நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் : விசேட ஆய்வு எல்.எல்.ஆர்.சி அறிக்கை

காலனித்துவ ஆட்சிக்காலத்திலிருந்து இலங்கை பன்மைத்துவ கலாசாரம் கொண்ட நாடாகக் கட்டியெழுப்பப்பட்டாலும் இனமுரண்பாடு என்பது தவிர்க்கமுடியாததொன்றாகக் காணப்படுகின்றது. இவ் முரண்பாடு காரணமாக இலங்கையின் அரசியல், பொருளாதார, கலாசார, சமூக ரீதியான கட்டமைப்புக்கள் இஸ்திரமற்ற தன்மை கொண்டதாகக் காணப்படுகின்றது. இலங்கை வாழ் மக்களுக்கு கடந்த மூன்று தசாப்த கால யுத்த வடுக்கள் இன்றும் மறக்க முடியாததொரு பாடத்தினையே கற்றுத்தந்துள்ளது. மூன்று தசாப்த காலத்தில் துன்பத்தில் சிக்குண்டவர்களில் முக்கியமானவர்கள் வடக்கு-கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களாவர். இவ்வாறான நிம்மதியற்ற நிலையை ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த மக்களும் அனுபவித்தனர் என்பது உண்மையே ஆகும். ஒரு பொதுவான கருப்பொருளாக 2009ஆம் ஆண்டு யுத்த வெற்றி சமாதானத்தை நோக்கிய பாதையில் செல்ல எத்தணித்த போதும் உண்மையான நல்லிணக்கம் என்பதனை உணர்ந்து கொள்ள முடியாதுள்ளது. அதாவது 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையின் தோல்வியினைத் தொடர்ந்து, பல உயிர்களை கொன்று அதனூடாக இலங்கை அரசாங்கத்தினால் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு எதிராக வென்றெடுக்கப்பட்ட யுத்த வெற்றியானது யுத்த நிறுத்தம், சமாதானம், சகவாழ்வு, தொடர்பிலான ஜனநாயக விழுமியங்களை தோல்வியடையச் செய்துள்ளது.

இதன் காரணமாகத்தான் இறுதிக் கட்ட போரின் போது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான சம்பவங்கள், அழிவுகள், சித்திரவதைகள், அத்துமீறல்கள், உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை மாநாட்டின் சிபர்சுகள், சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச பொது மன்னிப்பு சபை போன்றன இலங்கை மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்ற அழுத்தத்தினைக் கொடுத்து வந்தது. இதனை மறுத்த அரசாங்கம் சர்வதேசத்தின் ஆக்கிரமிப்பிற்கு ஒரு வழியாக சர்வதேச விசாரணை அமைந்து விடும் என்ற காரணத்தினாலும் பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கோடும், இவ் அழுத்தம் இலங்கையின் நலன்களில் பாதகமான விளைவுகளை ஏற்பத்திவிடும் என்ற சிந்தனையின் வெளிப்பாடாக உள்நாட்டிலேயே உண்மைத் தன்மை கொண்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என சர்வதேசத்திற்கு உறுதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 15ஆம் திகதி விசாரணைச்சட்டத்தின் 393 அத்தியாயம், பிரிவு 2 இன் அடிப்படையில் 2010ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15ஆம் திகதி கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழுவானது 8 அங்கத்தவர்களைக் கொண்டு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் உருவாக்கப்பட்டது. இவ் ஆணைக்குழு 2002ஆம் ஆண்டு மாசி மாதம் 21ஆம் திகதி தொழிற்பாட்டிற்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்தமைக்கான காரணம் அதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் 19ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்ளல் என்பவற்றை பிரதான கடமையாகக் கொண்டிருந்தது. இதற்காக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழு 57 கூட்டங்கள் நடாத்தியதோடு 12 வெளிக்கள விஜயம் மேற்கொண்டது. இவற்றோடு ஆயிரத்திற்கு மேற்பட்ட வாய்மூல சாட்சியங்கள், ஐயாயிரத்திற்கு மேற்பட்ட எழுத்து மூல சாட்சியங்களைப் பெற்று 9 அத்தியாhயங்களை கொண்ட அறிக்கையை 2011ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 15ஆம் திகதி நிறைவு செய்து, 2011ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்தது. இதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு மார்கழி மாதம் 16ஆம் திகதி பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேச அழுத்தங்களைக் குறைப்பதற்கான ஒரு வியூகமாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழு உருவாக்கப்பட்டாலும் இன்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கவனம் செலுத்தாமை தொடர்பான முறைப்பாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு சவாலாக அமைந்துள்ளது. 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் நிறைவேற்றப்பட்ட 19ஃ02 தீர்மானத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான செயற்றிட்டமொன்றை வரையும் படி இலங்கைக்கு கட்டளை விதிக்கப்பட்டது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் 285 பரிந்துரைகளில் 92 பரிந்துரைகள் தேசிய செயற்றிட்டத்தில் உள்வாங்கப்பட்டன. அதாவது மனிதநேயம், மனித உரிமை, மீள் குடியேற்றம், நல்லிணக்கம் போன்ற பல பரிந்துரைகளை குறிப்பிடலாம். இவற்றில் சமூக இணக்கப்பாட்டிற்கான பிரதான பரிந்துரையாக நல்லிணக்கம் காணப்படுகின்றது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழு தொடர்பாக பல்வேறுபட்ட கட்டுரைகள் வெளிவந்த போதும் அவை பெரும்பாலும் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், அதிகாரப்பகிர்வு போன்றவற்றை மையப்படுத்தியதாகக் காணப்படுகின்றது. நல்லிணக்கம் சார்பான ஆய்வுகள் குறைவானதாகவே காணப்பட்டது. இதன் விளைவாக இவ் இடைவெளியினை பூர்த்தி செய்யும் வகையில், “நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள்: விசேட ஆய்வு எல்.எல்.ஆர்.சி அறிக்கை” என்ற தலைப்பில் இவ் ஆய்வு கட்டமைக்கப்பட்டுள்ளது.

Made with Adobe Slate

Make your words and images move.

Get Slate

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.