Loading

இந்த பூமியே எமக்கு மருந்து! இரணைதீவு மக்கள் தொடர் போராட்டம்

இரணைதீவு நுழைவுப்பகுதி...

"அந்த நாட்களில் இந்தத் தீவிலிருந்து சுகவீனமடைந்து மருந்து எடுப்பதற்காக எவருமே வெளியில் சென்றதில்லை. நாங்கள் இத்தீவிலுள்ள எமது மருந்துகளாலேயே சுகப்படுத்திக் கொண்டோம். நாங்கள் அனைத்தையும் இங்கு பயிரிட்டோம். மருத்துவ மூலிகைகளிலிருந்து பழ மரங்கள், மரக்கறிகள் என அனைத்தையும் பயிரிட்டிருந்தோம். வெள்ளைக்காரர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட சில வீடுகளும் உள்ளன. ஆகவேதான் இவை எமது பாரம்பரிய நிலம் என்று கூறுகிறோம். இங்கு எம்முடைய தேவாலயமும் இருக்கின்றது, எமக்கு பாடசாலையும் இருக்கின்றது. ஆனாலும், இப்போது அவை அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளது."

"எமது பெற்றோரை இழந்தோம். எமது உறவுகளை இழந்தோம். எமது பிள்ளைகளை இழந்தோம். இப்போது நாங்கள் கேட்பது எமது நிலத்தை மாத்திரமே. அதையாவது தாருங்கள்."

"இதற்கு முன்னர் இந்த அரசாங்கம் எமது காணிகளைத் தருவதாக உறுதியளித்தது. ஆனாலும் ஒரு வருடம் கடந்த விட்டது. எங்களது காணிகளை இதுவரை ஒப்படைக்காத காரணத்தினாலேயே இன்று (23.04.2018) நாங்கள் இந்தத் தீவுக்கு வந்தோம். எமது காணிகளை எம்மிடம் ஒப்படைக்கும் வரையில் நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம். எமது தொழில்களை நாங்கள் இழந்துள்ளோம். நாங்கள் அங்கிருந்து தொழிலை செய்கின்ற போது 15 லீட்டருக்கு மேல் அவசியமாகின்றது. இங்கிருந்து தொழிலை செய்வதானால் ஒரு லீட்டர் மட்டுமே அவசியம். நாங்கள் இங்கு தொழிலை மேற்கொள்ள வந்தாலும் துரத்துகின்றனர். ஏன் எங்களை விரட்டுகின்றனர். இவை எமது பாரம்பரிய நிலங்கள்."

"எமக்கு யாரும் பணம் தரவேண்டியதில்லை. எமது இந்தக் காணிகளை விடுவித்து எமது தொழில்களை மேற்கொள்வதற்கான சுதந்திரத்தினைத் தந்தால், தேவாலயத்தை மாத்திரமல்ல எமது வீடுகளை, பாடசாலையை எதனையும் எம்மால் செய்து கொள்ள முடியும்."

இரணைதீவு தேவாலயம்

"இந்தப் பூமி எமக்கு மருந்தாகும்! நாம் சுதந்திரமாக வாழ வேண்டுமெனில் இந்த நிலமானது அவசியமாக எமக்குக் கிடைக்க வேண்டும்."

கையிலிருந்த சிலுவையின் மீது தமது நம்பிக்கையை வைத்து டக்ளஸ் துஷி இவ்வாறு கூறுகிறார். எழுத வேண்டிய பெரும்பாலான விடயங்களை ஒரே மூச்சில் கூறி முடித்தார் அவர்.

தீவுப்பகுதியில் பாரம்பரியமாக மீனவத் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்த மக்கள் அத் தீவிலிருந்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவு மாதா நகரில் தொடர்ச்சியாக 359 நாட்களையும் தாண்டி போராட்டத்தை நடத்தி வந்தார்கள். யுத்தம் நிறைவடைந்து 9 வருடங்களைக் கடப்பதற்கு இன்னும் இருப்பதோ ஒரு சில நாட்களே. ஆனாலும் கடற்படையானது முழு நிலத்தையும் ஆக்கிரமித்து மக்களுக்கு இருக்கின்ற சட்டரீதியான உரிமைகளையும் கவனத்திற் கொள்ளாமல் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

எனவே, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரணைதீவு மாதா நகரில் தீவிலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 300இற்கும் அதிகமான மக்கள் 23ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2018 அன்று சுமார் 40 படகுகளில் இரணைதீவுக்கு அடையாளமாக வருகை தந்தனர். அவர்கள் தீவினை அடைந்த உடனே கடற்படையின் இரண்டு சிப்பாய்கள் வந்தார்கள். மக்களுடன் வருகை தந்த சமயத் தலைவர்கள் அவர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.

