஒரு வீடியோவினை பொலிஸாரிடம் கையளிக்கும்போது அவர்கள் அதனை தமது சொந்தச் சாதனங்களில் தரவிறக்கம் செய்து பின்னர் அவற்றினைப் பார்வையிடுவார்கள்” என்று அவர் கூறுகிறார். சட்டத்தை நிலைநாட்டவிருப்பவர்களும் பாதிக்கப்பட்டவர்களை இன்னும் நெருக்குதல்களுக்கு உள்ளாக்குவதாக கமிலா கூறுகிறார்.

பல தனிப்பட்ட புகைப்படங்கள் நம்பத்தகுந்த தரப்பினருடன் மாத்திரமே முதலில் பகிரப்பட்டிருந்த போதிலும் பின்னர் அது கசியவிடப்பட்டிருந்தால் அந்தப்பெண் தரமற்றவரென சமூகங்களால் கருதப்படுகிறார். அதன் பாதிப்புக்கள் மிகவும் கொடூரமானவையாக இருக்கின்றன. “ஏனென்றால் இவ்வாறான புகைப்படங்கள் காரணமாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கூட முறிவடைந்துள்ளன. திருமணங்கள் விவாகரத்தில் போய் முடிந்துள்ளன” என்று கமிலா மேலும் கூறுகிறார். “தொழில்நுட்பமானது எம்மை முன்னேற்றுவதற்காகவே அன்றி பின்னடவினை ஏற்படுத்துவதற்காகவல்ல” எனவும் கமிலா குறிப்பிட்டார்.

“எமது பகுதியில் சில சமிக்ஞை கோபுரங்கள் மாத்திரமே உள்ளன. இதனால் மக்கள் இணையத்தள சேவையினை பயன்படுத்துவதனை இது கணிசமானளவில் குறைக்கின்றது” என்று அவர் தெரிவிக்கிறார். இருந்தபோதிலும் சிறுவர்கள் தேவையற்ற விடயங்களை அறிந்துகொள்வதற்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. சமிக்கை கோபுரங்களின் தெளிவான வீச்சு காணப்படும் பகுதிகளில் நள்ளிரவின் பின்பகுதியிலும் நடைபெறும் கல்வி நிலையங்களுக்கு சிறுவர்கள் சென்றுவருவது வழமையான செயலாகக் காணப்படுகிறது. தமது பிள்ளைகளை அரசாங்கப் பணிகளில் இணைக்க வேண்டும் என்ற ஒரேயொரு பிடிவாதமான நிலைப்பாட்டினை பெற்றோர்கள் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் இந்தச் சிறுவர்களுக்கான பாதுகாப்பு இருக்கிறதா? என்று கமிலா கேட்கின்றார். இந்த விடயத்தினை கவனிக்கவேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இல்லையா? என கமிலா கேள்வி எழுப்புகிறார். இவ்வாறான வெளிகளில் சிறுவர்கள் ஆபாசப்படம் மற்றும் போதைப்பொருள் ஆகியவற்றுக்காக இலக்கு வைக்கப்படும் நிலை காணப்படுகிறது. அவரது சமூகத்தில் உள்ள சிறுவர்கள் மிகவும் குறைந்தளவிலான கல்விச் செயற்பாடுகளைக் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் வரை முரண்பாடுகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

மாதவி

ஆனந்தியைப்போல மாதவியும் பெண்களுக்கெதிரான வன்முறைகள், துஷ்பிரயோகங்களுக்கு எதிராக சமூகங்களை அடித்தளமாகக்கொண்ட பெண்கள் கூட்டமைப்பின் ஒரு ஆர்வலராக செயற்பட்டு வருகிறார். அவரது பகுதியில் போராட்டங்கள் எதிர்மறையான பிரதிபலிப்பினை கொண்டிருந்ததனை காணமுடிகின்றது. அவ்விடயங்கள் அனைத்தையும் அறிந்தவராக அவர் இருக்கின்றார். “அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நான் இருந்த புகைப்படத்தை ஒருவேளை யாராவது இணையத்தில் அப்லோட் செய்தால் இந்தக் கிராமத்தில் உள்ளவர்களே என்னை விரட்டியடித்துவிடுவார்கள்” என்று அவர் கூறுகிறார்.

