#WomensDay : இவர்களுக்குமா?

இம்முறை “மாற்றத்திற்காக துணிந்து நில்” (#BeBoldForChange) என்ற தொனிப்பொருளில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

தங்கள் வாழ்விலும் நிச்சயமாக மாற்றம் ஒன்று நிகழும் என்ற விசுவாசத்துடன், காணாமலாக்கப்பட்ட பிள்ளைகள், கணவர் வீடு வந்துசேர்வார்கள், விடுதலை செய்யப்படுவார்கள், இல்லையென்றால் அவர்கள் இருக்கும் இடத்தையாவது அறிந்துகொள்ளலாம் என் நம்பிக்கையுடன் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி அப்பாவிப் பெண்கள் மாற்றத்திற்காக துணிந்து நின்றார்கள்.

ஆனால், அந்த மாற்றத்தின் வரவை எதிர்பார்த்து இரண்டு வருடங்கள் கடந்தும் இன்றுவரை அவர்கள் வீதியில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உள்ள வீதிகள் அவர்களின் நிரந்த வசிப்பிடமாக மாறிவிட்டன.

நடைபிணங்களாக வாழும் அவர்களின் கதைகள் இவை.

“நான் இருக்கிறன் அம்மா, எங்க இருக்கிறன் என்டு தெரியல்ல, தேடி கண்டுபிடிங்க…”

மகனை தேடிக்கொண்டிருந்த தாய்க்கு மூன்று வருடங்களின் பின்னர் ஒரு சிறிய கடதாசியில் வந்து கிடைத்த தகவல் இது.

இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்த இராசநாயகம் லீலாவதி மீண்டும் 2012ஆம் ஆண்டளவில் கிளிநொச்சியில் மீள்குடியேறியபோது இந்தக் கடிதத் துண்டு கிடைக்கிறது.

“யுனிசெப்ல பொடியல் வந்திருக்கினம், அவங்கதான் இந்தத் துண்டு குடுத்திட்டு போயிருக்கினம். திருகோணமல ரெண்டாம் கட்டையிலதான் அவங்க இந்தத் துண்ட கண்டெடுத்திருக்கினம். அப்ப நாங்க இருந்தது வவுனியா முகாமுல.”

லெட்டர் ஒன்டும் இல்ல, சின்ன துண்டுல, பென்சிலால எழுதியிருந்தவர். அது அவர்ட கையெழுத்துதான்” என்று உறுதியாகக் கூறுகிறது லீலாவதியின் கண்கள்.

“நான் இருக்கிறன் அம்மா, எங்க இருக்கிறன் என்டு தெரியல்ல, தேடி கண்டுபிடிங்க” – தகப்பன்ட பெயர், என்ட பெயரும் போட்டு வீட்டு எட்ரஸும் போட்டிருந்தது, அது மகன்ட கையெழுத்துதான்” – மீண்டும் உறுதிபடக் கூறுகிறார் லீலாவதி.

17 வயதான இராசநாயகம் நிரோஜன் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் வலுக்கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உள்ளானவர் என்றும், அவரை கடைசியாக 2008ஆம் ஆண்டு தான் சந்தித்தார் என்றும் லீலாவதி கூறுகிறார்.

“2008 பன்னிரெண்டாம் மாதம் 15ஆம் திகதி கடைசியா அவர உடையார்கட்டுப் பகுதியில வச்சுதான் கண்டு கதைச்சனாங்கள். “அம்மா, என்ன எதிர்பார்க்காதீங்க, நான் சரணடையப் போறன். நீங்க, தங்கச்சி, அக்காக்கள கூட்டிக்கொண்டு உள்ளுக்க போங்க” என்டுதான் சொன்னவர். கடைசியா அவ்வளவுதான் பேசினவர். அவரோட இருந்த நாலு பேர்ல ரெண்டு பொடியள மாத்தளன் ஆஸ்பத்திரியில வச்சி கண்டனான். காயப்பட்டிருந்தவ. மகன் ஆயுதத்தோட போய் சரணடைஞ்சதாதான் அவையளும் சொன்னவ” – அழுகைக் குரல் முந்திக்கொண்டு வர லீலாவதியின் கண்களில் கண்ணீர் வரவில்லை. காணாமல்போயுள்ள இரண்டு பிள்ளைகளையும் தேடியழைந்த கண்கள் எத்தனைக் காலம் கண்ணீர் சிந்தியிருக்கும். பிள்ளைகள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் எத்தனை பேரிடம் கதை கூறியிருப்பார். அந்த நீண்ட லிஸ்ட்டில் அடுத்ததாக நானும் சேர்ந்திருப்பதை கண்கள் கூறுகிறது.

