கூட்டு ஒப்பந்தம்: ரூபா 730 எவ்வாறு பெறுவது? “மாதம் பூராகவும் மாடுபோல உழைத்துவிட்டு சம்பளப் பட்டியலைப் பார்க்கும்போது வயிறு எரிகிறது.”

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் புதுப்பிக்கப்பட வேண்டிய சம்பள உயர்வு பற்றிய கூட்டு ஒப்பந்தமானது 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி பல அரங்கேற்றங்களுக்குப் பிறகு கைச்சாத்திடப்பட்டது.

அடிப்படை சம்பளம் வெறும் ரூபா 50 அதிகரிக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில், ஏற்கனவே வழங்கப்பட்ட விலைக்கேற்ற கொடுப்பனவு ரூபா 30 அப்படியே வழங்குவதற்கும், ஏற்கனவே 75 சதவீத வரவுக்கு வழங்கப்பட்ட ரூபா 140 ஐ ரூபா 60ஆகக் குறைக்கப்பட்டும், இதுவரை இல்லாத உற்பத்தித்திறன் கொடுப்பனவு என்ற புதியவகை கொடுப்பனவாக ரூபா 140 சேர்க்கப்பட்டுள்ளன.

அத்தோடு, இதுவரை காலமும் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டு வந்த பாக்கி சம்பள நடைமுறை இல்லாமல் செய்யப்பட்டு 2015 ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்கப்படவேண்டிய 18 மாத பாக்கி சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இதுவரை செய்யப்படாமை தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கான திட்டமிட்ட செயற்பாடாகவே கருதவேண்டியுள்ளது.

"கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக எனக்குத் தெளிவில்லை. இந்த முறை கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக எதுவுமே தெரியாது."

இந்த நிலையில், புதிய கூட்டு ஒப்பந்தத்தின் படி அதிகரிக்கப்பட்ட ரூபா 730 முழுசாக கையில் கிடைக்காமல் பழைய சம்பளத்தை விட குறைவாகவே பெறுவதாக தொழிலாளர்கள் கூறுகிறார்கள். தங்களால் ஒரு நாளைக்கு 18 கிலோகிராம் கொழுந்து எடுக்கமுடியாது என்றும், அப்படி எடுத்தால் கூட பல்வேறு காரணங்களைக் கூறி கம்பனியினர் கொழுந்தின் அளவைக் குறைப்பதாகவும், தங்களால் எதுவும் செய்யமுடியாதுள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆனால், சந்தாப் பணம் தவறாமல் மாதாமாதம் சம்பளத்தில் இருந்து எடுத்துக்கொள்ளும் தொழிற்சங்கத்தினர் இது குறித்து எதுவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று கூறுகிறார்கள்.

இந்தப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவரும் தொழிலாளர்களைச் சந்திக்க மஸ்கெலியா பிளான்டேஷனைச் சேர்ந்த தோட்டமொன்றுக்குச் சென்றிருந்தேன். அவர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கீழே காணலாம்.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக எனக்குத் தெளிவில்லை. இந்த முறை கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக எதுவுமே தெரியாது. நீங்கள் 18 கிலோ எடுத்தால் ரூபா 730 என்று மட்டும்தான் சொன்னார்கள். வேறு எதுவும், எவராலும் விளங்கப்படுத்தப்படவில்லை. அடிப்படை சம்பளம் எவ்வளவு என்றுகூட எனக்குத் தெரியாது.

நாங்க ஒரு நாளைக்கு 18 கிலோ கொழுந்து எடுக்கவில்லை என்றால் 590 ரூபாதான் தருகிறார்கள். இது பழைய சம்பளத்தை விட குறைந்த தொகைதான்.

தொழிற்சங்கங்களுக்குப் பொறுப்பாக தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களூடாகவாவது தொழிலாளர்களை தெளிவுபடுத்தியிருக்கலாம். அதுகூட இடம்பெறுவதில்லை.

இப்போது வரட்சி காலமென்பதால் கொழுந்தும் இல்லை. எங்களால் முழுச் சம்பளத்தையும் பெற்றுக்கொள்ள முடியாது. வேறு பகுதிகளைப் போல் இங்கு எங்களுக்கு கூலி வேலை கூட கிடையாது.

“இந்த மாதம் ரூபா 13,000 தான் கிடைத்தது. அதில் இப்போது ரூபா 500 தான் மீதமாக இருக்கிறது.”

மின்சாரக் கட்டணம், வங்கிக் கடன்கள், கல்யாணச் சடங்குகளுக்கு, மருந்து எடுப்பதற்கு, சாப்பாட்டுக்கு என்று ஒரு மாதத்துக்கு அவ்வளவு செலவுகள் இருக்கின்றன. இந்த மாதம் ரூபா 13,000 தான் கிடைத்தது. அதில் இப்போது ரூபா 500 தான் மீதமாக இருக்கிறது.

