Loading

2018 மாற்றத்தின் சிறந்த INSTAGRAM படங்கள் 20

‘மாற்றம்’ 2018ஆம் ஆண்டு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் #SnapShot என்ற ஹேஷ்டெக்குடன் பல்வேறு பிரச்சினைகள் சார்ந்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. காணி உரிமை, பால்நிலை சமத்துவம், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம், ஊடக சுதந்திரம், தோட்டத் தொழிலாளர்களின் உரிமை மீறல், நுண்நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்களினால் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கும் பெண்கள், ரமழான் நோன்புப் பெருநாள், கறுப்பு ஜூலை, போருக்குப் பிந்திய மக்களின் வாழ்க்கை, ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலைசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டம், ஒக்டோபர் 26 அரசியலமைப்பு சதிக்கு எதிரான போராட்டங்கள் என மாற்றம் 2018ஆம் ஆண்டு பல புகைப்படங்களை தனது கமராவில் பதிவுசெய்திருந்தது. அவற்றுள் சிறந்த 20 புகைப்படங்களை தொகுத்து இங்கு தந்திருக்கிறோம்.

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சிறிய வீடொன்றில் தனது பெரியம்மாவின் குடும்பத்துடன் தற்போது 3 பிள்ளைகள், கணவருடன் வாழ்ந்துவரும் 41 வயதான ரத்னமாலி, தனது பூர்வீக நிலத்தில் எவ்வாறு வாழ்ந்தார் என்பது குறித்தும், இப்போது நிலமின்றி, சொந்தங்கள் இன்றி, பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் இவ்வாறு தனது கதையைக் கூறுகிறார். மேலும் படிக்க: http://maatram.org/?p=6659
சம்பவம் நடந்த நேரம் நாங்கள் இங்கு இருக்கவில்லை. எங்களுடைய பயிர்களுக்கு, வீடுகளுக்குத் தீவைத்திருக்கிறார்கள். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எமது காணிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. கடந்த வருடம்தான் இங்கு வந்து குடியேறினோம். நிலக்கடலை பயிரிட்டிருக்கிறோம். தென்னங்கன்றுகளை நட்டிருக்கிறோம். இதனை மட்டும் நம்பி வாழ முடியாது, கூலி வேலை செய்துதான் வாழ்க்கையை நடத்திவருகிறோம். எங்களுடைய காணிகளில் நாங்கள் பலவந்தமாகவே வந்து குடியேறியிருக்கிறோம். கொன்றாலும் இனிமேல் இங்கிருந்து நாங்கள் போகமாட்டோம். எங்களுடைய பெற்றோர் வாழ்ந்த இடம் இது. மேலும் படிக்க: http://maatram.org/?p=6580
“காயமடைந்து ஒரு சில மாதங்களில் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தேறிவிட்டேன். ஆனால், எனக்கு ஏற்பட்ட காயம் பிள்ளைகளை நீண்டகாலமாகப் பாதித்திருந்தது. ஆனால், இப்போது அவர்கள் அப்படியில்லை. சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் அப்படியிருக்கவே இந்தக் கஷ்டத்திலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் மண்ணைக் கொத்துவதை விட்டுவிட்டு ஒரு சில பகுதிகளில் நடப்பதற்கே பயமாக இருக்கிறது. என்ன செய்வது, வேறு தொழில்கள் இல்லை. கூலி வேலை மட்டும்தான் இங்கு இருக்கிறது.” மேலும் படிக்க: http://maatram.org/?p=6803
லோன்காரன் நேரம் காலமில்லாமல் வீட்டுக்கு வந்து உட்கார்ந்து கொள்வான், நகரமாட்டான். பிள்ளைகள் லோன்காரனைக் கண்டவுடனே நடுக்கத்துடன் எனது பின்னால் ஒழிந்துவிடுவார்கள். லோன்காரன் அடிக்கடி வருவதால் அக்கம் பக்கம் இருப்பவர்களும் கூடாத மாதிரி பேசத் தொடங்கினார்கள். அதன் பிறகுதான் இங்கு வந்தேன் என்கிறார் *பிருந்தா. மேலும் படிக்க: http://maatram.org/?p=6856
ஹோட்டலில் காடையர்கள் கூட்டம். கண்ணில் பட்டால் அவ்வளவுதான் என்று எண்ணிக்கொண்டு கொழும்பு, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்திருக்கும் சம்மாங்கோட்டு கோவிலினுள் நுழைகிறார். பெற்றோல் குண்டுவீச்சுகளுக்கு மத்தியில் தனியாளாக அங்கு மூன்று தினங்கள் தங்கியிருக்கிறார். பசி பொறுக்க முடியாமல் கோவிலில் இருந்து வெளியேறிய சர்மா வாய் பேச முடியாதவராக காடையர்களின் வாகனத்திலேயே ஏறி சிலாபம் உடப்புக்குச் சென்று உயிர் தப்புகிறார். மேலும் படிக்க: https://maatram.org/?p=6993