இணையத்தளங்களில் உள்ள தமது புகைப்படங்கள் இலகுவாக அணுகக்கூடிய வகையில் இருப்பதால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் இந்தப் புகைப்படங்களை இலகுவாக வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பது குறித்தும் இளம் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள் என்று மாதவி கூறுகிறார்.

தற்போதும் எமக்கு சில அழைப்புக்கள் வருகின்றன.

“இளம் பெண் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, பணம் தராவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறினார்” என்று கூறுகிறார் மாதவி. தனது காதலனுக்காக அப்பெண் ஒரு கடனை பெற்றதாக பேஸ்புக்கில் பதிவொன்று பகிரப்பட்டுவருகிறது. இந்தப்பதிவானது முற்றுமுழுதான பொய்யாகும். ஆனால் அதன் தாக்கம் அந்தப்பெண்ணை உண்மையாக பாதித்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில் வன்முறைகள் அரசினாலும் அனுமதிக்கப்பட்டவையாக இருந்தது. பல பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஓர் அரச அதிகாரியை கடுமையாக பகிரங்கமாக கண்டித்த சம்பவம் தொடர்பாக மாதவி நினைவுபடுத்துகிறார். அதன் பின்னர் அவருக்கு தொலைபேசி அழைப்புக்கள் வர ஆரம்பித்தன. ஆரம்பத்தில் மௌனமாக இருந்த அழைப்பாளர் கடைசியில் அருவருப்பான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டிருந்தார். வார்த்தைகள் மூலமான துஷ்பிரயோகங்கள் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறும் மாதவி, ஒருவேளை கணவர் தொலைபேசிக்கு பதிலளித்திருந்தால் குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்துவதே அந்த நபரின் நோக்கமாக இருந்திருக்கும் என தான் நம்புவதாகவும் கூறுகிறார். பிள்ளைகள் அந்த அழைப்புக்கு பதலளித்திருந்தால்... என்ன நடந்திருக்கும்.”

தன்னைப்போல இந்தப் பணிகளில் ஈடுபடும் ஏனைய பெண்களும் கணவன்மாருடன் கொண்டிருக்கும் சிக்கல்கள் தொடர்பாக அவர் கூறுகிறார். அந்த ஆண்கள் பெண்களுக்கு மிகவும் ஆதரவுடையவர்களாக உள்ளனர். இவ்வாறான பணிகளில் இந்தப் பெண்கள் ஈடுபடுவதற்கு அவர்கள் அனுமதி வழங்குகின்றனர். ஆனால் சில விடயங்களில் பேசித் தீர்வுகாண வேண்டியும் உள்ளது. உதாரணமாக அழைப்பெடுப்பவர்களின் திட்டங்கள் மிகவும் வெற்றி அடைகின்றது. மாதவியின் தொலைபேசிக்கு அழைப்புக்கள் தொடர்ச்சியாக வர கணவர் அவருடன் பேசுவதனை தவிர்க்கிறார்.

இவ்வாறான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவது ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதனால் வன்முறைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. அதேவேளை, பாதிக்கப்பட்ட பெண்கள் எப்போதாவது சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் வன்முறைகள் தொடர்வதற்கான காரணமாக அமைகிறது. தொலைபேசி அழைப்புகளுக்கு பின்னணியிலிருக்கும் அதிகாரியை எதிர்த்து நிற்பதில் மாதவிக்கு எந்தவிதமான சலனமும் இல்லை. அந்த அதிகாரியை மிகவும் அறிந்தவராக மாதவி உள்ளதுடன் அந்த அதிகாரி தன்னை நியாயப்படுத்தும், பாதுகாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்.