மாதா மாதம் ரூபா 150 சந்தாப் பணமாக தொழிற்சங்கத்தினர் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களால் எந்தப் பயனும் எங்களுக்குக் கிடைப்பதில்லை.

எங்கள் பகுதியில் ‘சைனா’ தேயிலைக் கன்றுகள்தான் அதிகமாக இருக்கின்றன. கடும் வெயிலால் தேயிலைகள் காய்ந்துவிட்டன. அதனால், இந்த மாதம் 18 நாள் வேலை கிடைப்பது நிச்சயமில்லாமல் இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் நாங்கள் எடுக்கும் கொழுந்து நிறையிலிருந்து ஒரு நாளைக்கு 6 முதல் 8 கிலோக்களைக் கழித்துக் கொள்கிறார்கள்.

நாங்கள் கொழுந்து பறிக்கும் இடத்திற்கே லொரி மூலம் வந்து கொழுந்தை எடுத்துக்கொண்டு போவதால் போக்குவரத்து செலவு என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். ஒரு சில சந்தர்ப்பங்களில் கூடுதலாக கொழுந்து பறித்தால் ஒரு நாளைக்கு 8 கிலோக்கள் எங்களது அட்டையில் பதிவாகாது.

அத்தோடு, மழைக்காலங்களில் நீர் இலைகளில் தங்கியிருப்பதால் கொழுந்தின் நிறை அதிகமாக இருக்கும் என்று கூறியும் இதே மாதிரி நாங்கள் எடுக்கும் கொழுந்தின் அளவைக் குறைக்கிறார்கள்.

இப்படி அளவு குறைத்து சேகரிக்கப்பட்ட கொழுந்தை லொரி வரும் வரை கொழுந்து பைகளில் நிரப்பிவைத்திருப்போம். நீண்ட நேரத்தின் பின்னர் வரும் லொரி மூலம் கொண்டு சென்று தொழிற்சாலையில் மீண்டும் நிறையை அளவிட்டுப் பார்ப்பார்கள். அப்போது நிறை குறைந்திருப்பதாகக் கூறி மீண்டும் மாலைநேரம் எடுக்கும் கொழுந்தில் மேலதிகமாக கழித்துக் கொள்வார்கள். கேட்டால் துரை சொல்வதைத்தான் செய்யவேண்டியிருக்கிறது என்று ஐயாமார் கூறுவார்கள்.

எங்களுடைய பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியாது. இப்படியே நாங்கள் அழிந்துபோனால்தான் எங்களுக்கு முடிவு கிடைக்கும்.

எனக்கு எல்லாம் கழிக்கப்பட்டு ஒரு ஐயாயிரம், ஆறாயிரம் மாதிரிதான் சம்பளம் கிடைக்கும். தீபாவளி முற்பணம், கடன், அரிசி மாவுக்கான கொடுப்பனவு, சந்தா என அனைத்தும் கழிக்கப்படுகின்றன.

எனக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் நால்வரும் பாடசாலை செல்கிறார்கள். இவர்கள் அடிக்கடி சுகவீனம் அடைவார்கள். அதனால், கொடுக்கும் வேலை நாட்களிலும் எனக்கு வேலைக்குப் போகமுடியாத நிலை.

போன மாதம் மகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டிருந்ததால் 4 நாட்கள் வேலைக்குப் போக முடியவில்லை. பிறகு, கணவர் விழுந்து கைமுறிந்ததால் வைத்தியசாலைக்குப் போய் வரவேண்டியிருந்ததால் அதன்போதும் 3 நாட்கள் போகமுடியவில்லை. அந்த மாதம் மொத்தமாக 3,000 ரூபாதான் சம்பளம் கிடைத்தது. கணவர் கொழும்பில் கராஜ் ஒன்றில் வேலை செய்வதால் கொஞ்சம் சமாளித்துக் கொண்டு போகிறோம்.

டிசம்பர் மாதம் பிள்ளைகளின் பாடசாலை செலவு மட்டும் ரூபா 10,500. அதையும் மாதாமாதம் தருவதாகக் கூறித்தான் வாங்கினோம். அதுவும் முழுமையாக வாங்கவில்லை. இன்னும் வாங்கவேண்டும். இன்னும் புத்தகங்கள் வாங்காததால் நான்காவது பிள்ளையை பாலர் பாடசாலைக்குக்கூட அனுப்பவில்லை. என்ன செய்வது?

கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக யாருமே எங்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், மாதாமாதம் ரூபா 160 மட்டும் சம்பளத்தில் பிடித்துக் கொள்கிறார்கள். ஏதாவது பணம் தேவையாக இருந்தால் மாத்திரம் வந்து கூட்டம் போடுவார்கள். 12 வருடகாலமாக சந்தாப் பணம் செலுத்தி வருகிறேன். ஆனால், ஒரு பயனும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, சந்தாப் பணம் செலுத்துவதை நிறுத்தலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

பிள்ளைகள் பாடசாலை செல்லும் வறுமையான குடும்பங்களைத் தேர்வு செய்தாவது தொழிற்சங்கங்கள் புத்தகங்களைக் கொடுக்கலாம். ஒரு புத்தகங்கள் கூட கொடுப்பதில்லை.

பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு 5 நாளைக்கும் ஐந்து விதமாக உணவு அனுப்புமாறு கூறுகிறார்கள். திங்கள் - நூடுல்ஸ், செவ்வாய்கிழமை – கௌபி/ கடலை/பயறு, புதன்கிழமை – கீரை, முட்டை, பருப்பு, சோறு, வியாழக்கிழமை – இட்லி/ இடியப்பம்/ புட்டு, வெள்ளிக்கிழமை – பால்சோறு. நான் எடுக்கும் சம்பளத்தைக் கொண்டு இதையும் செய்தாகவேண்டும். பிள்ளைகளின் படிப்பு முக்கியம்தானே. இதையும் செய்துகொடுக்கவில்லை என்றால் என்னை மாதிரிதானே பிள்ளைகளும் எதிர்காலத்தில் கஷ்டப்படும்.

இப்போது இங்கே கொழுந்தே கிடையாது. 12, 13 கிலோ கொழுந்துதான் ஒரு நாளைக்கு எடுக்கலாம். இப்படியிருக்கும்போது ரூபா 730 சம்பளத்தை எவ்வாறு பெறமுடியும்? இதையெல்லாம் தெரிந்தல்லவா கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.

போன மாதம் 24 நாட்கள் வேலை செய்தேன். ஆனால், எல்லாம் கழிப்பட்டு ஆறாயிரம் ரூபாதான் மீதமாக இருந்தது. கணவர் கொழும்பில் மேசன் தொழில் செய்து அனுப்பிவைக்கும் பணத்தைக் கொண்டுதான் 3 பிள்ளைகளையும் படிக்க வைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறேன்.

மகன் உயர்தரம் படிப்பதால் நிறைய செலவாகிறது. தனியார் வகுப்புக்கு கொடுப்பதற்காகவே உழைக்க வேண்டியிருக்கிறது.

இந்தத் தேயிலைக் காட்டிற்குள் எப்படியும் பிள்ளைகளை விடக்கூடாது என்ற இலட்சியத்துடன்தான் பிள்ளைகளைப் படிக்கவைத்துக் கொண்டிருக்கிறேன்.

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எமது வாழ்க்கை சிறப்பாக இல்லை. கடனில்தான் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த வீடு கூட லோன் எடுத்து கட்டியதுதான்.

ரூபா 730 சம்பள அதிகரிப்பை எப்படியும் எங்களால் அனுபவிக்க முடியாது. எங்களுக்கென்று எவ்வளவு தேவைகள் இருக்கின்றன. பாடசாலைக் கூட்டங்களுக்குப் போகவேண்டும், திருமண வீட்டழைப்புகள், சுகவீனம் காரணமாக எங்களால் வேலைக்குப் போகமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. அத்தோடு, ஒரு நாளைக்கு 18 கிலோ எடுக்குமளவுக்கு கொழுந்தும் இல்லை. அப்படியிருக்கும்போது எவ்வாறு ரூபா 730 பெறுவது? இப்போது கிடைக்கும் ரூபா 590 இன்னும் கொஞ்ச நாளில் ரூபா 500 ஆகப்போகிறது.

ரூபா 1,000 சம்பள அதிகரிப்புக்காக வேலைக்குப் போகாமல் வீதி வீதியாகப் போராட்டம் நடத்தினோம். ஆனால், கடைசியில் எங்களால் இவ்வளவுதான் முடியும் என்று ரூபா 730 அதிகரிப்புடன் நிறுத்திக்கொண்டார்கள். எங்களால் என்னதான் செய்ய முடியும்.

தேயிலைத் தோட்டத் தொழிலைத் தவிர வேறொரு தொழில் எதுவும் எங்களுக்குத் தெரியாது. பிள்ளைகளையும் படிக்க வைக்கவேண்டும். நாங்களும் வாழவேண்டும் என்பதால் செய்யவேண்டியுள்ளது.

மாதம் பூராகவும் மாடுபோல உழைத்துவிட்டு சம்பளப் பட்டியலைப் பார்க்கும்போது வயிறு எரியும். இவ்வளவு கழிக்கப்படுகிறதே என்ற கவலைத்தான். என்ன செய்ய? சம்பளம் போதாததால் கடன் வாங்கித்தான் வாழ்க்கையை நடத்தவேண்டியிருக்கிறது.