லீலாவதியின் மகன் மட்டுமன்றி அவரது நான்காவது மகளான இராசநாயகம் ஜென்சிகா என்பவரும் 2009 ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி காணாமல்போயுள்ளார். அப்போது அவருக்கு 15 வயதிருக்கும்.

“கடைசி நேரம்தான் மகள் காணாமல்போனவ, நாங்க இராணுவத்திட்ட போய் சேர ஒரு கிழமைக்கு முதல்ல.”

“இயக்கம் புடிச்சதா இராணுவம் புடிச்சதா, எதன்டு எங்களுக்குத் தெரியாது. கடற்கரை பக்கம் போனவ, அன்டயலயிருந்து அவ பத்தி ஒரு தகவலும் இல்ல. மாமாட மகன் ஒருத்தர் சொன்னவர், அவா காயப்பட்டு இருக்கா என்டு. நாங்க இராணுவத்திட்ட போறதுக்கு 2 நாட்களுக்கு முன்னம்தான் காயப்பட்டிருக்கா, தேடிப்பார்த்தனான். ஆனா அவ கிடைக்கல்ல. இங்க வந்த பிறகும்கூட அவ தொடர்பா எந்த தகவலும் இல்ல” என்று கூறும் லீலாவதி, ஆனால் மகன் உயிருடன் இருப்பதாக சிஜடியினரே நேரில் வந்து கூறினர் என்றும் கூறுகிறார் அவர்.

“சிஐடி வந்து இங்க விசாரிச்சவன், கிளிநொச்சி பொலிஸ்ல இருந்து வந்தும் விசாரிச்சவ. ரெண்டு பேர பத்தியும் விசாரிச்சவ. சிஐடியே சொன்னவர் உங்கட மகன் இருக்கிறான் என்டு. மகன பத்தி நாங்க சொல்ல முதல்லயே அத்தன தரவயும் அவன் சொல்லிட்டான். “நம்பியிருங்கோ, உங்கட மகன் வருவார், மகள பத்தி ஒருதகவலும் தெரியாது” என்று சிஐடிகாரர் சொன்னவங்க” – அரசாங்கமே கூறியது போன்றதொரு நம்பிக்கை லீலாவதிக்கு. எங்கேயாவது மகன் இருக்கிறான், எப்படியாவது தேடிக்கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கை அவரிடம்.

“எவ்வளவு சனம் செத்தது, அந்த சனத்தோடு நாங்களும் செத்து புள்ளகள் பிழைச்சிருந்தா சந்தோஷம். அப்படியொரு நிலமய கடவுள் தரல்லயே என்டு நினைக்கிறம். இல்ல, எல்லோரும் ஒன்டா செத்திருந்தாலும் பரவாயில்ல, எல்லாம் முடிஞ்சிருக்கும். இல்ல, என்ட கண்ணுக்கு முன்னாடி புள்ளக செத்திருந்தாலும் பரவாயில்ல, இனி என்ட புள்ள வராது… வராது… என்டு இருக்கலாம். இவ்வளவு சனம் செத்ததுதானே… ஆனா, இப்ப சாகும் வரைக்கும் இதே யோசனதானே…? என்ட புள்ளக இருக்குதா? இல்லையா? நான் தேடுற மாதிரி அதுகளும் எங்கள தேடுதா?”

“கை கால் இல்லாம வந்திருந்தா கூட சாகும் வரைக்கும் என்ட புள்ளகள வச்சி பார்த்திருப்பன். கடவுள் அப்படிகூட கண்ல காட்டேல்ல…” – வற்றிப்போயிருந்த கண்ணீர் ஊற்றெடுக்கிறது. ஓவென அழ ஆரம்பிக்கிறார். திடீரென எழுந்து அறையினுள் சென்றவர் ஒரு பைலுடன் திரும்பி வருகிறார். தரையில் உட்கார்ந்தவாறு பைலில் இருந்த அனைத்தையும் காண்பிக்கிறார்.