முன்னர் மாதவி நிவாரணம் வழங்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியிருந்தார். அவரது தொழில் தருநர்களால் பதிவுசெய்யப்பட்ட வீடியோ ஒன்றில் அப்போது அவர் பங்கேற்றிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் சிலர் அவரது கணவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு மாதவி வீடியோக்களில் நடிப்பதாகக் கூறி இருந்தனர். அத்துடன், அந்த வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் என்றும் கூறியிருந்தனர். கணவனால் மாதவி எச்சரிக்கப்படுவார் என அழைப்பாளர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், அங்கு ஒழிப்பதற்கு எதுவும் இல்லையென மாதவி மிகவும் நம்பிக்கையாக இருந்து வந்த நிலையில் தொடர்ந்தும் குறித்த அலுவலகத்தில் பணியாற்றுவதற்கான அனுமதியினை கணவரிடமிருந்து அவரால் பெறமுடிந்துள்ளது.

அந்த நபர் சாதாரண தொலைபேசி ஒன்றின் மூலமே அழைப்புக்களை மேற்கொண்டிருந்த நிலையில் வட்ஸப், வைபர் போன்ற செயலிகளுக்கான இணைப்பு அதில் இருக்கவில்லை. ஆனால், சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு ஸ்மாட்போன்தான் அவசியமென்று இல்லை.

இவ்வாறான சம்பவங்களில் குடும்பங்கள் மிக மோசமான அழுத்தங்களுக்கு உட்படுகின்றது. அதேபோல மாதவிக்கு நண்பர்களும் சக பணியாளர்களும் பாரிய ஆதரவினை வழங்கியிருக்கின்றனர். இல்லாதுவிடில் அவர் மிக மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கும்.

முதலில் குடும்பங்களில் இருந்தே அவமானம் ஏற்படுவதாக மாதவி கிரவுண்ட்விவ்ஸிக்கு கூறுகிறார். இதுபோன்ற பிரச்சினைகள் மாதவியின் சக பணியாளர்கள் மத்தியிலும் காணப்படுகின்றது. பின்னர் அந்தப் பிரச்சினைகளுடன் தொழில்நுட்பங்களும் சேர்வதால் மோசமான நிலைக்கு சென்றுவிடுகிறது. பெண்கள் தமது அனுபவங்களை கூற முன்வராதமைக்கு இதுவும் ஒரு காரணமாகும். ஆனால் மாதவியும் ஏனையோரும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றனர்.

இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு முகம்கொடுக்கும் மாதவியின் சமூகத்துக்கு உளவள ஆலோசனைகள் கிடைப்பதில்லை. அதற்கான இடைவெளி இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

தொழில்நுட்ப ரீதியிலான வன்முறைகளை எதிர்ப்பதற்கான எந்த ஒரு சமூக ரீதியிலான அமைப்புகளும் மட்டக்களப்பில் இல்லை என்று மாதவி தெரிவிக்கின்றார். அங்குள்ள பெருமளவான மக்கள் இந்தப் பிரச்சினையின் உக்கிரத்தை இன்னமும் அறியாதவர்களாகவே காணப்படுகின்றனர். பல்வேறு ஊடகங்கள் ஊடாக இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து காட்டப்படும்போது அது சாதாரண விடயம் என்ற எண்ணவோட்டத்தில் அடுத்த தலைமுறையினர் இருக்கின்றனர் என்று மாதவி கவலை வெளியிடுகின்றார். இந்தப் பிரச்சினையானது ஒருவரை கொலை செய்யும் சூழ்நிலை வரை சாதாரண மயமாக்கப்பட்டமை தொடர்பில் நான் மிகவும் கவலையடைகின்றேன்.”

பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களை பொலிஸார் முக்கியமான விடயமாகக் கருதுவதில்லை. “பொலிஸ் நிலையம் ஒன்றில் இந்தப் பிரச்சினை தொடர்பாக முறையிடும்போது அவர்கள் அதனை சரியான பதிவாக மேற்கொள்வதும் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றது” என்றும் மாதவி கூறுகின்றார்.

