Loading

சாக்காட்டு வெளி ஒரு வெள்ளைப்பூதம் பிள்ளைக்கறி தின்ற கதை.

ஏனோ தெரியவில்லை. எனக்கு ஆழ்ந்த உறக்கம் வருகின்றது. அம்மா வரும்வரை நான் எப்படியும் உறங்காமல் இருக்க வேண்டும். ஆனால், அதற்குள் அம்மா வந்துவிடமாட்டார் போலிருக்கிறதே. இப்போது நான்தான் தம்பியை பார்த்துக்கொள்ள வேண்டும். நான் உறங்கிவிட்டால் பிறகு அவ்வளவுதான். அவன் இந்த உலகைக் கடந்து பிரபஞ்சத்திற்கே போய்விடுவான், அவ்வளவு தூரம் சரியான சுட்டி, செய்கின்ற அத்தனையும் வால்த்தனம். யார் பேச்சும் கேட்கமாட்டான். எதைக் கண்டும் பயப்படமாட்டான். அவனை சமத்தாகக் கட்டியவிழ்ப்பதற்கு ஒன்றில் நான் வேண்டும் அல்லது அம்மா வேண்டும். அதைத் தாண்டி அவனைப் படைத்த கடவுளே வந்தால்க்கூட அவன் சேட்டைகளைக் கட்டுப்படுத்த முடியாது. அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் கூட ''உன்ர மகள் சரியான கெட்டிக்காரி, இந்த வயசிலேயே தன்ர வேலையளையும் தானே செய்யிறது மட்டுமில்லாம தம்பிக்காரனயும் நல்ல வடிவா பாத்துக்கொள்ளுறாள்” என அவ்வப்போது அம்மாவிடம் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமலில்லை.

ஒரு தமிழ்ச்சிறுமியின் அடையாள அட்டையின் எச்சம். இடம்-முள்ளிவாய்க்கால். ஒளிப்படம் - க.குமணன்.

என் பெயர் கிருஜா, அப்பா கிருஸ்ணமூர்த்தி. பிறந்தது ஆயிரத்தி தொளாயிரத்து தொண்ணூற்றேழில. இப்ப வயது பன்னிரண்டு. வெறும் பன்னிரண்டு வயசு பிள்ளையால என்ன செய்யேலும் என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது. ஆனால், சொன்னால் நம்பமாட்டீர்கள், எனக்கு தெரியும். கிட்டத்தட்ட வாழக்கைக்குத் தேவையான அடிப்படை விடயங்கள் எல்லாமே எனக்குத் தெரியும். அதனால் தான் அம்மா கூட தம்பியை நம்பி என்னோடு விட்டுவிட்டுப் போயிருக்கிறார். உதாரணத்திற்கு சொல்வதானால், பாதுகாப்பாகக் கிணற்றில் இருந்து நீர் எடுப்பது எப்படி, அம்மா வீட்டில் இல்லாத நேரங்களில் சமையல் செய்வது எப்படி, ஐந்து வயதேயான தம்பியைக் குளிக்க வைப்பது எப்படி, அவனுக்கு உடுப்பு மாற்றி விடுவது எப்படி, வீட்டை கூட்டி சுத்தப்படுத்தி வைப்பது எப்படி, குழப்படி செய்கின்ற தம்பியை அழாமல் பார்த்துக்கொள்வது எப்படி, இப்படியாக ஓரளவிற்கு எனக்கு எல்லா விடயங்களும் தெரியும்.

2006 ஆம் ஆண்டு அப்பா சண்டையில இறந்தபோது தம்பிக்கு இரண்டு வயது தான் ஆகியிருந்தது. எனக்கு அப்போது ஒன்பது வயது. அப்போதும் சரி இப்போதும் சரி, அம்மாவிற்கிருக்கின்ற ஒரே ஆறுதல் நாம் தான். அம்மா அதை என்னிடம் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் என்னால் அதனை நன்றாக உணரமுடியும். அதனால் தான் நான் அன்றிலிருந்து அம்மாவிடம் எதுவும் கேட்டு அடம்பிடித்ததில்லை. தம்பி பாவம், சின்னவன். அவனிற்கு அது தெரியாதல்லவா? அதனால் அவ்வப்போது எதையாவது கேட்டு அழுவான். முடிந்தால் அம்மாவும் வாங்கிக் கொடுப்பா. இப்போதும் கூட அவன் சப்பாத்து வேண்டும். பென்சில் வேண்டுமென எதேதோவிற்கெல்லாம் மூக்கை சிந்தாமலில்லை. ஆனாலும், அதெல்லாம் ஆகிற காரியமா இப்போது. அதனால் அவனை போக்குக்காட்ட அம்மா வைத்திருக்கும் ஒரே ஆயுதம், ஒரு பொம்மை. கரடி பொம்மை.