முறைப்பாட்டுக் கடிதங்கள், ஜனாதிபதி ஆணைக்குழு கடிதங்கள், மனுக்கள், படங்கள் என தரை நிறைந்து கிடக்கிறது. அவை அனைத்திலும் தேடல், அலைச்சல், நம்பிக்கை, ஏமாற்றம், எதிர்காலம் புதைந்திருப்பதைக் காணமுடிகிறது.

அனுராதபுரத்தைச் சேர்ந்த மயூரி இனோகா ஜயசேன மூன்று பிள்ளைகளின் தாயாராவார். 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்ட இவர் பின்னர் கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் விடப்பட்டிருந்தார். காணாமல்போயுள்ள கணவர் மதுஷ்கவை தேடிக்கண்டுபிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை தான் இந்தப் பயங்கர சூழ்நிலைக்கு அவர் முகம்கொடுத்துள்ளார்.

அநுராதபுரம் புதிய பஸ் நிறுத்தும் இடத்தில் பழக்கடை ஒன்றை நடத்தி வந்த மதுஷ்க ஹரிஸ் த சில்வா 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி கடத்திச் செல்லப்படுகிறார். முன்னாள் இராணுவச் சிப்பாயான இவர் நண்பர்கள் இருவருடன் முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதோரால் நண்பர்களோடு கடத்தப்படுகிறார். பின்னர் நண்பர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட, இதுவரை மதுஷ்க வீடு திரும்பவில்லை.

மதுஷ்கவை தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி மயூரி உட்பட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடத்தியிருந்தனர். அனுராதபுரம் நீதிமன்றம், பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் பாதையில் இரு பிள்ளைகளுடன் மயூரி அமர்ந்தவாறு தனது கணவரை மீட்டுத்தருமாறு போராடினார்.

படம்: @vikalpavoices

“மனுஷ்கவுக்கு நிகழ்ந்த அநியாயத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றே நான் ஜனாதிபதி காரியாலயம் முன்பாக அமர்ந்திருந்தேன். காலத்தை வீணடிக்கும் பதிலே எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. கடிதங்கள் ஜனாதிபதி காரியாலயத்திலிருந்தும் பிரதமர் காரியாலயத்திலிருந்தும் வந்துகொண்டிருக்கின்றன. அந்தக் கடிதங்களில், எனக்கு வீடொன்று தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்கு இருப்பதற்கு வீடொன்று இல்லை என்றால் ஒரு மரத்தின் கீழ் தங்கிவிடுவேன், உணவு இல்லையென்றால் பட்டினிக் கிடப்பேன், நான் எனது கணவரைத் தேடித்தருமாறுதான் கேட்கிறேன்” என்று கூறுகிறார் மயூரி.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உறுதிமொழியொன்றை பெற்றுக்கொள்தற்காக கணவர் காணாமலாக்கப்பட்டு 3 வருடங்கள் பூர்த்தியான 2016 செப்டெம்பர் 2ஆம் திகதியன்று மீண்டும் காலிமுகத்திடல் அருகில் தொடர் சத்தியாகிரகப் போராட்டமொன்றை மயூரி ஆரம்பித்தார்.

ஜனாதிபதியால் 5 நிமிடங்கள் மயூரிக்காக ஒதுக்க முடியவில்லை. அங்கிருந்து மயூரி பலவந்தமான வெளியேற்றப்பட்டார்.

“என்ட மகள் சிவபாதம் டோஜினி. வீட்ல இருந்தபோது 2007 பெப்ரவரி 24ஆம் திகதி இயக்கம் பலாத்காரமா பிடிச்சு கொண்டு போனது. அப்போ அவக்கு 17 வயசுதான். இயக்கம் பிடிச்சுக்கொண்டு போன பிறகு 2008இல ஒருநாள் டோஜினி வீட்டுக்கு வந்தா. வந்து 3 நாட்கள் இருந்தவ திரும்பவும் கிளம்பிட்டா.

