கேதீஸ்வரன் "யாரிடம் நீதியை எதிர்பார்ப்பது?"

யாழ்ப்பாணம் வடமாராச்சி தபால் நிலையத்தில் பணியாற்றி வந்த கேதீஸ்வரன் தேவராஜா தான் பிறந்த சூழலை நேசித்த சூழலியலாளராவார். அரசாங்க ஆதரவுடன் யாழ்ப்பாணம் குடத்தனைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மணல்கொள்ளைக்கு – இயற்கை அழிவுக்கு எதிராக முன்னணியில் நின்று செயற்பட்டவர் கேதீஸ்வரன். இது தொடர்பாக அவர் அரச அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், ‘பேஸ்புக்’ சமூக ஊடகத் தளம் ஊடாக பயமின்றி, தனது கருத்தை சமூகமயப்படுத்தவும் செய்தார். அச்சுறுத்தல், பயமுறுத்தலைக் கண்டு பின்வாங்காத கேதீஸ்வரன், குடத்தனை மணல் வளத்தைப் புகைப்படமாக்கி “குடத்தனை மணல்வளம் அழிப்பு” என பேஸ்புக்கில் பதிவேற்றி அனைவரது கவனத்தையும் ஈர்க்க முயற்சிசெய்தார்.

மஹிந்த அரசாங்கத்தின் இராணுவம், பொலிஸின் உதவியுடன் இயங்கிய மணல் கொள்ளையர்கள் மண்கும்பான், மணல்காடு பகுதிகளில் இயற்கை அரண்களாக இருந்த மணல் மேடுகளை அழித்துவிட்டு குடத்தனையையும் குழிகளாக்கும் அழிவு நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்திருந்த காலம் அது. அவர்களது முன்னெடுப்பை தடுத்து நிறுத்துமளவுக்கு குடத்தனை மக்கள் தங்களது எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியிருந்த போதிலும், மஹிந்த அரசின் இராணுவத்தைக் கொண்டு மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் மணல் கொள்ளையர்களின் தலைமை இறங்கியிருந்தது.

கடல் நீர் உட்புகக்கூடிய வகையில் மணல் அகழ்ந்தெடுக்கப்பட்டு குழிகளாக்கப்பட்டுள்ள பகுதி.

கேதீஸ்வரன் அதற்கும் அஞ்சவில்லை. அச்சுறுத்தல் நடவடிக்கை ஒருபக்கம் நடந்தேற கேதீஸ்வரன் குடத்தனை மணல்கொள்ளை தொடர்பான புகைப்படங்களை பேஸ்புக் ஊடாக சமூயமயப்படுத்திக் கொண்டே இருந்தார்.

விளைவு...

2011 புத்தாண்டு கேதீஸ்வரனுக்குப் பிறக்கவில்லை.

2010 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி இரவு 9 மணியளவில் முகம் முழுவதுமாக ஹெல்மட் அணிந்த இருவர் கேதீஸ்வரனை தேடி வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.

அன்று இரவு நடந்த சம்பவத்தை கேதீஸ்வரனின் தாய் இவ்வாறு விவரிக்கிறார்,

“சரளமாக தமிழ் பேசக்கூடியவர்கள் இருவர், கேதீஸ் இருக்கிறாரோ என்று கேட்டவாறு வீட்டின் வெளியில் நின்றுகொண்டிருந்தார்கள். அவர் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்த நேரமே கதவைத் தள்ளிக்கொண்டு அந்த இருவரும் வீட்டிற்குள் வந்தார்கள். அப்போது மகனும் மருமகளும் அறையில்தான் இருந்தார்கள்.

வந்தவர்கள் கொம்பியூட்டர் எங்கே? கொம்பியூட்டர் எங்கே? என்று கேட்டு உரத்து சத்தம் போட மகன் அறையிலிருந்து வெளியில் வந்தார். வந்திருந்த இருவரும் அடையாளம் காணமுடியாதவாறு ஹெல்மட் அணிந்திருந்தார்கள்.

மகனை கதவோடு இருந்த பிளாஸ்ரிக் கதிரையில் உட்காருமாறு கூறி ஒருவன் அவர் பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தான். அவனிடம் துப்பாக்கியொன்று இருந்தது. மகன் அருகில் என்னை அவன் நெருங்கவிடவில்லை. மற்றையவன் அறையினுள் சென்று கம்பியூட்டரைத் தேடிக்கொண்டிருந்தான்.

10, 15 நிமிடங்கள் இருக்கும், அறையில் இருந்தவன் ஏதோ தேடிக் கொண்டிருந்தான். மேசையின் ஓரத்தில் இருந்த லெப்டொப் கீழே விழுந்து பாரிய சத்தமொன்று கேட்டது. இரண்டு தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் சத்தமும் கேட்டது. என்ன நடந்தது என்றே தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன்.

மருமகள் உரத்து கத்தினாள். என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியவில்லை, திரும்பி மகனைப் பார்த்தபோது அவன் தலை சரிந்தவாறு கதிரையில் உட்கார்ந்திருந்தான். இரத்தம் ஆறு போல நிலத்தில் ஓடிக் கொண்டிருந்தது.”

அதுவரை அவரது குரலில் ஏற்ற இரக்கங்கள் இருக்கவில்லை. கடகடவென பேசிக்கொண்டிருந்தவர் திடீரென அமைதியானார். பேசமுயற்சிக்கிறார், ஆனால் முடியவில்லை. வார்த்தை வரவில்லை, கண்ணீர் வழிந்தோடுகிறது. 6 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் அவரின் மனத்திரையில் ஓடிக்கொண்டிருப்பது தெரிகிறது.

“எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அந்த நேரம் ஐயோ என்று சத்தம் போடக்கூட என்னால் முடியவில்லை. யாரும் சத்தம்போடவும் கூடாது, இங்கிருந்து ஒரு அடிகூட நகரவும் கூடாது என்று துப்பாக்கி வைத்திருந்தவன் கூறினான். பிறகு இரண்டு பேரும் ஓடிய பிறகுதான் ஐயோ என்று கத்தினேன்.”

அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சத்தமாக அழத்தொடங்கினார். வெகுநேரமாக அமைதியாகவே இருந்தேன், அவர் பேசும் வரை காத்திருந்தேன்.

“இரவு 9.30 மணியிருக்கும். உடனே எம்பியூலன்ஸுக்கு அறிவித்தும் எம்பியூலன்ஸ் வந்துசேரவில்லை. அந்த நேரம் எம்பியூலன்ஸ் இந்த சேர்சிலதான் இருந்திருக்கிறது. ஆனால், எம்பியூலன்ஸ் வரவில்லை. பிறகு மகனை தூக்கிக்கொண்டு ஓடினோம். இரத்தம் நிற்கவேயில்லை, ஓடிக்கொண்டே இருந்தது. பிறகு வாகனமொன்றைப் பிடித்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு சென்றோம். போகும் வழியில் மகன் உயிர் பிரிந்தது.”

வீட்டினுள் நுழைந்ததும் கேதீஸ்வரன்...

மறுநாள் புதுவருடம் என்பதால் இந்தப் பக்கமெல்லாம் வெடிச்சத்தம் கேட்டதனால் பக்கத்தில் இருந்தவர்களுக்கு துப்பாக்கிச் சத்தம் கேட்டிருக்கவில்லை என்று கூறும் அவர், எங்களது அலறல் சத்தத்தைக் கேட்ட பிறகு எல்லோரும் வந்தார்கள் என்றும் கூறுகிறார்.

தாயை சமாளிக்க குறுக்கிட்ட கேதீஸ்வரனின் தம்பி, “அவர்கள் பேசியது யாழ்ப்பாணத் தமிழ் இல்லை. தமிழும் சிங்களமும் கலந்துதான் பேசினார்கள்” என்றவர், “இந்தப் பகுதிக்குள் யாராவது வருவதாக இருந்தால் பாதுகாப்புத் தரப்பினருக்குத் தெரியாமல் வர முடியாது. அப்படியிருக்கும் போது முகம் முழுவதும் ஹெல்மட் அணிந்துகொண்டு எவ்வாறு, அதுவும் இரவு வரமுடியும்? என்று கேள்வி எழுப்புகிறார்.

“இந்தச் சந்தியில பொயின்ட், மணற்காட்டு சந்தியில ஒரு பொயின்ட் – ஆர்மி, கோயில் பக்கம் ஆர்மி. இதுக்குள்ள வந்து சுட்டுப்போட்டு யாராலயும் தப்பிப் போக முடியாது. பாதுகாப்புத் தரப்பினரோடு சம்பந்தப்பட்டவர்கள் தவிர வேறு யாராலயும் இதை செய்ய முடியாது” என்று கூறும் அவர், இந்த காரணத்தினால்தான் எமக்கு எப்போதும் நீதி கிடைப்பதில்லை என்றும் கூறுகிறார்.

தனது சகோதரனின் மரணத்துக்கு எப்போதும் நீதி கிடைக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

கேதீஸ்வரன் கொலை செய்யப்பட்ட இடத்தையும், துப்பாக்கி ரவை துளைத்த கதவையும் தாய் காட்டியவாறு சத்தமாக அழ ஆரம்பித்தார்.

“என்னிடம் விளக்கத்தைக் கேட்டுவிட்டு சுடுங்கள் என்று என் மகன் கூறினான். அப்படிக் கூறியவனை சுட்டுவீழ்த்தினார்களே... மரம்போல அப்படியே சரிந்தானே...”

“சுடுவதற்கு முன் மகனைக் கட்டிப்பிடித்திருந்தால் எனக்கொரு சூடு அவனுக்கு ஒரு சூடாவது விழுந்திருக்கும். அப்போதாவது அவனைக் காப்பாற்றியிருக்கலாம். என் கண்முன்னே மகனை சுட்டு வீழ்த்திவிட்டார்களே...”

கேதீஸ்வரனின் உடல் புதைக்கப்பட்டுள்ள இடம்

அவரிடம் இனி எதுவும் கேட்க மனம் இடம்கொடுக்கவில்லை. மகனின் உயிர் பிரிந்த இறுதி நாள் நினைவுகளை மீண்டும் அந்தத் தாயை மீட்டிப்பார்க்க வைத்தது வேதனையாக இருந்தது. தொடர்ந்து அமைதியாகவே இருந்தார்.

வீட்டினுள் நுழையும்போதும், விடைபெறும் போதும் அவரிடமிருந்து ஒரே வாரத்தைதான் வெளிப்பட்டது.

“யாரிடம் நீதியை எதிர்பார்ப்பது?”

Created By
Selvaraja Rajasegar
Appreciate

Credits:

Author

NextPrevious
NextPrevious

Report Abuse

If you feel that the content of this page violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.