"வலிச்சா வௌக்கெண்ணதான் மருந்து..."

“வௌக்கெண்ணைய வெரல்ல பூசிட்டு அடுப்புல காட்டுவேன். அதுதான் மருந்து. ரெண்டு நாளைக்கு கொழுந்து எடுக்கலாம். திரும்ப வலிக்கத் தொடங்கும். அப்புறமும் வௌக்கெண்ணதான் மருந்து” என்று கூறுகிறார் தோட்டத் தொழிலாளியான 57 வயது பெருமாள் தனலெட்சுமி. இவருக்கு ஐந்து பிள்ளைகள். 3 பேர் படிக்கிறார்கள், இருவர் கொழும்பில் வேலை செய்கிறார்கள்.

16 வயதில் கொழுந்து பறிக்கச் சென்றிருக்கிறார் தனலெட்சுமி. அவரது கை விரல்கள் வருடக்கணக்காக மழை பெய்யாமல் பிளந்திருக்கும் நிலத்தைப் போல இருக்கிறது. பிளந்திருக்கும் வழியினூடாக வடிந்தோடியிருக்கும் தேயிலைச் சாய அடையாளங்கள் இரத்தம் வெளியேறிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது.

“இந்த காயத்தோட கொழுந்தெடுத்தா விரல் வலிக்கும். கிளவுஸ் (கையுறை) போட்டா கொழுந்து எடுக்க முடியாது. என்னதான் செய்ய, பிள்ளைகள படிக்கவைக்கனுமே, வலிச்சாலும் கொழுந்து எடுக்கத்தானே வேணும்” என்கிறார் 57 வயதான நிர்மலா. ஒரு சில தோட்டங்களில் தொழிலாளர்கள் கையுறை பயன்படுத்த நிர்வாகம் தடைவிதித்திருக்கிறது. கையுறை அணிந்து பறிப்பதால் கொழுந்து சேதமடைவதாக நிர்வாகம் கூறுகிறது. காயத்தின் வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சில தொழிலாளர்கள் களவாக கையுறையை அணிகிறார்கள். இன்னும் ஒரு சிலர் விரல்களுக்கு மட்டும் உறைகளை அவர்களே தைத்து அணிகிறார்கள்.

தோட்டத் தொழிலாளி ஒருவர் சராசரியாக 30 வருடங்கள் வேலை செய்பவராக இருந்தால் அவரது விரல்களில் ஏற்படும் காயங்கள் நிரந்தரக் காயங்களாகின்றன. அவர்கள் தங்களுடைய அன்றாட வேலைகளைக் கூட செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.

“இந்த காயத்தோட உடுப்பு கழுவ முடியாது. அதுகூட பரவாயில்ல, சாப்பாட பெனஞ்சி சாப்பிடக்கூட ஏலாது. கையெல்லாம் எறியும்” என்று கூறுகிறார் பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகளின் தாயான எம். ஞானசோதி.

ஒரு கிலோகிராம் தேயிலைத்தூள் உற்பத்திசெய்வதற்கு 5,000 கொழுந்துகள் தேவைப்படுவதாகக் கூறுகிறார் பதுளையைச் சேர்ந்த ஹிந்தகல தோட்டத்தின் தொழிற்சாலைக்குப் பொறுப்பாளராக இருக்கும் முத்து ஆரச்சி என்பவர். ஒரு வாரத்துக்கு இலங்கையிலிருந்து சராசரியாக 7 மில்லியன் கிலோகிராம் தேயிலைத் தூள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று கூறும் அவர் இதற்காகப் பாடுபடும் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி பேசுவதற்கு இங்கு யாருமில்லை என்றும் கூறுகிறார்.

தங்களுடைய வாழ்நாளில் முக்கால்வாசிக் காலப்பகுதி பூராகவும் கொழுந்துகள் பறிப்பதால் விரல்களில் ஏற்படுகின்ற காயங்களுக்கு நிர்வாகத்தின் மூலம் எந்தவித மருத்துவ உதவிகளும் வழங்கப்படுவதில்லை. அதற்கான இழப்பீடுகள் கூட கிடைப்பதில்லை.

இந்த நிலையில், இலங்கையில் தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவருகிறது. இதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் இலங்கை தேயிலைச் சபையினாலும், அமைச்சினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச தேயிலை சம்மேளனமும் இடம்பெற்றுவருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு இலங்கையில் 150 வருட தேயிலை உற்பத்திக்காக பரம்பரை பரம்பரையாக உழைத்துவரும் ஒரு மலையகத் தோட்டத் தொழிலாளியேனும் இந்த நிகழ்வுகளுக்கு அழைக்கப்படவில்லை.