2009 ஏப்ரல் 8ஆம் திகதி இடம்பெயர்ந்து கொண்டிருந்தபோது பொக்கணை பகுதியில் வைத்து அவவ கண்டனான். அவவோட பேச முயற்சி செய்தும் முடியல்ல. அதுக்குப் பிறகு பல இடங்கள்ல தேடியும், முறைப்பாடு தெரிவித்தும் ஒரு தகவலும் இல்ல.

ஒரு நாள் பெண் ஒருவர் மகனைப் பார்த்து டோஜினி எப்படி இருக்கானு கேட்டிருக்கா. ஈழநாதம் பத்திரிகையில் வேலை செய்தவவாம்.

புல்மோட்டையில் தான் பஸ்ஸில் இருந்தபோது இன்னொரு பஸ்ஸில் மகளைக் கண்டிருக்கிறா. டோஜினியிடம் எப்படி இருக்கிற எண்டு அவ கேட்டிருக்கிறா. அதுக்கு மகள், நெஞ்சுப் பகுதியிலும் காலிலும் காயம்பட்டுள்ளதாக சொலியிருக்கிறா. டோஜினி இருக்கிறா, தேடுங்க எண்டு அவா மகனிட்ட சொல்லிட்டுப் போயிருக்கா.

2013 ஜூலை மாதமளவில பாஸ்கரன் ஜெசிந்தா என்ற பெண்ணொருவர் இந்த ஹொஸ்பிட்டலடியில வந்து இங்க யாராவது பிள்ளைகள் காணாமல் போயிருக்காங்களா என கேட்டிருக்கிறா. அப்ப அங்க இருந்த பொடியனொருவன் அவாவ இங்க கூட்டி வந்தான். தன்னுடைய அண்ணன், புதுக்குடியிருப்பு பகுதியில் யாராவது காணாமல்போயுள்ளார்களா என்று விசாரிக்கச் சொல்லியதாக என்னிடம் சொன்னார். உடனே அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பில் உள்ள அவாவுடைய அண்ணன் ஜெயசீலன் சின்னமணியை தொடர்புகொண்டு பேசினோம்.

அவர் மீன் வியாபாரம் செய்வதோடு, சவூதி, டுபாய்க்கு ஆட்கள் அனுப்பும் சப் ஏஜென்சியும் நடத்துகிறார். அவர்ட மகள் சவூதியில் இருக்கிறா. அவதான், புதுக்குடியிருப்பு ஹொஸ்பிட்டல் முன்னால யாராவது காணாமல்போயிருந்தா எனக்கு மெசேஜ் தாங்க எண்டு சொல்லியிருக்கிறா. அந்தப் பிள்ள இங்க (சவூதி) இருக்கிறா. அவங்கட அம்மா, அப்பா அங்க இருக்கினமாம் எண்டு தெரிஞ்சு சொல்லுங்க எண்டு அவ சொல்லியிருக்கிறா.

வீசா போட்டுத் தாங்க. உடனே நான் அங்க போய் பாக்குறன் எண்டு மகன் சொன்னவ. சரியெண்டு சொன்னவர், மூன்டு நாள் கழிச்சி எடுத்து முன்னுக்கு பின் முரணா பேசினார். அது டோஜினி இல்ல, லோஜினி என பேசத் தொடங்கினார். ஆனா, அதுக்கு முதல்ல பேசுறபோது சிவபாதம் டோஜினி, அண்ணன் (மகன்) ஒருவர் வெளிநாட்ல இருக்குறார், புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டாரத்த சேர்ந்தவர் என எல்லாம் சொன்னார். நாங்க எதுவும் சொல்லாம இவ்வளவையும் அவர்தான் சொன்னார்.

தகவல் தெரிஞ்சா அறியத்தாரோம் என்டு தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தாங்க.

அவாட படத்தயாவது அனுப்பச் சொன்னன், பார்க்கலாம் எண்டு அவர் சொன்னார். நெடுக இப்படித்தான் சொல்லினம். அவர நேரில சந்தித்து மகன் பேசியிருக்கான். அப்போது, மகள் இருக்கும் இடத்தின் சவூதி நம்பர கேட்ட மகனிடம், இல்லையென்று சொல்லிவிட்டு, போனை கொடுத்திருக்கிறார். இருந்தால் எடுத்துக்கொள்ளுங்க என்று. அதில் சவூதி நம்பர் எதுவும் இருந்திருக்கவில்லை.

