"இவர்களால் நீர் அசுத்தமாகிறது..."

அறிமுகம்

10 பிரிவுகளைக் கொண்ட மொனறாகலை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அலியாவத்தை மற்றும் மொனறாகெலே தோட்டங்களில் மொத்தமாக 12,000 ஹெக்டயார் காணி காணப்படுகிறது.

1875ஆம் ஆண்டு காலப்பகுதியில் அலியாவத்தை பகுதியில் ரபர் பயிரிடப்படுகிறது. 1908ஆம் ஆண்டில் மொனறாகெலே பகுதியில் மக்கள் குடியமர்த்தப்படுகின்றனர். அங்கு 1917 ஆண்டில் ரபர் பயிரிடப்படுவதுடன், அதனோடு கொக்கோவும் பயிரிடப்படுகிறது.

1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் இங்கு காணிச்சீர்த்திருத்தம் இடம்பெற்றிருக்கிறது. இதன் காரணமாக தோட்டச் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட நிறுவனங்கள் ரபரை நீக்கிவிட்டு கரும்புப் பயிர்ச்செய்கை செய்துள்ளனர். ரப்பரைப் போன்று கரும்பும் கைக்கூடாததால் குத்தகை நிறுவனங்கள் தோட்டங்களைக் கைவிட மக்கள் பெரிதும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வந்துள்ளனர்.

அடுத்த நேர சாப்பாட்டுக்கு வழியில்லாத சூழ்நிலைக்கு முகம்கொடுத்த அலியாவத்தையைச் சேர்ந்த 156 குடும்பங்களும் மொனறாகெலேயைச் சேர்ந்த 204 குடும்பங்களும் வாழ்க்கையைக் கொண்டு நடத்த வேறு தொழில்களைத் தேடிப்போக ஆரம்பித்தன. லயன்களில் வாழ்ந்துவந்த மக்கள் பின்னர் காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் குடியேறி பயிர்ச்செய்கையில், கால்நடை வளப்பில் ஈடுபடத் தொடங்கினர்.

அலியாவத்தை தோட்டத்திலிருந்து பார்க்கும்போது மொறாகலை நகர் தெரியும் காட்சி.

இன்று வரை தங்களது அடிப்படைத் தேவைகளை இதனைக் கொண்டே பூர்த்தி செய்துவருகின்றனர். வாழை, பாக்கு, மிளகு, மரவள்ளி, சோளம், நெல், கடலை, பயறு, தேங்காய், மரக்கறி போன்ற விளைச்சல்களை விற்பனை செய்துவருவதன் மூலம் குடும்பத்தை நடத்தக்கூடிய அளவுக்கு வருமானம் ஒன்று இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். தங்களது பிள்ளைகளின் கல்வித் தேவைகளையும் சமாளித்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு இந்த வருமானம் தங்களுக்கு உதவுகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

நாளாந்தம் தங்களது உணவுத் தேவையையும் விவசாயத்தின் மூலம் ஓரளவுக்கு நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் இருப்பதாகவும் மக்கள் கூறுகிறார்கள்.

இந்த இரு தோட்டங்களிலும் வாழும் மக்கள் சமுர்த்தி கொடுப்பனவு பெறும் வருமானம் குறைந்த மக்களாகும்.

அடிப்படை வசதிகள்

நீண்டகாலமாக பாதை, மின்சாரம், குடிநீர் பிரச்சினைகளுக்கு இந்த மக்கள் முகம்கொடுத்து வருகிறார்கள். மொனறகெலே தோட்டத்தில் 75 குடும்பங்களுக்கும், அலியாவத்தை தோட்டத்தில் 27 குடும்பங்களுக்கும் மலசலகூட வசதிகள் கூட இதுவரை இல்லாமல் மிகவும் மோசமான வகையில் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகிறார்கள்.

மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்கள் இரண்டும் மலைப்பகுதியில் அமைந்திருப்பதால் மக்கள் நடந்துசெல்ல முடியாதளவுக்கு பாதைகள் காணப்படுகின்றன. காட்டுப்பகுதிக்குள் சிறிய காலடிப் பாதையினூடாகவே அலியாவத்தை தோட்டத்துக்குச் செல்லவேண்டியிருக்கிறது. மாலை 5, 6 மணிக்குப் பிறகு இந்தப் பாதையில் பயணம் செய்வதென்பது ஆபத்தான காரியமாகும். இந்தப் பாதையைப் பயன்படுத்தி பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். தங்களது விளைச்சலை மொனறாகலை நகருக்கு கொண்டுசெல்வதிலும் சிக்கல்களுக்கு முகம்கொடுத்துவருகிறார்கள்.

அலியாவத்தைத் தோட்டத்துக்குச் செல்லும் பாதை...

