Loading

யுத்தம் இல்லை; எமது நிலத்தில் எதற்குப் பயிற்சித் தளம்?

Text and photos by Selvaraja Rajasegar

பாணம, சாஸ்த்ரவல பகுதியில் 1998ஆம் ஆண்டு வரை 75 குடும்பங்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அங்கு அந்தக் காலப்பகுதியில் 2 ஏக்கர்களில் அமைந்த விசேட அதிரடிப் படையினரின் முகாம் ஒன்று மாத்திரமே இருந்துள்ளது. போர் தீவிரமாக இடம்பெற்ற காலப்பகுதி அது. கிழக்கில் விசேட அதிரடிப்படையினருக்கான பயிற்சி முகாமொன்று இல்லாத காரணத்தால் முகாமொன்றை நிர்மாணிக்கத் தங்களுக்கு 50 ஏக்கர்கள் தேவைப்படுவதாகவும் மாற்றுக் காணிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் இராணுவம் கோரியிருக்கிறது. போர் தீவிரமாக இடம்பெற்றதாலும், மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் வழங்கப்பட்டதாலும் 75 குடும்பங்களும் அங்கிருந்து வெளியேற சம்மதித்திருக்கிறார்கள். அவர்களுள் 21 வயதான ரத்னமாலியும் மீண்டும் தன்னுடைய நிலத்துக்கு எப்போதாவது திரும்பலாம் என்ற நம்பிக்கையோடு ஒரு குழந்தையுடன் வெளியேறியிருக்கிறார்.

பொத்துவில் – பாணம பிரதான பாதைக்கு அருகாமையில் ஒதுக்கப்பட்டிருந்த மாற்றுக் காணிகளை மக்களோடு சேர்ந்து ரத்னமாலியும் துப்பரவு செய்திருக்கிறார். காணி அளவீட்டாளர் ஒருவரைக் கொண்டு காணிகளையும் அளவீடு செய்வதற்காக பணமும் வழங்கியிருக்கிறார். ஆனால், இன்றுவரை ரத்னமாலி உட்பட சாஸ்த்ரவல மக்களுக்கு மாற்றுக் காணிகளும் வழங்கப்படவில்லை, தங்களுடைய பூர்வீக நிலங்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படவுமில்லை.

விவசாயம் மற்றும் மீன்பிடியில் ஈடுபட்டு வாழ்க்கையைக் கொண்டு நடத்திய மக்கள் அங்கிருந்து வெளியேறிய காலம் முதல் உறவினர் வீடுகளில் மூன்று, நான்கு குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களிடம் காணி அனுமதிப் பத்திரங்கள் இருக்கின்றன. சாஸ்த்ரவல பகுதியில் இருந்தபோது பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகள், வீடுகள் இருந்ததற்கான இடிபாடுகள், அத்திவாரங்கள் போன்றன மக்கள் அங்கிருந்தமைக்கான ஆதாரங்களாக தற்போதும் இருக்கின்றன.

“மஹிந்த ராஜபக்‌ஷ கைப்பற்றிய காணிகளை மீட்டுத்தருவோம், நல்லாட்சியை நிறுவுவதற்கு பங்களியுங்கள்” என்று வாக்கு கேட்ட மைத்தரி - ரணில் கூட்டணியும் அந்த மக்களின் காணிகளைச் சுருட்டிக் கொள்ளவே திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கின்றது.

ரத்னமாலி உட்பட சாஸ்த்ரவல பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த வருடம் (2017) செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி தங்களை பூர்வீக நிலங்களில் குடியேற அனுமதிக்குமாறு கோரி சாஸ்த்ரவல விமானப்படை முகாமுக்கு அருகே தொடர் சத்தியாகிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தார்கள். உடனடியாகவே செயற்பட்ட நல்லாட்சி அரசாங்கம் அரச அதிகாரிகளை அனுப்பி உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் தீர்வொன்றை பெற்றுத்தருவதாகவும் அதுவரை போராட்டத்தைக் கைவிடுமாறும் கோரியிருந்தது. ஆனால், இன்று வரை எந்தவொரு தீர்வும் வழங்கப்படவில்லை.

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சிறிய வீடொன்றில் தனது பெரியம்மாவின் குடும்பத்துடன் தற்போது 3 பிள்ளைகள், கணவருடன் வாழ்ந்துவரும் 41 வயதான ரத்னமாலி, தனது பூர்வீக நிலத்தில் எவ்வாறு வாழ்ந்தார் என்பது குறித்தும், இப்போது நிலமின்றி, சொந்தங்கள் இன்றி, பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் இவ்வாறு தனது கதையைக் கூறுகிறார்.