ஜுவைரியா

ஜுவைரியா வாழும் பிரதேசத்தில் ஆணொருவருடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்தால் குறித்த பெண் அச்சுறுத்தப்படுவது மட்டுமன்றி தன்னுடைய கல்வி நடவடிக்கையையும் இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்.

இதுவே ஜுவைரியா அண்மையில் அடையாளம் கண்ட சம்பவங்களில் மிகவும் புதிதாக அமைகின்றது. ஒரு இளைஞன் தனது நண்பரின் சிறந்த நண்பி ஒருவருடன் காதலை ஆரம்பிப்பதற்காக மற்றொருவருடன் ஏற்கனவே இருந்த காதல் உறவினை முடிவுக்குக் கொண்டுவருகிறார். பெண் அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார். ஆபாச புகைப்படம் ஒன்றில் இருக்கும் முகத்திற்குப் பதிலாக குறித்த பெண்ணின் முகத்தை எடிட் செய்த குறித்த இளைஞன் தான் அதனை வெளியிடப்போவதாக அச்சுறுத்தியிருக்கிறார்.

குறித்த பெண்ணின் பெற்றோர் மிகவும் பழமைவாதிகளாக காணப்படுகின்றனர். உயர் தர கல்வியை நிறைவு செய்து பல்கலைக்கழகம் செல்லும் கனவுடன் இருந்த அவரின் கல்வியைத் தொடர பெற்றோர்கள் அனுமதித்திருக்கவில்லை. “அவள் என்னுடன் தொடர்புகொண்டு உதவியைப் பெற்றுக்கொண்டார். ஆனால் அனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தினை கொண்டிருக்கவில்லை” என ஜுவைரியா கூறுகிறார்.

ஜுவைரியாவின் சமூகத்தில் இருக்கும் பெண்களுக்கு கண்காணிப்பானது அவர்களின் வீட்டிலிருந்து ஆரம்பிக்கின்றது. அயலவர்களும் உறவினர்களும் தமது கணவன்மார் மனைவிமாரின் நகர்வுகள் தொடர்பாக செய்திப் பரிமாற்றப்படும் செயலிகள் ஊடாக அப்டேட் செய்யப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் பெண்களின் சம்மதம் இல்லாமலும் இந்த செயல் இடம்பெறுகிறது. இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தன்னிடம் கூறிய சம்பவங்கள் தொடர்பாக ஜுவைரியா பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் வாழும் திருமணம் செய்த பெண் ஒருவர் தொடர்பான சம்பவமொன்றுள்ளது. பிறந்த நாள் விழா ஒன்றில் அந்தப் பெண் ஆண் நண்பர்களில் ஒருவருக்கு கேக்கினை ஊட்டும் வீடியோ அது. அவரது அறையில் வசிக்கும் நண்பியால் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வீடியோ அவரது கணவருக்குப் பகிரப்பட்டது. விளைவு, கணவர் அப்பெண்ணிடமிருந்து விவாகரத்தைக் கோரினார்.

மற்றொரு பெண் வெளிநாட்டில் பணியாற்றும் நிலையில் கோயில் ஒன்றுக்கு செல்கின்றார். அவர் வழமையாக அணியும் தாவணி அற்ற நிலையில் சிலர் அந்தப் பெண்ணை போட்டோ எடுக்கின்றனர். பின்னர் அது கணவருக்கு அனுப்பப்படுகிறது. இப்போது அந்தக் குடும்பத்தின் விவாகரத்துக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