குழந்தைகள் விளையாடும் இரப்பர் பொம்மை. இடம் - முள்ளிவாய்க்கால். ஒளிப்படம் - க.குமணன்.

கரடி பொம்மை என்று சொன்னதும் ஏதோ பெரிய ஆளுயர பொம்மை என்று நினைத்துவிடாதீர்கள். வெறும் ஒரு சுக்குட்டிப்பொம்மை. உள்ளங்கையளவே ஆன ஒரு ரப்பர் பொம்மை. எப்போதும் 'உம்’ என்றே பாத்துக்கொண்டிருக்கும் ஒரு முரட்டுக் கரடிப் பொம்மை. அதில் அப்படி ஒன்றும் பெரிதாக விசேசமில்லை என்றாலும் ஆலை இல்லாத ஊரிற்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்று வாசுகி ரீச்சர் சொல்லித்தந்தது போல, விளையாட ஒண்டுமேயில்லாம இருக்கிற அவனுக்கு அது ஒரு அட்சய பாத்திரம். உண்மையைச் சொல்லப்போனா நாங்கள் சண்டையில ஒவ்வொரு இடமா இடம்பெயர்ந்து வரும்போதும் ஏதோ ஒருவிதத்தில அந்தக் கரடிப் பொம்மையும் எங்களோடேயே கூட வருது. அதின்ர அதிஸ்டத்தை நினைச்சு நான் சரியா திருப்திப்பட்டிருக்கிறன். இல்லையெண்டா பொம்மை வேணுமெண்டு அழுகிற தம்பிய பிறகு எப்பிடி கட்டுப்படுத்துறது..? சனமெல்லாம் விழுந்தடிச்சு உசிரை கையில பிடிச்சுக்கொண்டு ஓடேக்கையும் நாங்களும் எல்லாத்தையும் சிதறிப்போட்டு விழுந்துருண்டு வரேக்கையும் அது எப்பிடியோ எங்களோடயே வருகுது. ஒண்டில் அது தம்பியின்ர கையில இருக்கும் (அவன்ர கையில இருந்தா, அத யாரும் பறிக்கேலா), அல்லாட்டி என்ர 'புத்தகபாக்'கில இருக்கும்.

யுனிசெப் நிறுவனம் பள்ளிக்கூட சிறுவர்களிற்கு கொடுத்த புத்தகப்பை. இடம் - முள்ளிவாய்க்கால். ஒளிப்படம் - க.குமணன்.

அந்த புத்தகப் பைக்கு பெரிய ஒரு கதை இருக்கு. நான் முதன் முதல் வகுப்பில முதலாம்பிள்ளையா வந்த அதே நாள் தான் எங்களுக்கு யுனிசெப்பால அந்த புத்தகப்பை தந்தவை. ஒரு நீல நிற புத்தகப்பை. அதில 'கல்விக்கே முதலிடம்’ எண்டு எழுதியிருக்கும். நான் வீட்ட வந்து முதலாம்பிள்ளையா வந்தத சொன்னதில இருந்து அப்பாக்கு ஒரே புளுகம். நான் கொண்டு வந்த அந்த புத்தகப்பைக்கு மேல எழுதியிருந்த கல்விக்கே முதலுரிமை எண்டுறத சுட்டிக்காட்டி அப்பா அடிக்கடி சொல்லுவார் “என்ன தான் கஸ்ரம் துன்பம் எண்டாலும் படிப்பை மட்டும் எப்பவும் கைவிட்டிடக்கூடாது” எண்டு. அவர் செத்ததுக்கு பிறகு நான் அப்பாவின்ர நினைவு வரும்போதெல்லாம் அதைத் தான் எடுத்தெடுத்து பார்ப்பன். அப்பாவையே பாக்கிற மாதிரி இருக்கும். இப்ப, அதுக்கு வெறும் பெயர் தான் புத்தகப்பை. ஆனால், அதுக்குள்ளே புத்தகங்கள் இல்லை. திடீரென்று ஒரு நாள் வீட்டு வாசலில ‘ஷெல்’ வந்து விழ, அடுத்த நிமிசமே அரக்க பரக்க பாய்ஞ்சு வெளியில வரேக்க அம்மா தான் அத எடுத்து வந்தா. தம்பியின்ர காச்சட்டை ஒண்டு, சாப்பாட்டுக் கோப்பை ரெண்டு ஒரு ஓடிக்கொலோன், இன்னும் ரெண்டொரு அத்தியாவசிய பொருட்களை எடுத்து வைச்சு தம்பியின்ர முதுகில அம்மா கொளுவிவிட்ட என்ர புத்தகப்பை. அப்பான்ர கனவுகள் நிரம்பியிருக்கிற பை. அதுக்குள்ள தான் அதிஸ்டவசமாக அந்த கரடிப் பொம்மையும் வந்து உட்கார்ந்திருந்தது. இப்போது அது தான் தம்பியின் தோழன். உறங்குவது, சாப்பிடுவது, விளையாடுவது, சண்டைபிடிப்பது எல்லாவற்றிலும் அவனோடு அதுவும் கூடவிருந்தது.