"நாம் இருந்த பகுதிக்கு மேற்காக எஸ்.டி.எவ். முகாமொன்றை அமைப்பதற்காக எம்மை அங்கிருந்து வெளியேற்றினார்கள். எமக்கு மாற்றுக் காணிகள் வழங்குவோம் என்றும் உறுதியளித்தார்கள். அதிரடிப் படை முகாம் இருந்தபோதிலும் நாங்கள் எமது காணிகளுக்குச் சென்று விவசாயம் செய்யக்கூடிய அளவுக்கு ஜனாதிபதியாக சந்திரிக்கா மெடம் இருந்தபோது அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிபீடமேறிய பின்னர்தான் நிரந்தரமாக எமது காணிகளை இழந்தோம். எஸ்.டி.எவ். பயிற்சி முகாமொன்றை அமைப்பதாகக் கூறி எங்களிடமிருந்து காணிகளைப் பறித்தாலும் அதே 2 ஏக்கர்களில்தான் இன்னும் அவர்களது முகாம் இருக்கிறது. ஏனைய பகுதிகள் – எமது கிராமம் முழுவதும் யானை வேலி அமைத்து யாரும் உள்நுழைய முடியாமல் கடற்படையினர் சுற்றிவளைத்திருக்கிறார்கள்."
"நாம் சாஸ்த்ரவலயில் இருந்தபோது கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது குறைவு. வெங்காயம் வாங்கக்கூட போகமாட்டோம். மிளகாய் தூள், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை வாங்க மட்டும்தான் கடைப்பக்கம் போவோம். ஏனைய அனைத்தையும் பயிரிட்டோம். எங்களுடைய தேவை போக ஏனையவற்றை விற்பனை செய்தோம். கணவர் களப்பில் பிடித்துவரும் மீன்களையும் எங்களுடைய தேவைக்கு எடுத்துக்கொண்டு ஏனையவற்றை விற்றுவிடுவோம்."
"குத்தகைக்கு எடுத்தே கணவர் வயல் வேலை செய்துவருகிறார். இந்த முறை விளைச்சல் நன்றாக இருந்தால் அடுத்த முறை வயலை எங்களுக்குத் தரமாட்டார்கள். அவர்களே பயிர்ச்செய்கையில் ஈடுபடுவார்கள். எமது நிலமாக இருக்கும்போது நாம் பயப்படவேண்டிய அவசியமில்லை. சாஸ்த்ரவலயில் அப்படித்தான் நாங்கள் இருந்தோம். இங்கு எந்த பயிர்ச்செய்கையிலும் ஈடுபட முடியாத நிலை. கொஞ்சம் மழை பெய்தாலும் வீட்டு வாசல்படி வரை மழை நீர் நிறைந்துவிடும். இங்கு நாங்கள் இருப்பதை விட அங்கு நாங்கள் சுதந்திரமாக இருந்தோம்."
"இங்கு நான் பனையோலைகளைக் கொண்டு சில பொருட்களைச் செய்து விற்றுவருகிறேன். அத்தோடு, ஆடைகள் தைத்தும் கொஞ்சம் வருமானத்தை ஈட்டிவருகிறேன். இருந்தபோதிலும், எமது மொத்த செலவையும் கிடைக்கும் வருமானத்தால் சமாளிக்க முடியாமல் உள்ளது. மாதத்துக்கு இரண்டாயிரம், மூவாயிரம் மட்டும்தான் கிடைக்கும். ராகம்வல பகுதியில் நீர்ச்சறுக்கலில் ஈடுபட உல்லாசப் பயணிகள் வருவார்கள். சாஸ்த்ரவல பகுதியில் உள்ள கடற்கரைக்கும் நிறைய உல்லாசப் பயணிகள் வருவார்கள். அது ஒரு பொருளாதார மைத்திய நிலையம் போன்றது. நாங்கள் அங்கு இப்போது இருந்திருந்தால் எனது கைவேலைக்கு நிறைய வருமானம் கிடைத்திருக்கும்."
"பால்மா வாங்குவதற்குக் கூட எங்களிடம் பணம் இருக்காது. கணவருக்கு வேலை இல்லை என்றால் ரொம்பவும் கஷ்டப்படுவோம். ஆடைகள் தைத்து தைத்து கொஞ்சம் சேர்த்துவைத்திருந்த பணத்தைக் கொண்டு பசு மாடொன்றை வாங்கியிருக்கிறேன். இன்னும் சில வாரங்களில் கன்றொன்றை போட்டுவிடும். அதன் பின்னர் பிள்ளைகளுக்குப் பால் கொடுக்கலாம். பிள்ளைகளும் பசு மீது அன்பாக இருக்கிறார்கள். தங்கச்சி தங்கச்சி என்றுதான் கூப்பிடுவார்கள். எங்களுக்காக சேவை செய்துவரும் பசுவை நான் சாகும் வரைப் பார்த்துக்கொள்வேன்."
"இப்போது கூறுகிறார்கள், நாங்கள் இருந்த சாஸ்த்ரவல பகுதியில் தொல்பொருட்கள் இருப்பதாகவும், துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித் தளம் இருப்பதாகவும் நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகள் கூறுகிறார்கள். தொல்பொருட்கள் இருந்தபோதும் நாங்கள் அங்குதான் இருந்தோம். யுத்தம் இடம்பெற்றபோதும் நாங்கள் அங்குதான் இருந்தோம். இப்போது யுத்தமொன்று இல்லாத நிலையில் எதற்கு எமது நிலத்தில் பயிற்சித் தளம்?"

"இங்கு வாழ்வது கஷ்டமாக இருக்கிறது. உயிரனமொன்றை தான் வாழும் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டுசென்று வாழவைப்பது போன்றுதான் இப்போது எமது வாழ்க்கை இருக்கிறது. எமது நிலத்துக்குப் போவதற்கு ஆசையாக இருக்கிறது என்பதை விட கட்டாயம் போகவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கிறோம். இப்போது நாங்கள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்."

Created By
Selvaraja Rajasegar
Appreciate

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.