“இந்தப் பாதையைப் பயன்படுத்தி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது 2 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கும் 56 வயதான முருகையா ஜெயராம், வழியிலேயே 4 குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாகவும் கூறுகிறார்.

“அன்று எவ்வாறு பாதைகள் இருந்தனவோ இன்றும் அதே நிலையில்தான் இருக்கிறது. அரசாங்கங்கள் மாறி மாறி வருகின்றபோதிலும் எமக்கு விடிவில்லை” என்றும் 2 பிள்ளைகளின் தந்தையான ஜெயராம் கூறுகிறார்.

“தான் வீடு கட்டுவதற்காக கீழே உள்ள பாதையிலிருந்து சீமேந்துப் பை ஒன்றைக் கொண்டுவருவதற்காக 500 கூலியாக கொடுக்க வேண்டியிருந்தது என்று கூறும் கோபால்ராஜ், ரூபா 800 சீமேந்தை வாங்கிவிட்டு அதை வாகனம் மூலம் கொண்டுவர ஒரு தொகையும், அதன்பிறகு வீடு வரை கொண்டுவர தொகையும் என ஒரு சீமேந்துப் பைக்கு கிட்டத்தட்ட ரூபா 2,000 செலவழித்திருக்கிறேன் என்றும் அவர் கூறுகிறார்.

தனது விளைச்சலான வாழை, பாக்கு, தேங்காய் போன்றவற்றை தோலில் சுமந்துகொண்டே மொனறாகலை நகரம் வரை செல்லவேண்டியிருப்பதாகவும், ஏனைய பிரஜைகளைப் போல் தங்களது பிள்ளைகளாவது எதிர்காலத்தில் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை அருகிவருவதாகவும் கவலை தெரிவிக்கிறார் கோபால்ராஜ்.

அத்தோடு, இவ்விரு தோட்டங்களில் பெரும்பாலான வீடுகளில் இன்னும் விளக்கு வெளிச்சத்தின் உதவியுடனே வாழந்துவருகிறார்கள். ஒரு சிலர் மாத கொடுப்பனவு அடிப்படையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் சிறிய தகடொன்றைப் பொறுத்தி அதன் மூலம் மின்சாரத்தைப் பெற்று வருகிறார்கள்.

காணி உரிமை இல்லாததால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

மொனறாகெலே மற்றும் அலியாவத்தையைச் சேர்ந்த மக்களுக்கு காணியுரிமை இல்லாத காரணத்தால் நீண்டகால நோக்குடைய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதில் அக்கறை கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், அவர்கள் தொடர்ந்து பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதிலும்கூட பின்வாங்குகிறார்கள். வீட்டைக் கூட விஸ்தரித்து நிர்மாணிப்பதற்கு காணியுரிமை விடயம் தடங்களாக இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.

ஏதொவொரு சந்தர்ப்பத்தில் தங்களது காணிகளை அரசாங்கம் பறித்து தங்களை நாடற்றவர்களாக்கிவிடுமோ என்ற பயம் அவர்கள் மத்தியில் இருந்துகொண்டே இருக்கிறது.

“எதுவுமே பயிரிட பயமாக இருக்கிறது. நிலத்தை கொஞ்சம் துப்பரவு செய்துவிட்டால் உடனடியாகவே எல்.ஆர்.சி. (காணி சீர்த்திருத்த ஆணைக்குழு) ஆட்கள் வந்துவிடுவார்கள்” என்று கூறுகிறார் முருகையா ஜெயராம்.

முருகையா ஜெயராம்

“அம்மா, அப்பா, மனைவியின் பெற்றோர்கள் என 100 வருடங்களுக்கு மேல் இங்குதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பணம் செலுத்துக்கூடிய அளவுக்கு நாங்கள் வசதி படைத்தவர்கள் இல்லை. எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, பரம்பரை பரம்பரையாக வாழ்ந்ததைத்தான் கேட்கிறோம். எங்களுடைய காலம் முடிந்துவிட்டது. பிள்ளைகள் இங்குதானே வாழவேண்டும். நாங்களும் இலங்கைப் பிரஜைகள்தானே” – தங்களுக்கும் ஏனைய பிரஜைகளைப் போன்று சம உரிமையுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும் என முருகையா அரசாங்கத்திடம் கேட்கிறார்.

தொழில் முயற்சிகளை மேலும் விருத்தி செய்துகொள்வதற்கு, முதலிடுவதற்கு, வங்கிக் கடன் பெறுவதிலும், நகர பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதிலும் மிகுந்த சிக்கல்களை இந்த மக்கள் எதிர்கொள்வதாக மொனறாகலை மக்கள் அபிவிருத்தி அமைப்பின் இணைப்பாளர் பரமேஸ்வரன் கோகுலரமணன் கூறுகிறார்.