ஜூலை கலவரம் இடம்பெற்று 35வருடங்களாவதை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு துறைசார்ந்தவர்களை நேர்க்காணல் கண்டுவருகிறது. மனித உரிமை செயற்பாட்டாளர் சி. கிரிஷாந்த், ஆவணப்பட இயக்குனர் து. ஜெரா, சமூக நீதிக்கான வெகுஜன இயக்கத்தைச் சேர்ந்த மு. மயூரன், கவிஞரும் எழுத்தாளருமான சி. கருணாகரன் ஆகியோர் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். மேலும் படிக்க: http://maatram.org/?tag=1983-black-july
"பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்குமுன் பெற்றோர்கள் அவர்களிடம் கேளுங்கள். விருப்பமா விருப்பமில்லையா என்று. அப்படி கேட்காமல் செய்துவைப்பதன் மூலம் என்னைப் போன்று பிள்ளைகள் கணவரின் ஆதரவும் இல்லாமல் தாய், தந்தையின் ஆதரவும் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள்." மேலும் பார்க்க: http://maatram.org/?p=6681
அவரது வெள்ளைப் பையில் காணாமலாக்கப்பட்ட பேரனுடைய படமும் ஆவணங்களும் நிறைந்திருக்கின்றன, முறைப்பாடுகள், அழைப்புக் கடிதங்கள், அனுப்பிய கடிதங்கள் என்று பல்வேறுபட்ட கடிதங்கள் நிறைந்திருக்கின்றன. போராட்டம் நடத்தப்படும் அலுவலகம் எங்கும் அந்தப் பையுடனேயே அழைந்து திரிகிறார். வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யோகரதியின் கதையை 360 டிகிரியில் சுழலும் வகையிலான காணொளிகளைக் கொண்டு உருவாக்கியிருக்கிறோம். விர்சுவல் ரியாலிட்டி (VR) ஹெட்செட் மூலமும் இதனைப் பார்க்கலாம். மேலும் பார்க்க: http://maatram.org/?p=7089
“ஒருவன், தன் குடும்ப உறவுகள், கொடுக்கல் வாங்கல், வணிகத் தொடர்புகள், அண்டை, அயலார் உறவுத் தொடர்புகளில் செய்யும் தவறுகள் ஆகியவற்றுக்குத் தொழுகையும் தர்மமும் பரிகாரம்” - நபிகளார்.
சிறுவர் தின வாழ்த்துக்கள்... இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது மலையத்திலேயே குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறப்பது அதிகமாகக் காணப்படுகின்றது. 2200 கலோரிக்கு குறைவாக உணவு உண்பதும், 8 மணித்தியாலத்திற்கு குறைவாகவே உறங்குவதும், கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்பகாலத்தில் நாளொன்றிற்கு 2.5 மணித்தியாலத்திற்கு மேல் ஒரே இடத்தில் நிற்பதும், உடல் நிறை குறைவாக உள்ளதுமே இதற்கு காரணமாகும். இதன் காரணமாக மலையகத்தில் பிறந்த குழந்தைகள் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளை விட மூன்று மடங்கு வளர்ச்சி குறைந்தவர்களாகவும் நகரப்பகுதி குழந்தைகளை விட எடை குறைந்தவர்களாகவும் காணப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் பெண்கள் பற்றிய தமது பழைமையான கண்ணோட்டத்தினை வைத்துக்கொள்ள சுதந்திரம் இருக்கும் அதே சந்தர்ப்பத்தில், அரசாங்க ஊழியர்களாக சம்பளம் பெற்றுக் கொண்டு இந்நாட்டின் பிரஜைகளுக்காக, அதிலும் அரைவாசி பெண்களாக இருக்கும் நிலையில், இத்தகைய நிலைப்பாட்டில் இருப்பது சட்டமுரணானதும், அரசியலமைப்புக்கு முரணானதுமாகும்.
வட்டுவாகல் பாலத்தை ஒட்டி முல்லைத்தீவு பக்கமாக வளர்ந்திருக்கும் மரம் இது. கிட்டத்தட்ட நூறு வயதை அண்மித்திருக்கும் என்று கூறுகிறார்கள் மரத்துக்குச் சொந்தமானவர்கள். 2009 இறுதிப் போரின் போது இந்த மரத்தில் இலங்கை இராணுவத்தினர் நிலைகொண்டு தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரமாக பல துப்பாக்கி ரவைகளை உடலில் சுமந்துகொண்டிருக்கிறது. வட்டுவாகல் பாலத்தில் நடந்த அழிப்புச் சம்பவங்களுக்கு சாட்சியாக இன்று நின்றுகொண்டிருக்கிறது, பேச முடியாமல்.
இறுதிப் போர் தீவிரமாக இடம்பெற்ற வலைஞர்மடம் பகுதி இது. இந்த இடத்தில் மக்கள் பயன்படுத்திய சாப்பாட்டுத் தட்டுகள், தண்ணீர் குடிக்கும் கோப்பை, கரண்டி, சப்பாத்துகள், பாடசாலைப் பை, கொடிகள் என பல்வேறு பொருட்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. அதேபோல, ஒரு தொகை ஆடைகளும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன. ஆண்களின், பெண்களின் உடைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட உடைகள். இவற்றைப் பார்க்கும்போது - இவை பொதுமக்களுடைதா? அல்லது விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுடையதா? இவ்வளவு தொகையான ஆடைகள் ஒரே இடத்தில் ஏன் கிடக்கின்றன? இந்த ஆடைகளுக்குச் சொந்தமானவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லை, கொல்லப்பட்டுவிட்டார்களா? என்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியாமல் உள்ளது.