“தங்கச்சியை கண்டுபிடித்து தருவதாகக் கூறி ஏற்கனவே ஒருவர் எங்களிடம் 30,000 ரூபா பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

“எனது கணவர் தியாகராஜா, முல்லைத்தீவு வலய பிரதி கல்விப் பணிப்பாளர். எனக்கு நான்கு பிள்ளைகள். மூன்று ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும். இறுதி யுத்த காலப்பகுதியில் எனது இரண்டாவது மகனான தியாகராஜா பிரதாப்பை (வயது – 20) விடுதலைப் புலிகள் பிடித்துக்கொண்டு சென்றனர். அந்தநேரம் அவர் மொறட்டுவை பல்கலைக்கழத்துக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார். புலிகள் பிடித்துக்கொண்டு போய் 15 நாட்களில் அவரது சடலத்தைத்தான் காணக்கிடைத்தது.

அதன் பின்னர் இருக்கும் இரண்டு பிள்ளைகளையும் இழந்துவிடுவோம் என்ற பயத்தில் எப்படியாவது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அவர்களை அனுப்பிவிட முடிவுசெய்தோம். கணவருடன் எனது இரு பிள்ளைகளையும் 4.4.2009 அன்று இரவு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அனுப்பினேன். அவர்களை இராணுவப் பகுதிக்கு அழைத்துச் செல்ல, ஒரு குழுவினர் ஆளுக்கு 20 ஆயிரம் ரூபா பணம் வாங்கினார்கள். அவர்களே சாலை – மாத்தளன் கடல் வழியாக கணவர் பிள்ளைகளை அழைத்துச் சென்றார்கள். அன்று இரவே அவர்கள் இராணுவ பகுதிக்குள் சென்றுவிட்டனர் என்றும் சொன்னார்கள்.

சரணடையும் பெண்கள் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என கதைகள் உலாவியதால் நானும், மகளும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல முதலில் விரும்பவில்லை.

மே.17 இல் போர் முடிந்ததும், நான் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மகளுடன் வந்து, இராமநாதபுரம் நலன்புரி நிலையத்தில் தங்கினேன். அங்கிருந்து கொண்டு, என் கணவரையும், மகன்மாரையும் தேடத் தொடங்கும்போது, அந்தச் சம்பவம் நடந்தது.

2009 ஜூன் மாதம் 6,7 அருணாசலம் முகாமில் இருந்தபோது எங்களது உறவினர் ஒருவர் இறந்தார். அவரை அடக்கம் செய்ய முகாமில் இருந்து வெளியில் வந்தபோது, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தயசீலன் என்ற கிராம சேவகரைச் சந்தித்தேன். கணவரை வவுனியா வைத்தியசாலையில் கண்டதாகச் சொன்னார். எங்கேயோ என்னவர்கள் இருக்கின்றார்கள் என்கிற நம்பிக்கை, சந்தோஷம் இருந்தபோதிலும் தொடர்ந்து அவர் பேசிய வார்த்தைகள் பயத்தை ஏற்படுத்தியது.

மகன் உள்ளே சிகிச்சைப் பெறுவதாகவும் இன்னும் பல விடங்களைப் பற்றி கூறினார். முன்னுக்குப் பின் முரணாக பேசிக்கொண்டிருந்தார். உங்கள் கணவரைப் பார்க்கும்போது சித்தம் கலங்கியிருந்தார். நெஞ்சளவுக்கு தாடி வளர்த்திருந்தார். அதற்குப் பிறகு எதுவும் கதைக்காமல் வைத்தியசாலையின் உள்ளே சென்றுவிட்டார்.

”அவர் பற்றி நான் அறிந்த கடைசிச் செய்தி இவை மட்டும்தான்.”

“கணவரும் பிள்ளைகளும் வீடுவந்து சேராத நிலையில், மகளையும் படிக்கவைக்க முடியாமல் கஷ்டத்தில் இருந்த நான், கணவரின் மாத வருமானத்தை பெற்றுக்கொள்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டேன். நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இந்த விஷயத்தை தெரிவிக்க, அவர்கள் கணவருக்கான மரணசான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்கள். அவ்வாறு எடுத்தால்தான் பென்ஸன் எடுக்கலாம் என்றும் கூறினார்கள்.