இந்த இரு தோட்டங்களிலும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களுக்கு அரச திணைக்களங்களின் மூலம் மானியமாக வழங்கப்படும் உரம், ஆலோசனைகள், பயிற்சி, மானியங்கள் எதுவுமே கிடைக்கப்பெறுவதில்லை என்று கூறும் கோகுலரமணன், காணி உரித்துரிமை இல்லாததால் வீதி அபிவிருத்தி, மின்சாரம், தண்ணீர் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் உள்ளூராட்சி மன்றங்கள் பின்னடிக்கின்றன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

பெரும்பான்மையின மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள காணிகள்

காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை காணி இல்லாதவர்களுக்கு வழங்கும் நடைமுறையொன்று காணி சீர்த்திருத்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் 25 மாவட்டங்களிலும் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்டிருக்கின்றன.

மொனறாகலை மாவட்டத்திலும் ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் மக்கள் குடியேற்றங்களுக்காக வழங்கப்பட்டிருக்கின்றன. மொனறாகலை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முப்பனை கிராம சேவையாளர் பிரிவில் உள்ள தொடங்கொட தோட்டத்தில் 50 ஏக்கர்கள் அரச அதிகாரிகளுக்கு, வியாபாரிகளுக்கு மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களுக்கு தலா 20 பேர்ச்சர்ஸ் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது. முன்னாள் சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் சுமேதா ஜி. ஜயசேனவின் தலையீட்டின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் வாழும் பழமையான லயன்...

மதுரகெடிய கிராம சேவையாளர் பிரிவில் உள்ள முப்பனவெலி தோட்டத்தில் ‘ஜயசேன கம’ என்ற கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டு தலா 25 பேர்ச்சர்ஸ் என்ற அடிப்படையில் அரச அதிகாரிகளுக்கு, அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு 16 ஏக்கர்களில் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளதோடு, விளையாட்டு மைதானம், மயானம் நிறுவுவதற்கு இன்னும் 4 ஏக்கர்கள் மேலதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது.

முப்பனவெலி தோட்டத்துக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணி இராணுவக் குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களை வெளியேற்ற காரணம் கூறும் வனப்பாதுகாப்புத் திணைக்களம்

இயற்கை நீர் உற்பத்தியாகும் மொனறாகெலே மற்றும் அலியாவத்தை பகுதியில் மக்கள் வாழ்வதாலும் அங்கு மலசலகூட பாவனை குறைந்த மட்டத்தில் காணப்படுவதாலும் நீர் வளம் மாசுபடுகிறது என மொனறாகலை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பிரதேச செயலாளர்களாலும் மாவட்ட செயலாளராலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதனால், மக்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற யோசனைகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. வனப்பகுதியை அண்மித்த நீர்வளம் உள்ள பகுதியில் குடியிருப்பது, வீடு கட்டுதல் மற்றும் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதனால் நீர் வளத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய ஆபத்து நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, வெளியேறுமாறு கோரி கிராம சேவையாளர்களினாலும் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக மக்கள் கூறுகிறார்கள்.

“தண்ணீருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தண்ணீர் இருக்கும் பகுதியில் இருந்து 3,4 கிலோமீற்றருக்குக் கீழ்தான் நாங்கள் இருக்கிறோம் என்று கூறுகிறார் சத்தியகாந்தி.

தாங்களும் இந்தத் தண்ணீரைத்தான் குடிப்பதாகவும், அப்படியிருக்கும்போது தண்ணீரை அசுத்தப்படுத்துவோமா? என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறகலே மற்றும் அலியாவத்தை பகுதி நிலம் மரகல காடுகளோடு தொடர்புபட்ட பகுதியாகும். மரகல காட்டுப் பகுதி வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் வருவதோடு, இந்தப் பகுதிகளில் அனுமதியின்றி காணிகளை கையகப்படுத்தல், காடுகளுக்குத் தீவைத்தல், விலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் காடுகளினுள் சேனை பயிர்ச்செய்கை செய்தல் போன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமாகும். இவ்வாறான செயற்பாடுகளில் மொனறாகெலே மற்றும் அலியாவத்தையைச் சேர்ந்த மக்கள் ஈடுபடுகின்றனர் என வனப்பாதுகாப்புத் திணைக்களம் தெரிவிக்கிறது. இந்தக் காடுகளின் இருப்புக்காகவும், நீர் வளத்தைப் பாதுகாப்பதற்காகவும் இங்கிருக்கும் மக்களை வெளியேற்ற வேண்டும் என்று வனப் பாதுகாப்புத் திணைக்களமும் கூறிவருகிறது.

“நீரூற்று 5 கிலோமீற்றருக்கு மேல்தான் இருக்கிறது. அதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களை இங்கிருந்து கீழே இறக்கிவிட்டு இந்த இடங்களையெல்லாம் கைப்பற்றும் திட்டமே இதன் பின்னணியில் இருக்கிறது” என்று கூறுகிறார் 3 பிள்ளைகளின் தந்தையான கோபால்ராஜ்.