இந்த மனிதர்கள் விவாகரத்துக்கோரியதன் பின்னர் அதன் மூலமாக மனைவிகளைக் குறை கூறும் வகையிலான அச்சுறுத்தல் செய்திகளை வட்ஸப் மூலமாக அனுப்பி அவர்களுக்கு தொடர்ச்சியாக தண்டனைகளை வழங்குவதற்கு முற்படுகின்றனர். இந்தப் பெண்களில் பெருமளவானோர் தனது கணவரின் இவ்வாறான அணுகுமுறைக்கு முகம்கொடுத்துதான் ஆகவேண்டும் என எண்ணுகிறார்கள். அவர்களின் அணுகுமுறை அல்லது நடத்தையை மிகவும் இலகுவாக மாற்றிவிட முடியாது. இவ்வாறான நிலைப்பாட்டிலிருந்து விலகி என் கண் முன்னால் அவர்கள் சிம் அட்டையை மாற்றும் வரை இந்தச் சம்பவங்களை கையாள்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்று கூறுகிறார் ஜுவைரியா. இது போன்ற பெண்களுக்கு நிம்மதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக எத்தனை சிம் அட்டைகளை உடைத்து வீசியிருப்பேன் என்றும் அவர் கூறுகிறார்.

நான் உங்களை விரும்புகிறேன் என்ற மெசேஜ் அநாமதேய தொலைபேசி இலக்கங்களூடாக ஜுவைரியா பெற்றிருக்கிறார். புரிந்துணர்வுள்ள கணவர் ஒருவர் தனக்குக் கிடைக்கப்பெற்றமை எனது அதிர்ஷ்டம் என கூறுகின்றார்.

ஏனென்றால் அவரால் இவ்வாறான விடயங்களுக்கு கணவருடன் இணைந்து சிரிக்க முடிகின்றது. இருந்தபோதிலும் சில செய்திகள் மிகவும் குறைவான மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவற்றின் மூலம் சில சந்தர்ப்பங்களில் பாரியளவிலான கவலைகளை உணர வேண்டிய தேவையும் காணப்பட்டிருந்தது. மதச்சார்பற்ற செய்திகள் மட்டுமன்றி ஏனைய செய்திகளையும் பரப்புவதற்கு முஸ்லிம் மத குருமார் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியிருந்தனர். பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு செய்திகள் அவர்களால் பகிரப்பட்டன. “என்னைப் பற்றிய வீடியோ ஒன்றும் அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது” என்று ஜுவைரியா கூறுகின்றார். “அந்த வீடியோ யூடியூப்பில் 22 ஆயிரம் தடவைகள் பார்வையிடப்பட்டிருந்தது. தன்னைப் போன்ற சமூக ஆர்வலர்கள் உண்மையான முஸ்லிம் இல்லை. இஸ்லாம் மதத்தை பிரதிநிதித்துவம் செய்யாததால் இவர் முஸ்லிம் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போதெல்லாம் என்னை ஏனையோருக்கு அறிமுகம் செய்யும்போது அந்த வீடியோ தொகுப்பிலிருந்த பெண்மணி எனக்கூறி அறிமுகம் செய்து வைக்கின்றனர்.”

முதலாவது வீடியோ, குறிப்பிட்ட எந்த ஒரு பெண்ணையும் இலக்கு வைத்திருக்கவில்லை. ஆனால், இவ்வாறான சம்பவங்கள் ஒரு தடவை வந்து போகும் சம்பவங்களாகவே ஜுவைரியாவால் கருதப்படுகிறது. இருந்தபோதிலும் ஜனவரியில் தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் அடுத்த வீடியோ தொகுப்புகள் வெளியாகியிருந்தன. தனது பணியின் ஊடாக பல்வேறு பெண் வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவளித்து செயற்பட்டு வந்த நிலையில் இம்முறை அவர் மட்டும் இலக்குவைக்கப்பட்டார். இந்த விடயங்கள் தொடர்பாக அவர் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தார். ஆனால், எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் மௌலவிகள் பாரிய வலையமைப்பாக இயங்கி வந்தனர். அவர்களுக்கு அதற்கான அரசியல் தொடர்புகளும் காணப்பட்டிருந்த நிலையில் விசாரணைகளை தவிர்த்தது அவர்களுக்கு பெரிய விடயமாக இருந்திருக்காது என்று ஜுவைரியா கூறுகிறார்.