கடன் மட்டுமல்ல, அதனோடு சேர்த்து வட்டியும் செலுத்தவேண்டியிருக்கிறது. அந்த வட்டி, கடனைக் கொடுத்தவனுக்கா? அல்லது கம்பனிக்கா என்று கூட தெரியாது.

எங்களுடைய இரண்டு பிள்ளைகள் பாடசாலை செல்கிறார்கள். மகள் இந்த முறைதான் பாலர் பாடசாலை செல்கிறார். இப்போதைக்கு இரண்டு பேருக்குத்தான் புத்தகங்கள் வாங்கியிருக்கிறோம். அதுவும் மாதாமாதம் தருவதாக ஒப்புக்கொண்டுதான் வாங்கியிருக்கிறோம்.

தோட்டத்தில் பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்துக்குக் கூட மாதம் ரூபா 20 கொடுக்க வேண்டியிருக்கிறது. தண்ணீர் மட்டும் சுடவைத்துக் கொடுக்கிறார்கள். மற்றையவை அனைத்தும் நாங்கள் கொண்டுசென்று கொடுப்போம்.

பிள்ளைகளுக்கு மருந்து எடுக்கப்போனால் ரூபா 500 மேல்தான் வைத்தியருக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. மருந்து எடுத்துத்தானே ஆகவேண்டும். எங்களுக்கு ஏதாவது என்றால் ரசம், பெனடோல்தான் மருந்து.

ரொட்டியும் சோறும்தான் எங்களது சாப்பாடு. இரவு சமைக்கும் சோறு மிகுதியாக இருந்தால் காலையில் சாப்பிடுவோம். ஒருநாளும் சோறை வீசுவதில்லை. இல்லையென்றால் அதை வறுத்து வேறு ஏதாவது செய்வோம், இல்லையென்றால் அரைத்து தோசை சுடுவோம். நாங்கள் எப்போதும் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டதில்லை. பெருநாள் வந்தால் மட்டும்தான் வாய்க்கு ருசியாகச் சாப்பிடுவோம்.

கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் ரூபா 730 சம்பள அதிகரிப்பு என்று கூறுகிறார்கள். வெறுமனே ரூபா 50தானே அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரூபா 50க்காக எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கிறது.

எதற்கும் பிரயோசனமில்லாத தொழிற்சங்கத்துக்காக ஏன் சந்தாப் பணம் கொடுக்க வேண்டும்? அந்தப் பணத்தை பிள்ளைகளின் படிப்புக்காவது செலவளிக்கலாம் என்று சந்தாப் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டேன். ரூபா 1,000 தருவதாக ஒப்புக்கொண்டுவிட்டு பின்னர் ரூபா 730க்கு ஒப்புக்கொண்டதனால்தான் இந்த முடிவை நான் எடுத்தேன்.

நான் மட்டும் அல்ல, நிறைய பேர் சந்தாப் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டார்கள்.

எமது தோட்டத்தில் நாங்கள் எடுக்கும் கொழுந்தில் ஒரு கிலோ முதல் 4 கிலோ வரை கழித்துக் கொள்கிறார்கள். கேட்டால், “கொழுந்து நிறை குறைவாக இருப்பதாக தொழிற்சாலையில் இருந்து தகவல் வந்திருக்கிறது, அதனால்தான் குறைக்கவேண்டியுள்ளது” என்று ஐயா கூறுவார். நாங்கள் பறிக்கும் கொழுந்தின் நிறையை அளந்தவுடன் உடனடியாகக் கொண்டுபோக வேண்டியது யாருடைய கடமை? பறித்து வைக்கப்பட்ட கொழுந்தின் மீது வெயில் பட்டால் கொஞ்சம் நிறை குறையத்தான் செய்யும். மொத்தமாக 400 கிலோகிராம் இருந்தால் 100 கிலோவா குறையப்போகிறது. 5, 10 கிலோ என்று கூறலாம்.

ஆனால், அதற்காக இங்கு வேலை செய்யும் 400 பேரிடம் ஒரு கிலோ படி கழித்தால்...? இது எவ்வளவு பெரிய சுரண்டல்...? இதுதான் இங்கு நடக்கிறது. இங்கு மட்டுமல்ல மலையகம் பூராகவும் இவ்வாறுதான் நடக்கிறது.
தொழிலாளர் ஒருவர் ஒவ்வொரு நாளும் எடுக்கும் கொழுந்தின் நிறையைக் குறிக்கும் அட்டை.
தொழிலாளி ஒருவரின் 2016 டிசம்பர் மாத சம்பளப் பட்டியல்
Created By
Selvaraja Rajasegar
Appreciate

Made with Adobe Slate

Make your words and images move.

Get Slate

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.