இதோ, இப்போது இங்கே நான் வரும்போது கூட அவனும் என்னோடு கூட வரப்போவதாக அடம்பிடித்தான். எவ்வளவு மறுத்தும் கேட்கவேயில்லை. மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்க பாயாது என்று அம்மா அடிக்கடி சொல்வது போல எவ்வளவு தான் அவனை சமாதானப்படுத்திவிட்டு நான் மட்டும் வர முயற்சித்தாலும் கடைசியில் அவன் பிடிவாதம் தான் வென்றது. கடைசியில் கூடவே வந்தான், அந்த கரடிப்பொம்மையும் தான். ஒற்றைக்கையில் கஞ்சிக்கிண்ணம், மற்றக்கையில் கரடி பொம்மை. இன்று வரிசையில் முன்பக்கமாக நிற்க முடிந்ததில் அவனுக்கு அளவுகடந்த சந்தோசம். கஞ்சி கிடைத்த புளுகத்தில் ஏதேதோ வாய்க்குவரும் சொற்களையெல்லாம் இட்டு நிரவி ஒரு பாட்டுப்போல கூப்பாடு போட்டு பாடிக்கொண்டே என்னோடு வந்துகொண்டிருந்தான். இதோ, இந்த மண்திட்டுக்கருகில் வந்தபோது ஒரு எறிகணை வந்து கொஞ்சம் தள்ளி விழுந்தது. அவ்வளவு அருகில் இல்லையென்றாலும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஒரு ராஜா போல திமிருடன் பாடிக்கொண்டு கம்பீரமாக நடந்துவந்த அவன் திடீரென தலை கவிழ்ந்து சுருண்டு விழுந்தான். ஒரு அழுகையில்லை. சத்தமில்லை. என்னிடம் எதுவும் சொல்லக்கூட இல்லை. அவன் கையிலிருந்த கஞ்சிக்கிண்ணம் எகிறி கீழே விழுந்தது. கரடிப்பொம்மை அவன் கையிலிருந்து நழுவி கீழே விழுந்து உருண்டது. ஒருவேளை மயங்கிவிட்டானா, தெரியவில்லை. காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருந்ததனால் சின்ன உடம்பு பாவம் பலவீனமாகிவிட்டிருக்குமா என்ற யோசனையில் நான் கீழே அமர்ந்து அவனைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அவன் முகத்தை என் கைவிரல்களால் மெதுவாக தட்டிக்கொண்டிருந்தேன். “..ம்ஹம்..” அவன் அசைவதாகவே இல்லை. அவனது முதுகிற்கிற்கு கீழேயிருந்த என் கையில் ஏதோ பிசுபிசுத்தது. மெல்ல இழுத்து வெளியே எடுத்துப் பார்த்தேன். இரத்தம், இன்னும் சூடு தணியாத இரத்தம். எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலாயிற்று. பயத்தில் உறைந்து போய் உட்காரந்துவிட்டேன்.