அவர் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டமூலத்தை அழிப்பதற்காக செயற்பட்டு வருவதாக மௌலவி குற்றம் சுமத்தியிருந்தார். ஆனால், அந்தச் சட்டத்தில் இருக்கும் பதினாறாவது சரத்தினை நீக்குவதற்கு மாத்திரமே அவரது பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மதத்தலைவர்கள் மௌனமாக இருந்தமை தொடர்பில் அவர் கேள்வி எழுப்பியபோது அதனால் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக ஜுவைரியா இரண்டு மாதங்களாக வீட்டைவிட்டு வெளியேறவில்லை.

அவரது குடும்பம் ஜுவைரியாவைப் போல திறந்த மனப்பாங்கினை கொண்டவர்களாக இருக்கவில்லை. பெரும்பாலான நேரங்களில் ஜுவைரியாவை கண்டவுடன் “அதோ தீவிரவாதி வருகிறார்” என்றே குடும்ப உறவுகள் கூறியிருக்கின்றன. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் கூட்டமொன்றில் அவர் பங்கேற்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. அங்குள்ள அவருக்குத் தெரிந்தவர் வழங்கிய தகவல்களின் படி பயங்கரவாதியின் வருகைக்காக அந்த அலுவலகம் இரண்டு நாட்களாக தயாராகி வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மக்கள் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர், என்னைப் பற்றி மற்றையவர்களிடமும் விசாரிக்கின்றனர் என்று அவர் கூறுகிறார். தேர்தலுக்காக வேட்பாளராக போட்டியிடுபவர்களிடம் ஏன் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என்றும் ஜுவைரியாவுடன் அவர்கள் தொடர்பு கொண்டிருக்கின்றார்களா இல்லையா எனவும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அமைப்பு கேட்டிருக்கிறது. பிரதேசத்தின் பள்ளிவாசலும் ஜுவைரியாவுடன் தொடர்புகொண்டிருந்தவர்களை விசாரித்திருந்தது. “நான் 400 அல்லது 500 சம்பவங்களுடன் தொடர்புபட்டு பணியாற்றிவருகிறேன். எனக்கும் சிலரைத் தெரியும்” என்கிறார் ஜுவைரியா.

2018 பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட பெண்களுடன் ஜுவைரியா பணியாற்றியுள்ளார். அவரை அச்சுறுத்திய மௌலவியால் சில பெண்கள் தொந்தரவுகளுக்கு, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தனர். அதன் பின்னர் சிவில் சமூகப் பிரதிநிதிகள் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து முறைப்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர். தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியும் அவர்கள் பல்வேறு தொந்தரவுகளுக்கு முகம்கொடுத்ததாகக் கூறும் ஜுவைரியா தேர்தலில் வெற்றி பெறாத வேட்பாளர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி அதன் மூலமாக தொல்லைக் கொடுத்தனர் என்றும் அவர் கூறுகிறார். இதற்கு பெண் வேட்பாளர்கள் அனுப்பிய பதிலை ஸ்கீன்ஷொன் படம் எடுத்து வட்ஸப் குழுக்களினூடாக பகிர்ந்துமிருக்கின்றனர்.

“நான் தொடர்ச்சியாக சிஐடியினரிடமிருந்து தொலைபேசி அழைப்புகளைப் பெற்றிருந்தேன்” என்று ஜுவைரியா கூறுகிறார். அவர்களின் கண்காணிப்புப் பட்டியலில் ஜுவைரியா இருந்திருக்கிறார் என்பது இதன்மூலம் தெரிகிறது. “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்திலும் இவ்வாறாக தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன” என்றும் அவர் கூறுகிறார். அவர் ஒரு தடவை கிராமத்திற்கு வருகை தந்த அவர் ஜுவைரியாவுடன் உரையாடியிருக்கிறார்.