பரம்பரை பரையாக தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம்

மொனறாகெலே மற்றும் அலியாவத்தையைச் சேர்ந்த பெரும்பாலான தோட்ட மக்களிடம் காணி சீர்த்திருத்த சட்டத்திற்கு அமைவாக 34 வருடங்களுக்கும் மேலாக (1982 ஆண்டுக்கு முன்பிருந்து) இங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற குடியுரிமை ஆவணம், அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், காணியைப் பயன்படுத்துகின்றமைக்காக காணி சீர்த்திருத்த ஆணைகுழுவுக்கு பணம் செலுத்தப்பட்டு பெறப்பட்ட கட்டணச்சீட்டு, ஜனசவிய பெற்றுக்கொண்டதற்கான ஆதாரம் போன்றன இங்குள்ள மக்களிடம் காணப்படுகின்றன.

அரசாங்கம் தலையிடவேண்டும்

நீண்டகாலமாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் வாழ்ந்துவருகின்ற ஒருவர் அதன் உரிமத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறையொன்று உள்ளது என்று கூறும் மொனறாகலை மக்கள் அபிவிருத்தி அமைப்பின் இணைப்பாளர் கோகுலரமணன், அந்த நடைமுறையின் இறுதியில் காணிக்கான பெறுமதியை குறித்த நபர் ஆணைக்குழுவுக்கு செலுத்தவேண்டி ஏற்படும் என்றும் கூறுகிறார்.

காணியைப் பயன்படுத்துவதற்காக கட்டணமொன்றை காணி சீர்த்திருத்த ஆணைக்குழு மக்களிடமிருந்து அறவிடுகிறது. ஆனால், அது தொடர்பாக எதுவித விளக்கமும் மக்களிடம் இல்லை என்று கோகுலரமணன் கூறுகிறார். தங்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்காகவே இந்தக் கட்டணத்தை காணி சீர்த்திருத்த ஆணைக்குழு வசூலிப்பதாக மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

“ரூபா 41,000 செலுத்தச் சொல்லி அரசாங்கம் (எல்.ஆர்.சி.) சொன்னாங்க, பத்தாயிரம் ரூபா மட்டும் செலுத்தியிருக்கிறோம். ஆனால், இன்னும் அளவிடுவதற்காக யாரும் வரவில்லை. எல்.ஆர்.சிக்குச் சொந்தமான காணிகள் நிறைய பேருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. 100 வருடத்துக்கு மேல் இங்கு வாழும் எமக்கு ஏன் தரமுடியாது” என்று கூறுகிறார் 55 வயதான செல்லையா.

செல்லையா

மக்களை ஏமாற்றாமல் காணி சீர்திருத்த பிரதான சட்டத்திற்கமைய காணி இல்லாத மக்களுக்கு கொடுப்பதற்காக அரசாங்கம் ஆணைக்குழுவிடம் இருந்து காணியினைப் பெற்று அதனை மக்களுக்கு வழங்கமுடியும் என்று தெரிவிக்கும் கோகுலரமணன், நாடு பூராகவும் ஏன் மொனறாகலையில் உள்ள தோட்டங்களைச் சேர்ந்த காணிகளும் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

எனவே, அரசாங்கம் மொனறாகெலே, அலியாவத்தை ஆகிய இரண்டு கைவிடப்பட்ட தோட்டத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காணிசீர்திருத்த ஆணைக்குழுவோடு கலந்துரையாடி இக்காணியினை இத்தோட்டத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகும் என்றும் அவர் கூறுகிறார்.

நல்லாட்சியின் வாக்குறுதி

2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசிய வெளியிட்ட கட்சி “60 மாதத்தினுள் நாட்டை கட்டியெழுப்பும் ஐந்து அம்சத் திட்டம்” என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில், மலையத் தோட்டத் தொழிலாளர்கள் குறித்து முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. அதில், “மலையகத்தில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் சமூகத்துக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். குடும்பமொன்றுக்கு காணித் துண்டொன்றுடன் வீடொன்றும் வழங்கப்பட்டு அவர்கள் வாழும் ‘லயன் அறை’ வாழ்கையை இல்லாமல் செய்வோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் ஆகவேண்டும் என்ற தோட்டத் தொழிலாளர்களின் கனவை தொடர்ந்து காண்பதற்கு இடமளித்துவிட்டு 7 பேர்ச்சர்ஸ் காணித்துண்டினுள் அமைக்கப்பட்ட வீட்டை மட்டும் கொடுத்துவரும் இந்த அரசாங்கம், மொனறாகலை – அலியாவத்தை, மொனறாகெலே போன்ற தோட்ட மக்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவருகிறது.

Created By
Selvaraja Rajasegar
Appreciate

Made with Adobe Slate

Make your words and images move.

Get Slate

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.