முத்தயன்கட்டு குளத்து நீர் சில மாதங்கள் கழித்து திறந்துவிடப்பட்டிருக்கிறது. வரட்சியினால் அடிக்கடி நீர் திறந்துவிடப்படாமல் தேக்கிவைத்து சில மாதங்களுக்கு ஒரு தடவைதான் திறந்துவிடுவார்களாம். வாய்க்கால் ஊடாக புழுதி மண்ணை நனைத்துக்கொண்டு தோட்டங்களுக்குள் புகுந்துகொண்டிருக்கும் நீரில் காலை புதைத்துக்கொண்டு புதினம் பார்ப்பதுபோல் இந்தச் சிறுமி பார்த்துக்கொண்டிருக்கிறாள். திருமணம் முடிக்கும் வயதில்லை சிறுமியின் தாய்க்கு. பார்க்கப்போனால் அவளும் சிறுமிதான். ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யும்போது ஏற்பட்ட பழக்கம் காதலாகி தாய்மையடையும் அளவுக்கு வந்திருக்கிறது. அவனோ அவள் தாய்மையடைந்ததும் தப்பியோடிவிட்டான். இவளுக்குத்தான் இந்த நிலை என்றால் இவளுடைய சகோதரியும் மகளொருத்தியுடன் தனித்துநிற்கிறாள். போருக்குப் பிந்திய கடந்த 9 ஆண்டுகளில் ஜனநாயகம், மனித உரிமைகள், போர்க்குற்றம் போன்ற சொற்களுக்குள் மூழ்கி அதற்குத் தீர்வுகாண மூச்சுவாங்க ஓடிக்கொண்டிருக்கிறோமே தவிர இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தோ குறைந்தபட்சம் கலந்துரையாடல்களிலாவது ஈடுபடுவது குறித்தோ சிந்தித்திருப்போமா?
முன்னாள் போராளியான இவர் புதுக்குடியிருப்பில் நிறுவப்பட்டிருக்கும் இராணுவ வெற்றிச் சின்னத்திற்கு அருகில் சிறிய கடையொன்றை நடத்திவருகிறார். கடலை, பனங்கருப்பட்டி, பனங்கிழங்கு போன்றவற்றை விற்றுவருகிறார். இறுதிப் போரின்போது காயத்துக்கு உள்ளான இவருக்கு முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நிரந்தரமாக சக்கரநாற்காலியில் உட்காரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் கேட்டு பல இடங்களுக்குச் சென்றபோதிலும் யாரும் தொழில் வழங்க முன்வராத நிலையில் இந்தக் கடையை ஆரம்பித்ததாகக் கூறுகிறார். விடுதலைப் புலிகள் இயக்கம் பயன்படுத்திய ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தபோது இப்போதை விட அதிகளவு உழைக்க முடிந்ததாகக் கூறும் இவர் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்களே அதிகளவில் தன்னுடைய கடைக்கு வருவதாகவும் கூறுகிறார்.
ஊடகவியலாளர்கள், நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் கடந்த வருடம் ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கான எதுவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது.
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலைசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நீதியான விசாரணைக்கு வலியுறுத்தியும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் இலங்கைக்கான சௌதி தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுக்கப்பட்ட படம்.
உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி சிவில் சமூக அமைப்புகள் கொழும்பு, கொள்ளுப்பிட்டி சந்தியில் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம்.
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட ஜனநாயக விரோத தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இதுவரை போராடிவந்த அமைப்புகள், குழுக்கள் இன்று ஒன்றாக இணைந்து “சூழ்ச்சியைத் தோற்கடிக்க மக்களே முன்வாருங்கள்” என்ற தொனிப்பொருளில் லிப்டன் சுற்றுவட்டாரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். அதன்போது, நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மாதிரியொன்றை போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தியபோது எடுக்கப்பட்ட படம்.
என்ன தேயில குடிக்கிறீங்க? என்ன தேயிலனு தெரியாது. அந்த தேயிலை தூள் பெயர் தெரியுமா? டஸ்ட்டுன்னு சொல்றாங்க. நீங்க எடுக்குற கொழுந்துல என்னென்ன வகையான தேயிலைத்தூள் செய்றாங்கனு தெரியுமா? ஒன்னு ரெண்டு தெரியும். கண்டிருக்கீங்களா? இல்ல. ஒரு நாளாவது குடிச்சிருக்கீங்களா? (சிரிக்கிறார்) குடிக்க ஆசை இருக்கா? (மீண்டும் சிரிக்கிறார்). மேலும் படிக்க: https://maatram.org/?p=7342
Created By
Selvaraja Rajasegar
Appreciate

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.