அவர்கள் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, அவர்களை உங்களுக்குத் தெரியுமா? அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்று கேட்கிறார்கள். தாங்கள் அங்கு ஒரு வாகனத்தை அனுப்பியிருப்பதாக ஜுவைரியாவிடம் கூறியிருக்கிறார்கள். அவரை அச்சமடையச் செய்வதற்காகவே இவ்வாறு அவர்கள் கூறியிருக்கிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான அழைப்புகள் வந்தவுடன் தன்னை ஒருவர் பின்தொடர்வதையும் பொது இடங்களில் பஸ்ஸில் கண்காணித்துவருவரை அவர் அவதானித்திருக்கிறார். “கட்டாயமாக அவர்கள் என்னுடைய தொலைபேசி அழைப்புக்களை ஒட்டு கேட்டிருப்பார்கள் என்பதை நானறிவேன்” என்று கூறுகிறார் ஜுவைரியா.

அவரோடு பணியாற்றும் இளம் பணியாளர்கள் ஒவ்வொருவரும் பேஸ்புக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுடைய சமூகத்தில் ஏனைய நண்பர்களுடன் தொடர்பினை பெறுவதற்காக அல்லது புதியவர்களை சந்திப்பதற்காக பேஸ்புக் பயன்படுத்துவதுடன், தங்களுடைய நிவ்ஸ்பீட் ஊடாக வரும் அனைத்து தகவல்களையும் அவர்கள் நம்புகிறார்கள் என்றும் ஜுவைரியா கூறுகிறார். இவர்களில் ஒரு சிலரே கல்வித் தேவைகளுக்காக அல்லது ஆலோசனைகளைப் பெறுவதற்காக அதனைப் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்கும் கடப்பாட்டினை இவ்வாறான சமூக ஊடக கட்டமைப்புகள் கொண்டிருக்க வேண்டுமென அவர் கருதுகின்றார். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதனை நிறுத்துங்கள் என இளைஞர்களிடம் உங்களால் கூறமுடியாது என்றும் அவர் கூறுகிறார்.

குறிப்பாக இளம் பெண்கள் உட்பட ஏனையோரை தாக்குவதற்காக இளம் சமுதாயத்தினர் சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தி வருவது அதிகரித்து வருகின்றது என்பதுவே மிகவும் தெளிவான செய்தியாக உள்ளது. இந்த விடயம் தலைநகருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. இவ்வாறான விடயங்களை சுட்டிக்காட்டும் ஆர்வலர்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலையினை கொண்டிருக்கின்றார்கள். கிரவுண்ட்விவ்ஸுக்கு பேட்டிகளை வழங்கியிருந்த பல்வேறு பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம் என்ற அச்சத்தினால் தம்மை புகைப்படங்கள் எடுப்பதற்கு மறுத்திருந்தனர். வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் காணப்படும் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த ஆர்வலர்கள் செயற்பட்டுவருவது குறித்து மக்கள் பெருமை கொள்ளவேண்டும்.

அதேவேளை அவர்களுடைய வெளிப்படையான பேச்சினால் இலக்குவைக்கப்படுவதையும் தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

சைபர் குற்றங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்ய விரும்பினால் இந்த வழிகாட்டியை தயவுசெய்து வாசியுங்கள்.

பாதுகாப்பாக இணையங்களில் தொடர்ந்தும் இணைந்திருக்க விரும்பினால் அது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு எமது டிஜிட்டல் பாதுகாப்புத் தளத்துக்கு விஜயம் செய்யுங்கள்.

• இந்த கட்டுரையில் சில பெயர்களும் இடங்களும் ஆர்வலர்களின் கோரிக்கைக்கு அமைவாக, பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

“Invisible Barriers: The Struggle to Combat Violence, Online and Off” என்ற தலைப்பில் ‘கிரவுண்விவ்ஸ்’ தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கமே இது.

NextPrevious

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.