கணவரை நான்தான் அனுப்பிவைத்தேன். வவுனியா வைத்தியசாலையில் அவர் இருக்கிறார் என்றும் கிராமசேவகரின் தகவல்கள் இருக்க, வழியில்லாமல் – வறுமை காரணமாக கணவர் உயிரோடு இருக்க – மரணசான்றிதழுக்கு விண்ணப்பித்தேன். இப்போது மாதாமாதம் அவரின் பென்ஸன் காசு வந்துகொண்டிருக்கிறது.

உயிரோடு கணவர் இருக்கிறார் என்று தெரிந்தும் மரணச்சான்றிதழை பெற்றுக் கொண்டு வாழ்கிறோமே...”

“மே 2009 பொக்கனையில் வைத்து கணவர் காணாமல்போனார். இடம்பெயர்ந்து போகேக்க மயங்கி விழுந்திருக்கிறார். பிறகு வவுனியா ஹொஸ்பிட்டல்ல இவர கண்டவங்க வந்து சொன்னவங்க. அப்போ எங்களுக்கு வெளியால போக முடியாது. ஆனால், இதுவரை அவர் வீடு வந்து சேரல. தேடிக் கொண்டுதான் இருக்கிறம்”

செல்வநாயகம், ஊரில் பெரிய விவசாயி. இவர் காணாமல்போக குடும்பம் மகனின் உழைப்பை நம்பியே வாழ்கிறது. கணவரை, தந்தையை எல்லா தடுப்பு முகாம்களிலும் தேடி, நிரந்தரமாக இருக்கும், தேடிவரும் ஆணைக்குழுக்களிடம் முறையிட்டும் அவர் பற்றி தகவல் கிடைக்காததால் கலைத்துப்போய் நம்பிக்கையிழந்திருந்த காலப்பகுதியில்தான் அந்தச் சம்பவம் நடந்தது.

“அன்றைக்கு இலெக்‌ஷனுக்காக நோட்டீஸ் குடுத்தவையாம். றோட் வழியா எறிஞ்சிட்டும் போனவையாம். அவன்ர தம்பி எடுத்துப் பார்த்திட்டு இங்க கொண்டு வந்து காட்டினவர், அண்ணா நிக்குது பாருங்கனு. அதில அவர்தான் இருக்கிறார். ஆனா அந்தப் படம் எங்க எடுத்தவை என்டு தெரியாது” கண்களில் சந்தோஷம் லேசாக எட்டிப்பார்க்கிறது.

கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவாளர்கள் தமிழ் பிரதேசங்களில் விநியோகித்திருந்த தேர்தல் துண்டுப் பிரசாரங்களில் தனது கணவர் செல்வநாயகம் இருப்பதை அடையாளம் கண்டிருக்கிறார் மனைவி லலிதா. செல்வநாயகம் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும் படம் அது.

“வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கொண்டு போய் இத காட்டினோம். இத அடிச்ச இடத்த தேடிப் போய் கேளுங்க என்டு அவ சொல்லிச்சினம். நான் எங்க போய் தேட, யார போய் கேட்க? எங்களால எதுவும் செய்ய முடியாது. திரிய முடியாது. காசு வேணும்” தொடர்ந்து வார்த்தை வரவில்லை. முந்திக்கொண்டு அழுகைதான் வந்தது. சிறிது நேரம் அமைதியாக இருந்தவர் தொடர்ந்தார்.

“படிக்கிற பிள்ளைக்கு உதவி செஞ்சா அதுவே போதும். மகள் பேராதனை பல்கலைக்கழகத்துல இருக்கா. முல்லைத்தீவு மாவட்டத்தில செகண்ட் ரேங்ல வந்தவ. அவக்கு செலவுக்கு காசு இல்ல. ஒரு நாளைக்கு 300 ரூபா வேணுமாம் மூனு நேரச் சாப்பாட்டுக்கு. வீட்டுக்கு வரும்போதெல்லாம், நான் படிக்கேல்லம்மா என்டு சொல்வா. என்ன செய்றதென்டு தெரியல்ல”