இருந்தபோதிலும், நிரந்தரக் காயங்களுடன் தங்களுடைய பிள்ளைகளைப் படிக்கவைப்பதற்காக, சாப்பாட்டுக்காக வலியையும் பொறுத்துக்கொண்டு உடல்வலிமை ஒத்துழைக்கும் காலம் வரை தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அண்மையில் தேயிலைத் தோட்டமொன்றுக்குச் சென்று தொழிலாளர்களின் காயக் கைகளை எனது கமராவில் பதிவுசெய்துகொண்டேன். அந்தக் கைகளைக் கீழே பார்க்கலாம்.

57 வயதான ஆர். நிர்மலா 26 வயதில் வேலைக்குச் சென்றிருக்கிறார். 3 பிள்ளைகளின் தாயான இவர், 1995ஆம் ஆண்டு கணவரையும் இழந்திருக்கிறார்.
32 வருடங்களாக விஜயலெட்சுமி கொழுந்து பறித்துவருகிறார். 3 பிள்ளைகளின் தாயான இவருக்கு இப்போது 52 வயதாகிறது.
ஐந்து பிள்ளைகளின் தாயான பெருமாள் தனலெட்சுமிக்கு இப்போது 49 வயதாகிறது. 16 வயதில் வேலைக்குச் சேர்ந்திருக்கும் இவருக்கு 5 பிள்ளைகள். மூவர் பாடசாலை செல்வதோடு இருவர் கொழும்பில் வேலை செய்வதாகவும் கூறுகிறார். வாய் பேசமுடியாத கணவரால் தொடர்ந்து வேலைக்கும் போகமுடியாது எனக்கூறும் தனலெட்சுமி, வறுமை காரணமாக தன்னுடைய ஒரு மகனை சகோதரர் ஒருவரே வளர்த்தெடுத்தார் என்றும் கூறுகிறார்.
தற்போது 44 வயதாகும் ஏ. விஜயா 28 வருடங்களாக வேலை செய்துகொண்டிருக்கிறார். தனக்கு 5 பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றும் ஒரு மகள் பல்கலைக்கழகமொன்றில் படித்தவருவதாகவும் கூறுகிறார்.
மகாதேவிக்கு தற்போது 34 வயதாகிறது. 6 வருடங்களாக கொழுந்து பறிக்கும் தொழிலை செய்து வருகிறார்.
3 வருடகாலமாக வேலை செய்துவரும் ராஜயோகத்துக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள், இருவரும் பாடசாலை செல்கிறார்கள். இவர் தனது வலது கையின் இரண்டு விரல்களில் உறை அணிந்திருக்கிறார். “கொழுந்து எடுத்து எடுத்து இந்த ரெண்டு வெரல்லயும் காய்ம்பட்டிருக்கு. அதுலயே கொழுந்து திரும்ப எடுக்கிறப்ப வலிக்குது. அதனாலதான் இத தச்சு போட்டிருக்கேன்” என்கிறார் ராஜயோகம்.
15 வயதாக இருக்கும்போதே வேலைக்குச் சென்றதாகக் கூறும் திரெளபதிக்கு இப்போது 44 வயதாகிறது. அவரின் 3 பிள்ளைகளும் பாடசாலை செல்கிறார்கள்.
மூன்று பிள்ளைகளின் தாயான எம். ஞானசோதி 17 வயதில் கொழுந்து பறிக்கும் தொழிலுக்குச் சென்றிருக்கிறார். இப்போது 45 வயதாகிறது அவருக்கு. மூத்த மகள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்வி பயின்று வருவதாகக் கூறும் ஞானசோதி, மூத்த மகள் 6 வயதாக இருக்கும்போதே கணவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாகவும் கூறுகிறார். அன்றிலிருந்து கொழுந்து பறித்துதான் பிள்ளைகளின் படிப்புச் செலவையும் வேறு தேவைகளையும் பூர்த்திசெய்து கொள்வதாகக் கூறுகிறார் ஞானசோதி.
35 வயதாகும் சூடாமணி தனது 17ஆவது வயதில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அவரின் 3 பிள்ளைகளும் பாடசாலை செல்கிறார்கள்.
கிட்டத்தட்ட 20 வருடங்களாக கொழுந்து பறிக்கும் தொழிலைச் செய்துவரும் ரத்னாயக்க முதியன்சலாகே சீலவதிக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். “கையில் காயம், கால் வலி என்று பார்த்திருந்தால் எனது மகன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்க மாட்டான். எனக்குத் தெரிந்த தொழில் இதுதான். இதையும் செய்ய ஏலாது என்று வீட்டில் இருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.
Created By
Selvaraja Rajasegar
Appreciate

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.