“இன்று ஏன் நீங்கள் இங்கு வந்தீர்கள்? நாங்கள் கடற்படையின் மூலமாக ஒரு மில்லியன் ஒதுக்கியுள்ளோம். தேவாலயத்தினை மீண்டும் புனரமைப்பதற்கு. நாங்கள்தான் செய்வோம்” என்று கடற்படையைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள்.

“எமது பிரச்சினை தேவாலயம் அல்ல. இந்த அப்பாவி மக்களுடைய தேவை மீண்டும் இங்கு வந்து முன்பு போல வழிபாடுகளில் ஈடுபடுவதே. முன்பு போல தமது உழைப்பின் ஜீவனோபாயமாகிய மீனவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதேயாகும். தாம் பிறந்த, தமக்கு சட்டரீதியான உரிமையுடைய தமது பாரம்பரிய நிலங்களில் வாழ்வதே, அங்கிருக்கும் மரஞ் செடிகளைப் பார்ப்பதே அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. இரணைதீவு என்பது இவர்கள் பிறந்த, 200 வருடங்களாக வாழ்ந்த பூமி. அவர்கள் அவர்களது வீடுகளைப் பார்வையிட வேண்டும், அதில் அவர்கள் வாழ வேண்டும். அவர்களது வேண்டுகோள் மிக சரளமானது. நீங்கள் உங்களது கடற்படையின் கடமைகளைச் செய்யுங்கள். மக்கள் அவர்களாக தமது ஜீவனோபாயத்தை மேற்கொள்வார்கள். நீங்கள் இங்கு இருப்பதென்பது அவர்களுக்கு பிரச்சினையில்லை. இன்று இவர்கள் வந்தது இங்கு இருப்பதற்கே. இதுதான் இவர்களது பயணத்தின் நோக்கம்” என்று அருட்தந்தை அருட்செல்வம் அவர்களுக்குப் பதிலளித்தார்.

“இன்று மீண்டும் திரும்பிச் செல்வீர்களா?” இரணைதீவிலிருந்து மீண்டும் திரும்பி வருவதற்கு முன்னர் சில தாய்மாரிடம் ‘விகல்ப’ வினவியபோது அவர்கள் ஒருமித்த குரலில், “நாங்கள் இங்கிருந்து செல்லமாட்டோம்… பாருங்கள் உடைகளைக் கூட மாற்றி விட்டோம். இதுதான் எமது சொத்து. எமது நிலம். ஷெல் தாக்குதலின் போதும் கூட இந்த பூமி எம்மைப் பாதுகாத்தது. நாங்கள் செல்லமாட்டோம். எமக்கு எமது காணிகளை மீண்டும் தரும் வரையில் நாங்கள் செல்ல மாட்டோம்” என்று தெரிவித்தனர்.

நாம் வாழும் நாட்டின் ஒரு புறத்தில் தமது வாழ்க்கையினை நடாத்துகின்ற எமது மக்களே இவர்கள். எமக்கிருக்கின்ற உரிமை இவர்களுக்கு கிடைக்காமல் போவதற்கும், போராட்டங்களை நடாத்தி பெற வேண்டியுள்ளதற்கும், அதனைச் சிலர் கூறுகின்ற விதத்தில் பரிசில்களாகவோ சன்மானங்களாகவோ பெற்றுக் கொள்ளும் நிலைமைக்கும் ஏன் இந்த மக்கள் மட்டும் தள்ளப்பட்டுள்ளார்கள்.

எமது சகோதர தளமான ‘விகல்ப’ இரணைதீவுக்குப் பயணம் செய்து மக்களின் உணர்வுகளை சிங்கள மொழியில் பதிவு செய்திருந்தது. அந்தக் கட்டுரையின் தமிழாக்கமே இங்கு தரப்பட்டுள்ளது.

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.