கணவனை இழந்து, மகளை படிப்பிக்க வருமானமின்றி, இளைய மகனின் உழைப்பில் காலத்தை கடக்கும் லலிதா போன்றவர்களின் வாழ்கை எதுவித மாற்றத்தையும் சந்திக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் (2015 ஜனவரி மாதம் 7ஆம் திகதி) பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான தேர்தல் துண்டுப் பிரசுரங்களை பாதை வழியே வான் ஒன்றில் சென்ற சிலர் வீசிக்கொண்டு சென்றனர். அதுபற்றி கொஞ்சமும் அக்கறைக் கொள்ளாமல், “நமக்கெதுக்கு அது” என்று, பிரசுரங்களைப் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களைக் கடந்து செல்கிறார் ஜெயவனிதா. வேகமாக நடந்துகொண்டிருந்த அவரை சத்தமிட்டு நிறுத்திய மகன் பிரசுரத்தில் தன்னுடைய அக்கா இருப்பதாகக் உரத்து கூறுகிறான். உடனே வாங்கிப் பார்த்த ஜெயவனிதாவின் முகத்தில் சந்தோஷம், கண்ணீர், பயம் எல்லாம் கலந்தே வெளிப்படுகிறது. கடந்த 6 வருடங்களாக தேடிக்கொண்டிருந்த மகள் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இருப்பதை கண்டவுடன் மகள் கிடைத்துவிட்டதாகவே எண்ணுகிறாள்.

“2015 தை மாதம் 7ஆம் திகதி வேன் ஒன்டுல வந்து கட்டு கட்டா நோட்டீஸ் போட்டுக்கொண்டு போயிருக்கினம். அந்த நேரம் கனக்க ஸ்கூல் பிள்ளையல் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தவையல். நான் விலத்திக்கொண்டுவர, என்ட மகன், “அம்மா அக்காச்சி நிக்கிறாள் படத்தில” என்டு சொன்னான், வாங்கிப் பார்த்தனான், படத்தில என்ட மகள், அவளேதான்.”

“என்ட புள்ளய 2009 பங்குனி மாதம் நாலாம் திகதி முள்ளிவாய்க்காலில் வைத்துதான் புடிச்சவங்க. யாரு புடிச்சது என்டுதான் தெரியல்ல. ஆனா அவங்க இராணுவ உடுப்புதான் உடுத்தியிருந்தவங்க. நான் புள்ளய விடவேயில்ல. இறுக்கி கட்டிப்புடிச்சிக்கொண்டுதான் இருந்தனான். அடிச்சி, உதைஞ்சி என்னை விழுத்திவிட்டுதான் புள்ளய புடிச்சி வேன்ல போட்டுக்கொண்டு போனவங்க. இராணுவ உடுப்புதான் உடுத்தியிருந்தவங்க” என்று மகள் காணாமல் அன்றைய தினம் நடந்ததை நினைவுகூர்கிறார்.

“இதுவரைக்கும் காணாமல்போனவள் என்டுதான் பதிவுசெய்திருக்கிறேனே தவிர ஆமிதான் கைதுசெய்தது, இயக்கம்தான் புடிச்சது என்டு பதிவுசெய்யல்ல. முன்ன நான் போய் முறையிட்டா, ஆமி புடிச்சதென்டா, என்ன ஆதாரம் இருக்கு? ஆமின்ட பெஜ் ஏதும் வச்சிருக்கீங்களா? இல்லையென்டா எந்த ஆமி என்டு ஆல காட்டுவீங்களா? உங்கட ஆக்கள் எங்க கொண்டுபோய் சுட்டாங்களோ தெரியல்ல என்டு சொல்லுவினம்” என்று கூறும் ஜெவனிதா,

“இந்தப் படத்த கண்ட பிறகுதான், இவாட கையிலதான் மகள் இருக்கிறா என்டு தெரிந்துகொண்டனான். ஜனாதிபதியோட இருக்கிறத கண்டதுக்கு பிறகுதான், இவையள்ட கையிலதான் பிள்ள இருக்கு என்டு ஆதாரம் கிடைச்சது” என்றும் கூறுகிறார்.

“சரி இயக்கம்தான் புடிச்சிருந்தாலும் இப்ப இருக்கிறது இவையின்ட கையிலதானே? ஆதாரம்தானே கேட்டனீங்கள்? இதோ படம் இருக்கு. என்ட மகள கண்டுபிடிச்சி குடுக்க ஏன் இதுவரை முடியல்ல?” வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார் ஜெயவனிதா.