நீரருந்தும் பாத்திரம் ஒன்று. அந்நாட்களில் கஞ்சி வாங்குவதற்கு வரிசையில் நின்ற மக்கள் இது போன்ற பாத்திரத்தையே பயன்படுத்தினர். இடம் - முள்ளிவாய்க்கால். ஒளிப்படம் - க.குமணன்.

திடீரென்று எப்படி இப்படி ஆயிற்று அவனுக்கு..,? இதை எப்படி அம்மாவிடம் தெரிவிப்பது..? ஒரு வழியும் தெரியவில்லை. சுடுமணலில் அமர்ந்து அழ ஆரம்பித்தேன். அரை நிமிடம் கூட ஆகியிருக்காது. திடீரென என் நெஞ்சில் ஏதோ புகுந்து உள்ளேயே சிக்கிக்கொண்டது. இப்போது மெதுவாக என் இருதயம் சுடுகிறது. கொஞ்சம் மூச்சு அடைப்பது போல இருக்கிறது. கண்ணைக் கட்டிக்கொண்டு ஒரே இருட்டாக வருகிறது. அம்மா பாவம், எங்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பார். நாங்கள் போகவில்லை என்றால் துடித்துப்போய் நிச்சயமாக எங்களைத் தேடிவருவார். ஆனால், இன்னும் காணவில்லையே. அவருக்காகத் தான் காத்திருக்கிறேன். அம்மா வந்ததும் தம்பியைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லவேண்டும். அவனுக்கு எதுவுமே ஆகியிருக்காது. அவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போய் என்ன ஆயிற்று என்று ஒருமுறை பார்த்தால் போதும். அவன் எழுந்து விடுவான். அம்மா வரும்வரை நான் உறங்கிவிடக்கூடாது. தம்பிக்காக, நான் உறங்கிவிடவே கூடாது.

தோட்டாக்கள். இடம் - முள்ளிவாய்க்கால். ஒளிப்படம் - க.குமணன்.

இதோ அம்மா வந்துவிட்டாள். அவளின் குரல் கேட்கிறது. ஆம் அது அவள் தான். என் மேல் விழுந்து புரள்வது அவள் தான். பக்கத்திலிருக்கும் தோட்டாக்கோதுகளை கைகளில் எடுத்துப்பார்ப்பது அவள் தான். என் நெஞ்சின் முன் பக்கத்தில் கைவைத்துப்பார்க்கிறாள், எனக்கு தெரிகிறது, அது அவள் தான். சிவப்பு நிறத்தில் இரத்தத்தால் நிறைந்திருப்பது அவள் கை தான். அவள் அழுகிறாள், தெரிகிறது. என்னை போட்டு உலுப்புகிறாள், அதுவும் தெரிகிறது. எழும்பி வரச்சொல்லி பேசுகிறாள், அதுவும் கூட மங்கலாகத் தெரிகிறது. ஆனால், இப்போது என்னால் முடியவில்லை. “அழாதே அம்மா, உனக்கு நான் இருக்கிறேன்” என்று சொல்ல எனக்கு முடியவில்லை. எழும்பி அவள் கண்ணீரை துடைக்க வேண்டும் போல இருக்கிறது. ஆனால் கை நீளவில்லை. சுடுமணலில் கிடக்கும் தம்பியை தூக்கி அணைக்கவேண்டும் போல் இருக்கிறது, ஆனால் உடலில் பலமில்லை. இந்த இக்கட்டான சூழலில் அம்மாவோடு நிற்க வேண்டும் என்று தான் உள்மனம் சொல்கிறது. ஆனால் அப்பா வந்து கூப்பிடுகிறாரே. எனக்குத் தெரியும். இதற்குப்பிறகு அம்மா கத்துவாள், கதறுவாள், கோபப்படுவாள், பொங்கிவெடிப்பாள், ஆர்ப்பாட்டம் செய்வாள், அரற்றுவாள். ஆனாலும், இப்போது எனக்கு வேறு தெரிவில்லை. நான் அப்பாவோடு போகப்போகிறேன்.

ஆம், எனக்கு நித்திரை வருகிறது. ஆழ்ந்த நித்திரை. நித்திய நித்திரை. தூரமாக, மிகத்தூரமாக பயணப்படுகிறேன். எங்கென்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக இவ்வுலகில் இல்லை. மன்னித்துக்கொள் அம்மா, இனி நான் உன்னிடம் இல்லை.

Created By
வேல்விழி Vijayakumar
Appreciate