“இரண்டு பிள்ளைகளில் ஒன்டு என்னோட இருந்தாலும் இந்த நிலை எனக்கு வந்திருக்காது. அப்ப நாங்கள் திருகோணமலையில் இருந்தனாங்கள். நான் யாழ்ப்பாணத்திலிருந்து கலியாணம் கட்டித்தான் திருகோணமலைக்கு போனனான். தகப்பன் ஒரே குடி. குடிச்சிட்டு வந்து பிள்ளைகளுக்கு அடிக்கும். அப்பிடி அடிச்ச கோவத்தில மூத்தவன் இயக்கத்துக்கு போயிற்றான். அங்க போய் 5 நாள் நிண்டான். வயசுகாணாது எண்டு திருப்பி அனுப்பீற்றாங்கள். வீட்டுக்கு வந்து கூலி வேலைகள்தான் செய்துகொண்டிருந்தவன். வேலைக்கு போகேக்க தான் மகன சுற்றி வளைச்சு சுட்டிட்டாங்கள்.”

“…..அது நடந்து கொஞ்ச நாளில இளைய மகன கருணா குழு கடத்த வந்திட்டாங்கள். இரவு – பகல் மறைச்சி வச்சிருந்தன். பொலிஸ்காரனே சொன்னான், இங்க உன்ர மகன வச்சிருந்தால் கடத்திப்போடுவாங்கள் என்டு. அதுக்குப் பிறகுதான் 2007ஆம் ஆண்டு குடும்பத்தோட வன்னிக்கு வந்தன்.”

போர் நெருங்க நெருங்க வறுமை பீடித்தது. ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கான போராட்டமே நீடித்தது.

ஆனாலும், இளையவன் படிக்க ஆசைப்பட்டான். எப்படியாவது படிச்சி குடும்பத்த பாக்க வேணும் எண்டு சொன்னான். கல்விக்கழகத்தில நிண்டு படிச்சவன். ஏ.எல் எடுத்திட்டு வீட்டுக்கு வந்து நிண்டான். அப்ப சரியான கஸ்ரம். என்ர பிள்ளைக்கு சாப்பாடு குடுக்கவே படாதபாடு படுவன். ஒருநாள் அவன் வீட்ட வீட்டு போயிற்றான். நானும் எல்லா இடமும் தேடி அலைஞ்சன். அதோட சண்டையும் நடந்துகொண்டிந்தது. முள்ளிவாய்க்காலுக்கு இடம்பெயர்ந்து போயிற்றம். காணுற இடம் எல்லாம் சனம் சொல்லும், என்ர மகன கண்டனாங்கள் எண்டு. அவன கடைசி வரைக்கும் கண்டிருக்கினம். ஆனா, நான் நேரில காணவேயில்ல.

ஆனா… அந்தப் புத்தகத்தில மகனின்ர படம் இருக்கு.”

உலகம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, மஹிந்த அரசாங்கம் வெளியிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்த அறிக்கையில், “எல்.ரீ.ரீ.ஈ. போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்படுகின்றது” என்ற தலைப்பின் மேலான புகைப்படத்தில் தன்னுடைய இளைய மகனும் இருப்பதாக ஜெயக்குமாரி கூறுகிறார். உடனடியாகவே அந்தப் புத்தகத்தையும் எடுத்து வந்து காட்டுகின்றார். அவர் காட்டும் படமும், வீட்டில் வைத்திருக்கும் படமும் முகச்சாயலளவில் ஒத்துப்போகின்றது.

“இப்ப நடக்கவே முடியாதளவுக்கு நோய்வாய்ப்பட்டிருக்கிறன். முன்னம்போல எந்த வேலையும் செய்ய முடியேல்ல. அதுக்குள்ள கூப்பிடுற நேரமெல்லாம் கொழும்புக்கும், பதவியாவுக்கும் வழக்குக்கு வேற போகவேணும். கொழும்பில பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ வழக்கு நடக்குது… இனியும் ஏன் பயங்கரவாதத் தடைச்சட்டம்?”

Created By
Selvaraja Rajasegar
Appreciate

Made with Adobe Slate

Make your words and images move.

Get Slate

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.